“சட்டமன்றத்தில் அப்பாவைக் காணோம் எனத் தேடுபவர்களின் ஆட்சி நடக்கிறது. வீட்டில் போய் அம்மாவிடம் கேட்டால்தானே அப்பா யார் என்று சொல்வார்? சட்டமன்றத்தில் தேடினால் எப்படி?” என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியது, சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.
நயினார் நாகேந்திரன் பேச்சுக்குக் கண்டனங்கள் வலுத்த நிலையில், அவர் தன் பேச்சுக்கு விளக்கம் அளித்திருந்தார். அதில், “என் பேச்சைத் திரித்து சித்தரித்து, அரசியல் ஆதாயம் தேட நினைப்பவர்களுக்கு நான் தெரிவிப்பது என்னவென்றால், எந்தவிதமான உள்நோக்கத்துடனும் யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை. தாய் மீதும், தாய் நாட்டின் மீதும், தாய்மொழி மீதும் மிகுந்த அக்கறை கொண்டவன் நான்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், பா.ஜ.க-வின் துணைத் தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான நடிகை குஷ்பு, “பாஜக மாநிலத் தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்கள், தமிழ்நாட்டின் முதலமைச்சரின் தாயாரைப் பற்றிப் பேசிய முரட்டுத்தனமான கருத்து அருவருக்கத்தக்கது. இதுபோன்ற பேச்சுக்களை எங்குமே ஏற்றுக்கொள்ள முடியாது.
நமது பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் எப்போதும் பெண்களை உயர்வாக மதிக்க வேண்டும் என்றுதான் கூறுவார். ஆனால், இந்திப் பேச்சு மிகவும் தரம் தாழ்ந்ததாக உள்ளது.
பெண்களை அவமதிப்பதை நான் எப்போதுமே எதிர்ப்பவள். இன்று இதைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்துள்ளேன். அரசை எதிர்த்து கேள்வி கேளுங்கள், மக்களுக்காகக் குரல் கொடுங்கள், ஆனால் ஒரு பெண்ணை மையமாக வைத்துத் பேசாதீர்கள். அரசியலில் பெண்கள் பகடைக்காய்கள் அல்ல.
ஒவ்வொரு கட்சியினரும், ஆண்களும் பெண்களை அவமதிப்பதற்கு முன்பு யோசிக்க வேண்டும். நீங்கள் இந்த உலகத்திற்கு வரக் காரணமே ஒரு பெண்தான், ஒரு தாய்தான்.
ஒரு தாய்க்குச் செய்யப்பட்ட இந்த அவமானம் மிகவும் வேதனை அளிக்கிறது.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.




