ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடந்து வரும் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடிவிட்டது. இந்த நீர்வழித்தடம் வழியாகத்தான் வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியா, ஜப்பான், தைவான், தென்கொரியா மற்றும் சீனாவிற்கு கச்சா எண்ணெய் எடுத்து வரும் கப்பல்கள் வரவேண்டும்.
இப்போது இந்த நீர்வழித்தடம் மூடப்பட்டு விட்டதால் வளைகுடா நாடுகளில் இருந்து கப்பல்களில் கச்சா எண்ணெய் எடுத்து வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியா தனக்குத் தேவையான கச்சா எண்ணெய்யில் 88 சதவீதத்தை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து வருகிறது. இதில் 50 சதவீதத்திற்கும் அதிகமான கச்சா எண்ணெய் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகத்தான் கொண்டு வரப்படுகிறது.
எனவே மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வரும் கச்சா எண்ணெய் நின்றுவிட்டால் இந்தியாவில் கச்சா எண்ணெய்க்குத் தட்டுப்பாடு ஏற்படும்.
இதனால் எரிபொருள் விலை ஏற்றம் உட்பட பல்வேறு நெருக்கடி ஏற்படும். ஏற்கனவே சில கண்டெய்கர் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து கச்சா எண்ணெய்யுடன் இந்தியாவிற்கு வந்து கொண்டிருக்கிறது. தற்காலிகமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்படுவதாக இருந்தால் கையிருப்பில் இருக்கும் கச்சா எண்ணெய்யைக் கொண்டு நிலைமையைச் சமாளித்துவிடலாம் என்றும், அதேசமயம் நீண்ட கால அடிப்படையில் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டால் நிலைமை மோசமாகும் என்றும் மத்திய பெட்ரோலிய துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
40 நாட்களுக்குக் கையிருப்பு
தற்போது இந்தியாவிடம் 100 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் கையிருப்பு இருக்கிறது. இது மற்றும் ஏற்கனவே கப்பல்களில் வந்து கொண்டு இருக்கும் கச்சா எண்ணெய்யைக் கொண்டு 40 நாள்களைச் சமாளித்துவிட முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிலைமையைச் சமாளிக்க ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் அளவை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகவுள்ளது. ஆனால் அமெரிக்காவிடம் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதைக் குறைத்துக்கொள்கிறோம் என்று இந்தியா உத்தரவாதம் கொடுத்து இருக்கிறது.
குறிப்பாக, ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் குறைத்து, அமெரிக்கா அல்லது வெனிசுலாவிலிருந்து வாங்குவதன் மூலம் அதை ஈடுசெய்ய 25 சதவீத ‘அபராத’ வரியைத் தள்ளுபடி செய்ய வாஷிங்டன் ஒப்புக்கொண்டது.
இதன் மூலம் இந்தியப் பொருட்களுக்கான இறக்குமதி வரி 50 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகக் குறையும். எனவே ரஷ்யாவில் இருந்து கூடுதல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தாக இருந்தால் அதற்கு அமெரிக்காவிடம் அனுமதி வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் நிலைமையைச் சமாளிக்க இந்திய ஆயில் கம்பெனிகள் தொழிற்சாலைகளின் தேவைகளுக்காக வழங்கும் இயற்கை எரிவாயுவின் அளவைக் குறைத்துவிட்டன. கத்தாரில் இருந்து இந்தியாவிற்கு வரும் எல்.பி.ஜி நின்றுவிட்டது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் போர் நான்கு வாரங்கள் வரை நீடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
எனவே அதற்கு தக்கபடி எரிபொருள் பயன்பாட்டைத் திட்டமிட ஆயில் கம்பெனிகள் முடிவு செய்துள்ளன. சீனா, தன்னிடம் இருக்கும் கச்சா எண்ணெய்யைக் கொண்டு 6 மாதங்களுக்குச் சமாளிக்க முடியும். உலகில் அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்து இந்தியாதான் அதிக அளவில் எரிபொருள் பயன்படுத்துகிறது. ஆனால் இந்தியாவில் எரிபொருள் சேமிப்புக்கு நீண்ட கால திட்டம் இல்லாமல் இருக்கிறது.
தைவானில் உள்ள தொழிற்சாலைகளில் உலகின் பெரும்பாலான மேம்பட்ட செமிகண்டக்டர்களை உற்பத்தி செய்யப்படுகின்றன. அவை ஸ்மார்ட்போன்கள், மின்சார வாகனங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு அமைப்புகளில் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த வசதிகள் நிலையான மின்சார விநியோகங்களை நம்பியுள்ளன. ஜெனரேட்டர்களை நீண்ட கால தேவைக்குப் பயன்படுத்த முடியாது. எனவே கச்சா எண்ணெய் வரத்து குறைந்தால் தைவானும் கடுமையாகப் பாதிக்கப்படும்.




