புதுக்கோட்டையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பேசிய அவர்,
“தமிழ்நாடு அரசு நடத்தும் ஸ்டேட் போர்டு பள்ளிகளில் இருமொழிக் கொள்கையே போதும். நானும், என் மகளும் இருமொழிக் கொள்கையில் தான் படித்தோம். என்னை பொறுத்தவரை மூன்றாவது மொழி கட்டாய பாடமாக்குவது தமிழ்நாட்டிற்கு தேவையில்லாதது. வடநாட்டில் இருந்து தமிழ்நாட்டிற்கு வேலைக்கு வருபவர்கள் முன்பாகவே ஆத்திச்சூடியையும், திருக்குறளையும் படித்து விட்டு வருவது கிடையாது. இங்கு வந்து தேவைக்கு ஏற்றார்போல் மொழியை பழகிக் கொள்கின்றனர். நாமும் அவர்களோடு பழகிக் கொள்கிறோம். அவர்களுக்கு மொழி தெரியவில்லை என்பதால் அவர்களை விரட்டியடிப்பதில்லை. அதேபோல், தமிழ்நாட்டில் உள்ளவர்கள் வட இந்தியாவிற்கு வேலைக்குச் சென்றால் அவரவர் தேவைக்கேற்ப அங்கு உள்ள மொழிகளை கற்றுக் கொள்வார்கள். கட்டாய பாடமாக மூன்றாவது மொழியை கொண்டு வருவதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழ்நாடு முதலமைச்சரின் நிலைப்பாட்டை நான் முழுமையாக ஆதரிக்கின்றேன்.
மக்கள்தொகை அடிப்படையில் 543 தொகுதிகளையே மறுசீரமைப்பு செய்தார்கள் என்றால் தமிழ்நாட்டிற்கு இருக்கும் தொகுதிகள் குறையும். ஏனென்றால், மக்கள்தொகையை தமிழ்நாடு கட்டுப்படுத்தி உள்ளது….நாம் இருவர் நமக்கு இருவர். நாம் இருவர் நமக்கு ஒருவர் என்று கூறி. அதை 848 நாடாளுமன்றத் தொகுதிகளாக அதிகரித்தால் அதுவும் தமிழ்நாட்டிற்கு பிரச்னை தான். ஏற்கனவே, 543 பேர் இருக்கும் சபையில் பேச முடிவதில்லை. தங்களது கருத்தை பதிவு செய்ய முடியவில்லை. நேரம் கிடைப்பதில்லை. 848 என்று வந்துவிட்டது என்றால் கருத்தை பதிவு செய்யவே முடியாது. 848 என்று உயர்த்தினால் வட மாநிலங்களில் தமிழ்நாட்டை விட அதிகமாக இடங்களை கூட்டுவார்கள்.
அப்படி என்றால் வட மாநிலங்களில் மட்டும் வெற்றி பெற்று ஒரு தேர்தலில் வெற்றி வாய்ப்பை பெறும் சூழல் வந்துவிடும். என்னைப் பொறுத்தவரை 848 என்று கூட்டினாலும் இதே 543 என்று இருந்தாலும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கணக்கை மாற்றினார்கள் என்றால், தமிழ்நாட்டிற்கு பாதிப்பு தான். என்னைப் பொறுத்தவரை தற்பொழுது இருக்கும் நிலையே இருக்க வேண்டியதுதான். தேவையில்லாமல் நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு செய்தால் தென்னிந்தியாவின் பிரதிநிதித்துவம் குறையும்.
எந்த ஒரு அரசியல் கட்சியையும், எந்த ஒரு கன்சல்டன்சியும் வெற்றியடைய வைக்க முடியாது. அப்படி, ஒரு கன்சல்டன்ட் ஒரு கட்சியை வெற்றியடைய வைக்க முடியும் என்றால் பிரசாந்த் கிஷோரே ஒரு கட்சி வைத்துள்ளார். முதலில், அந்த கட்சியை வெற்றியடைய வைக்க வேண்டும். அரசியல் ரீதியாகத்தான் வெற்றி தோல்வி நிர்ணயம் ஆகிறதே தவிர யார் ஆலோசகராக வருகிறார்கள் என்பதில் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படாது. பாசிசம் பாயசம் என்று பேசுவது அரசியலா?. இதுபோன்ற பஞ்ச் டயலாக்குக்கு எல்லாம் விளக்கம் அளிக்க முடியாது. அரசியல் என்பது ஒரு சீரியஸான விஷயம். ஒரு நிலைப்பாட்டை சொல்ல வேண்டும் என்றால், எந்தெந்த விஷயத்தில் ஒத்துப் போகிறீர்கள்.. எந்தெந்த விஷயத்திற்கு மாறுபடுகிறீர்கள்…மாறுபடுகிறீர்கள் என்றால் ஏன் மாறுபடுகிறீர்கள். ஆட்சிக்கு வந்தால் தற்போது இருப்பதில் என்ன மாறுதலாக செய்வீர்கள். உள்ளிட்டவற்றை எடுத்து சொல்லி தான் மக்களை சந்திக்க வேண்டுமே தவிர பஞ்ச் டயலாக்குகளை வைத்து நிச்சயம எடைபோட முடியாது. இது, மேடைக்கும், மீம்ஸ் போடுவதற்கும் வேண்டுமென்றால் நன்றாக இருக்கும். ஹைட்ரோ கார்பன் எங்கே எடுத்தாலும் அப்பகுதியில் உள்ள மக்களின் ஒப்புதலை பெற்று தான் எடுக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் தான் இருக்க வேண்டும். அமெரிக்க அதிபர், இஸ்ரேல் அதிபர் இடையே நடந்த வாக்குவாதத்தைக் கண்டு உலகமே அதிர்ச்சியில் இருக்கிறது. இந்த திசையை நோக்கி தான் உலகம் செல்லுமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. இத்தகைய தலைமை அமெரிக்காவில் இருக்கும் பொழுது இவ்வளவு நாட்களாக தங்களது உரிமைக்காக போராடிய நாட்டை திடீரென்று கைவிடுவது கண்டு அதிர்ச்சி அடைகிறேன்” என்றார்.