2026 சட்டமன்றத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தடபுடலாக தயாராகி கொண்டிருக்கின்றன.
பேரணி, பிரசாரம், கூட்டணிப் பேச்சுவார்த்தை, தேர்தல் வாக்குறுதி என கட்சிகள் தீவிர களப்பணியில் இறங்கி இருக்கும் சூழலில், திமுக தனது தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை வரும் 22-ம் தேதி ஆரம்பிக்க இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.
தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை
தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையைப் பொறுத்தவரை 2021 தேர்தலை விட 2026 தேர்தல் திமுக-விற்கு ஒரு பெரிய சவாலாகத்தான் இருக்கும்.
2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக தனது கூட்டணிக் கட்சிகளை லாவகமாகக் கையாண்டு, அதிக இடங்களில் போட்டியிட்டது.
173 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக, காங்கிரஸிற்கு 25 இடங்களைக் கொடுத்து பிற கூட்டணிக் கட்சிகளுக்கு 36 தொகுதிகள் ஒதுக்கியது.
2021- ல் திமுக…
அந்தத் தேர்தலில் 234 தொகுதிகளில் 159 இடங்களை திமுக கூட்டணி வென்று ஆட்சி அமைத்தது. குறிப்பாக திமுக 133 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையை நிரூபித்திருந்தது.
ஆனால் இந்த முறை திமுக கூட்டணியில் இடம் பெற விரும்பும் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.

கூட்டணிக்குள் நுழைந்த தேமுதிக
குறிப்பாக 2026 தேர்தலுக்காக தேமுதிக, திமுக கூட்டணிக்குள் அதிகாரபூர்வமாக நுழைந்திருக்கிறது.
இது திமுக-விற்கு ஒரு பக்கம் சாதகமாக இருந்தாலும், தொகுதிப் பங்கீட்டில் திமுக-விற்கு பல முனைகளில் செக் வைப்பதாகவே அமைந்திருக்கிறது.
கூட்டணிக்கு 50 முதல் 60!
தொகுதிப் பங்கீட்டில் திமுக-விற்கு இருக்கும் சிக்கல் என்ன? என்பது குறித்து மூத்தப் பத்திரிகையாளர் தராசு ஷ்யாமைத் தொடர்புகொண்டு பேசினோம்.
“தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க விரும்பும் எந்தக் கட்சியும் குறைந்தது 170 முதல் 180 இடங்களில் போட்டியிட வேண்டும்.
அப்படி என்றால் கூட்டணிக் கட்சிகள் அனைத்திற்கும் கொடுக்க 50 முதல் 60 இடங்கள்தான் இருக்கின்றன.

ஆறு இடங்கள்…
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சித் தொடர்வதாக வைத்துக் கொண்டால் அதற்கு 25 இடங்கள் குறைந்தது கொடுக்க வேண்டும்.
இப்போது தேமுதிக சேர்ந்துள்ளது. அதற்கு குறைந்தது ஆறு இடங்கள் கொடுக்க வேண்டும்.
ஏற்கெனவே ஆறு இடங்கள் பெற்றுள்ள கட்சிகள், அதிக இடங்களை எதிர்பார்க்கும்.
திமுக கூட்டணியில் ஹவுஸ்ஃபுல்!
இப்போது ஓ.பி.எஸ் திமுக-வில் சேர்வதாக அல்லது கூட்டணியில் இடம் பெறுவதாகத் தெரிகிறது.
ஏற்கெனவே அதிமுக-விலிருந்து போனவர்கள் திமுக-வில் இடம் எதிர்பார்ப்பார்கள்.
சுருக்கமாகச் சொல்லப்போனால் திமுக கூட்டணியில் ஹவுஸ்ஃபுல். அனைவரும் மகிழ்ச்சி அடையும் வண்ணம் பங்கீடு செய்வது மிகவும் கடினம்.

பெரிய சவால்
சொந்தக் கட்சிக்காரர்கள் எதிர்பார்ப்பும் இருக்கிறது. சிலருக்கு இதயத்தில் இடம் கொடுத்தால் மட்டும்தான் இடப் பங்கீடு சாத்தியம்.
திமுக கூட்டணியில் இருக்கும் பெரிய சவால் இதுதான்” என்றார்.




