புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 10-ம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. அதற்கு மறுநாள் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்ற நிலையில், நேற்று 12-ம் தேதி நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி 2025-26-ம் ஆண்டுக்கான ரூ.13,600 கோடிக்கான பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், “2025-26 நிதியாண்டின் வரவு செலவு திட்ட மதிப்பீடு ரூ.13,600 கோடியாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
இதில் மாநிலத்தின் சொந்த வருவாய் ரூ.7,641.40 கோடியாகும். மாநில பேரிடர் நிவாரண நிதியையும் சேர்த்து மத்திய அரசின் நிதி உதவி ரூ.3,432.18 கோடியாகும். நிதிப் பற்றாக்குறையை ஈடுசெய்யும் பொருட்டு ரூ.2,101.42 கோடி கடன் வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியிருக்கிறது.
அரசின் நிதி ஆதாரங்களில் பெரும்பகுதி அரசு ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம், கடன் மற்றும் வட்டி செலுத்துதல் உள்ளிட்டவைக்காக செலவிடப்படுகிறது. அதன்படி வரவு செலவு திட்ட மதிப்பீடான ரூ.13,600 கோடியில் ரூ.2,650 கோடி சம்பளங்களுக்கும், ரூ.1,566 கோடி ஓய்வூதியங்களுக்கும், ரூ.1,867 கோடி கடன் மற்றும் வட்டி செலுத்துவதற்கும், ரூ.2,546 கோடி மின்சாரம் வாங்குவதற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
மேலும் அரசின் முக்கிய திட்டங்களான இலவச அரிசி, விவசாயிகளுக்கான மானியம் உள்ளிட்ட நலத்திட்டங்களுக்கு ரூ. 2,110 கோடியும், அரசு உதவி பெறும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு ரூ.523 கோடியும், பொதுத்துறை மற்றும் கூட்டுறவு நிறுவனங்களுக்கு மானியக் கொடையாக ரூ.1,148 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது” என்றார்.
தொடர்ந்து அவர் தாக்கல் செய்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்…
# 21 வயது முடிந்து 51 வயதுக்குள் இருக்கும், அரசின் எந்தவிதமான உதவித்தொகையும் பெறாத வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிக்கும் அனைத்து குடும்பத் தலைவிக்கும் மாதம் தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது. இந்த நிதியாண்டு முதல் அது ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
# வருவாய், உள்துறை, கல்வி, வேளாண்துறை, சுகாதாரம், மின்சாரம், கலை பண்பாடு உட்பட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள துணை தாசில்தார், கிராம நிர்வாக அதிகாரி, துணை காவல் ஆய்வாளர், கிராம உதவியாளர், கடலோர ஊர்க்காவல் படையினர், விரிவுரையாளர், பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர், வேளாண் அதிகாரி, இளநிலை எழுத்தர், மேல்நிலை எழுத்தர், இளநிலை நூலக தகவல் உதவியாளர், இளநிலை பொறியாளர், சுகாதார உதவியாளர், மகப்பேறு உதவியாளர், ECG டெக்னீஷியன் உட்பட 2,298 பணியிடங்கள் நடப்பு நிதியாண்டில் நிரப்பப்படும்.

# தாய் அல்லது தந்தையை இழந்து வாடும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் நலன் கருதி அவர்களுக்கு வழங்கப்படும் மாத உதவித்தொகை உயர்த்தப்படுகிறது. அதன்படி 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ரூ.2,000, 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை ரூ.3,000, 11-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ரூ.4,000 வழங்கப்படும்.
# அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மூலம் ஓய்வூதியம் பெறும் அனைத்து பிரிவினருக்கும் ரூ.500 உயர்த்தி வழங்கப்படும்.
# ரோடியர், சுதேசி, பாரதி, பாப்ஸ்கோ, பாசிக் ஆகியவற்றில் நிலுவையில் உள்ள சம்பளம், கடன்களை திருப்பி செலுத்த நடப்பு நிதியாண்டில் ரூ.88 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
# அரசு சார்பு மருத்துவ கல்வி நிறுவனங்கள், வேளாண் கல்லுாரி, கால்நடை கல்லுாரி, அரசு உதவி பெறும் உயர், மேல்நிலை பள்ளி நிலுவை சம்பளத்துக்கு கூடுதலாக ரூ.45 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
# 2022-23ஆம் கல்வியாண்டில் விடுபட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் மாணவர்களுக்கும். 2025-26 ஆண்டு பயிலும் மாணவர்களுக்கும் வரும் கல்வியாண்டில் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்.
# பள்ளிகளில் கற்றல் திறனை மேம்படுத்த தொடுதிறன் வசதி கொண்ட ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும். கற்றல் மதிப்பாய்வு மையம் வரும் கல்வி ஆண்டு முதல் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்தினை அரசு பள்ளி மாணவர்களுக்கு திறம்பட கற்பித்திட ஆசிரியர்களுக்கு போதிய பயிற்சிகள் தொடர்ந்து வழங்கப்படும்.

# அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மதிய உணவு திட்டத்தின்கீழ் தற்போது வாரம் 3 நாட்களுக்கு மட்டும் முட்டை வழங்கப்பட்டு வருகிறது. வரும் கல்வியாண்டு முதல் அனைத்து பள்ளி நாட்களிலும் மாணவர்களுக்கு மதிய உணவுடன் முட்டை வழங்கப்படும்.
# தற்போது சென்டாக் மூலம் தேர்வு செய்யப்பட்டு மருத்துவம், பொறியியல் மற்றும் செவிலியர் பாடப்பிரிவுகளில் பயிலும் மாணவர்களுக்கு பெருந்தலைவர் காமராஜர் நிதி உதவித் திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. வரும் கல்வி ஆண்டு முதல் அரசு ஒதுக்கீட்டின்கீழ், சென்டாக் மூலம் சேர்க்கை பெறும் அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் நிதி உதவி வழங்கப்படும்.
# இளங்கலை நீட் பாடப்பிரிவுகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10% உள் ஒதுக்கீட்டின்கீழ் சேர்க்கை பெறும் மாணவர்களுக்கு பெருந்தலைவர் காமராஜர் நிதி உதவித் திட்டத்தின்கீழ் 100% சதவிகிதம் கட்டண விலக்கு அளிக்கப்படும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் நிதிச்சுமையை குறைக்கும் பொருட்டு 100% சதவிகிதம் கல்விக்கட்டணம் விலக்கு அளிக்கப்படும்.
# 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து இளநிலைக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மாதம் தோறும் ரூ.1,000 என மூன்று ஆண்டுகளுக்கு ஊக்குவிப்புத் தொகையாக இந்தக் கல்வியாண்டு முதல் வழங்கப்படும்.
# இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் பட்டமேற்படிப்பு மையத்தில் அறுவை சிகிச்சைக்கு பிந்தைய வார்டுடன் கூடிய உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை கூடம் தொடங்கப்படும்.
# செயற்கை முறை கருத்தரித்தல் மற்றும் லேப்ரோஸ்கோப் அறுவை சிகிச்சைக்கான நவீன உட்கட்டமைப்புகள் தொடங்கப்படும்.
# மேட்டுப்பாளையம் ஆரம்ப சுகாதார மையத்தில் துணை பல் மருத்துவப் பிரிவு தொடங்கப்படும்.

# பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உட்கட்டமைப்பு இயக்கத்தின் கீழ் ரூ.92 கோடியில் புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை, பட்டமேற்படிப்பு மையம், புதுச்சேரி இந்கிரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி, காரைக்கால் அரசு பொது மருத்துவமனை ஆகியவற்றில் அதி தீவிர சிகிச்சை பிரிவு தொடங்கப்படும்.
# ராஜீவ் காந்தி சதுக்கம் முதல் இந்திரா காந்தி சதுக்கம் வரை ஒற்றை அடுக்கு மேம்பாலம் கட்ட ரூ.840 கோடி மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, மத்திய நெடுஞ்சாலை அமைச்சகத்தின் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது. புதுவை கவர்னர் மாளிகையை பழைமை மாறாமல் புனரமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
# விமான நிலைய ஓடுதளத்தை விரிவாக்கம் செய்ய நிலம் கையகப்படுத்த ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மின் வாகனங்களுக்கு சாலை வரியில் 50% சதவிகித சலுகை வழங்கப்படும். சாலை போக்குவரத்து கழகத்தின் மூன்றில் இரண்டு பங்கு பேருந்துகள் மின்சார பேருந்துகளாக மாற்றப்படும். சாலை போக்குவரத்து கழகம் மூலம் நீண்ட துார வழித்தடங்களுக்கு 10 மிதவை பேருந்துகள் இயக்கப்படும். காரைக்காலுக்கு 10, மாகே, ஏனாமிற்கு தலா 5 என மின்சார பேருந்துகள் தனியார் பங்களிப்புடன் இயக்கப்படும். டெம்போக்களுக்கு மாற்றவாக கியாஸ் மூலம் இயங்கும் வாகனங்கள் வாங்க 50% சதவிகித மானியம் வழங்கப்படும்.

# 30 வயதை கடந்த திருமணம் ஆகாத, கணவரை இழந்த, வேலையற்ற ஆதிதிராவிட, பழங்குடியின பெண்களுக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை வழங்கப்படும். முதியோர், விதவை, முதிர்கன்னி, கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு தற்போது வழங்கப்படும் ஓய்வூதியத்தில் ரூ.500 உயர்த்தி வழங்கப்படும். தாய், தந்தையை இழந்த பிள்ளைகளுக்கு 18 வயது முடியும் வரை மாதம் ரூ.5,000 வழங்கப்படும்.
# மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 5-ம் வகுப்பு வரை ஆண்டுக்கு ரூ.1,000, 5 முதல் 8-ம் வகுப்பு வரை ரூ.2,000, 8 முதல் 12-ம் வகுப்பு வரை ரூ.3,400 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்தொகை முறையே ரூ.4,000, ரூ.5,000, ரூ.6,400 ஆக உயர்த்தப்படும்.