கோவை விமான நிலையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது பேசிய அவர், “முதலமைச்சர் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பேணி காக்கவும், போதை பொருளை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகிறார். புதிய தலைமைச் செயலகம் குறித்து ஒவ்வொருவரும் ஒரு கருத்தை சொல்கிறார்கள். தி.மு.க ஆட்சியில் இருக்கும் பொழுது புதிய தலைமைச் செயலகத்தை அமைத்து, அனைத்து அலுவலகமும் கொண்டு வர முயற்சிக்கபட்டது. அது தற்போது சிறந்த மருத்துவமனையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ராணி மேரி கல்லூரியில் தலைமைச் செயலகத்தை கொண்டு வர ஜெயலலிதா முயற்சி செய்தார்கள்.
ஒவ்வொரு முதலமைச்சரும் தலைமை செயலகம் கொண்டு வர மும்மரமாக கவனம் செலுத்தி, சிறந்த தலைமைச் செயலகத்தை கொண்டு வர முயற்சிக்கின்றனர். கர்நாடக மாநிலத்தில் கட்டப்பட்டுள்ள அன்றைய சட்டமன்றம் இன்றும் வரலாற்றை படைத்து கொண்டு இருக்கிறது. சட்டமன்றத்துக்கு அவ்வளவு செலவாகிறது என்பது எல்லாம், இன்றைய சூழ்நிலையில் தேவைப்படுகின்ற ஒன்று. 110 விதியின் கீழ் அறிவிப்புகள் வெளியிடுவது நடைமுறையில் இருப்பது. முதலமைச்சர் சிலவற்றை 110 விதியில் அறிவிக்கிறார். மானிய கோரிக்கை முடிந்த பிறகு அறிவிக்கிறார். இதில் தவறு எதுவும் கிடையாது” என்றார்.
த.வெ.க ஆட்சி ஐந்து ஆண்டு நிலைக்காது என எடப்பாடி பழனிச்சாமி சொல்லி இருப்பது குறித்த கேள்விக்கு, ”அப்படி சொல்லிக் கொண்டு இருந்த காரணத்தால் தான் மூன்றாவது இடத்திற்கு சென்று இருக்கிறார்கள்” என பதிலளித்தார்.
சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் சொல்வது இல்லை என்ற கேள்விக்கு, ”இது நடைமுறையில் இருக்கும் ஒன்று. எல்லா கேள்விக்கும் முதல்வர் பதில் சொல்ல வேண்டியது இல்லை. முதல்வராக ஸ்டாலின் இருக்கும் பொழுது அன்றைய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தீயணைப்பு துறை தொடர்பான விஷயங்களை பேசினார். இது வரலாற்றில் இருக்கிறது” என பதிலளித்தார்.
பிரதமர் வேட்பாளராக விஜய் த.வெ.க-வினரால் முன் நிறுத்தப்படுகிறாரா என்ற கேள்விக்கு, “எங்களைப் பொறுத்தவரை, தலைவரை பொறுத்த வரை தெளிவாக இருக்கிறார். தமிழகம் அவரை நம்பி வாக்களித்து இருக்கிறது. இரண்டு ஆண்டுகளில் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறோம். இரண்டு மாதத்தில் புதிய சின்னம் பெற்று வெற்றி பெற்றுள்ளோம். தமிழ்நாட்டு மக்களை காப்பதற்காக, எந்தெந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமோ அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு, மக்கள் விரும்பு திட்டங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். மேற்கொண்டு கேட்டு, என்னை சிக்கலில் விட்டு விடாதீர்கள்” என பதிலளித்தார்.




