தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக செயல்பட்டிருப்பதால் அவர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. குறிப்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த விவகாரம் குறித்து தீவிரமாகப் பேசிவருகிறார். தமிழ்நாட்டின் காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கூட, “தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் நிழலாகவே செயல்படுகிறார். அவரை பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும்.” எனக் காட்டமாக விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜ் மோகன், “தேர்தல் ஆணையர் மாற்றம் தொடர்பான விவகாரத்தில், வெறும் தனிநபர் ஒருவரை மாற்றுவதால் மட்டும் எந்தப் பயனும் விளையாது என்பதே தமிழக வெற்றித் கழகத்தின் நிலைப்பாடாகும். இதுபோன்ற தனிநபர் மாற்றப் போராட்டங்கள் மூலம் உண்மையான பிரச்னையிலிருந்து மக்களைத் திசைதிருப்பவே ஆளும்கட்சியினர் முயல்கின்றனர். இத்தகைய திசைதிருப்பல் அரசியலுக்குத் தவெக ஒருபோதும் இணங்காது.
நாட்டின் தேர்தல் முறையில் நியாயமான மற்றும் சுதந்திரமான வாக்குப்பதிவு நடைபெற வேண்டுமெனில், SIR என்ற தேர்தல் நடைமுறையில் மிகப்பெரிய சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும். ஏனெனில், தற்போதைய ஒட்டுமொத்த எஸ்.ஐ.ஆர் செயல்முறையுமே ஒரு மிகப்பெரிய மோசடியாகவே அமைந்திருக்கிறது.
ஆட்சி அதிகாரத்திற்கு வருவதற்கு முன்பாகவே தவெக தலைவர் இதுகுறித்துத் தெளிவான அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். அன்றும் சரி, இன்றும் சரி, என்றும் சரி SIR நடைமுறையைத் தமிழக வெற்றித் கழகம் தீவிரமாக எதிர்க்கிறது. தொடர்ந்து எதிர்த்துக் கொண்டே இருக்கும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை.” என்றார்.




