மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள வணிக கட்டிடங்கள் நிறுவனங்கள், மண்டபங்கள், விடுதிகள், மருத்துவமனைகள் மற்றும் வீடுகளுக்கான சொத்து வரி வசூல் தொடர்பாக 2022 முதல் 2024 ஜூலை 31 வரையிலான காலக்கட்டத்தில் ஆய்வு நடத்தியபோது அதிகாரிகளின் பாஸ்வேர்டுகளை முறைகேடாகப் பயன்படுத்தி வரி முறைகேடு செய்தது ஆய்வில் தெரியவந்தது.
இந்த வழக்கானது மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த முறைகேடு எதிரொலியாக மதுரை மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் மற்றும் நகரமைப்புக் குழு, வரிவிதிப்புக் குழுத் தலைவர்கள் ஆகிய 7 பேர் தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர்.
இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உயர்நீதிமன்ற உத்தரவுப்படி டிஐஜி அபிநவ்குமார் தலைமையிலான சிறப்புப் படை விசாரணை நடத்தி வந்தனர்.
இதையடுத்து மாநகராட்சி வரி முறைகேடு வழக்கில் மேயரின் கணவர் பொன்.வசந்த், மாநகராட்சி வரிவிதிப்பு குழுத் தலைவர் விஜயலட்சுமியின் கணவர் கண்ணன், ஒப்பந்த ஊழியர்கள், உதவி ஆணையாளர் என மொத்தமாக 26 பேர் கைது செய்யப்பட்டனர்
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் முன்னாள் மண்டலத்தலைவர் புவனேஸ்வரியின் கணவர் சரவணனைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்துச் சென்றனர்
காலை 8 மணி முதல் 7 மணி நேரமாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக சரவணனை அழைத்துச் சென்றபோது வாகனத்தில் ஏற்றும்போது திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.




