பெருநகர மாநகராட்சி பூங்கா
சென்னை, தரமணி அடுத்த கானகம் நேரு வீதியில் உள்ளது பெருநகர மாநகராட்சி பூங்கா மற்றும் சிறுவர் விளையாட்டுத் திடல்.
காலை 5 மணி முதல் இரவு 9 மணிவரை திறந்திருப்பதாகத் தகவல் பலகையில் தெரிவிக்கப்பட்டுள்ள இப்பூங்காவில், முதன்மையான வாயில் கதவுகளை நிரந்தரமாகப் பூட்டி வைத்துள்ளனர். பூங்காவுக்கு வரும் குழந்தைகளும், பொதுமக்களும் பக்கவாட்டில் உள்ள சிறிய வாயிலைப் பயன்படுத்தியே உள்ளே செல்கின்றனர்.
முதன்மையான பெரிய வாயில் நிரந்தரமாக மூடி வைக்கப்பட்டுள்ளதால், வாயிலில் உள்ள முகப்பு பகுதி, அருகாமையில் குடியிருப்போரின் இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமாகவும்… சில நேரங்களில் ஆடு மாடுகளைக் கட்டி வைக்கவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
வாயில் கதவுகள் நிரந்தரமாக மூடியபடி
வாயில் கதவுகள் நிரந்தரமாக மூடி வைக்கப்பட்டுள்ளதால், அருகாமையில் உள்ளவர்கள் இந்த இடத்தைக் குப்பை கொட்டும் இடமாகவும் பயன்படுத்துவதால், இப்பகுதியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்குக் கூடுதல் சுமையாகி விடுகிறது . வெவ்வேறு தினங்களில் நாம் இப்பூங்காவிற்குச் சென்றபோது , மெயின் கேட் மூடப்பட்டு எதிரில் வாகனங்கள் நிறுத்தி வைத்திருப்பதைக் கண்கூடாகப் பார்க்க முடிந்தது.

அதேபோல் பூங்காவின் உள்ளே உள்ள பூப்பந்து , இறகுப் பந்து போன்ற விளையாட்டிற்கான பகுதியில் விளையாட்டிற்கு ஏதுவான வலைகள் இல்லாமல், வெறும் இரும்பு தூண்கள் மட்டுமே இருக்கின்றன. சிறுவர்கள் விளையாடும் ஊஞ்சல்களில் ஒன்று பழுதடைந்து ஊஞ்சலாடிக் கொண்டிருக்கிறது.
தண்ணீர் வசதிக்காக எப்போதோ அமைக்கப்பட்ட அடி பம்பு பழுதாகி பலகாலம் ஆனதால், அதைப் பூந்தொட்டி தாங்கிகளாக அமைக்க முயன்றிருக்கிறார்கள். தற்போது அதுவும் பழுதடைந்து பாதி நிலையில் உள்ளதால், அருகில் செல்வோரைப் பதம் பார்க்கும் வகையில் ஆபத்தான நிலையில் உள்ளது.
இப்பூங்காவில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் சிலரிடம் பேசினோம். “இப்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்படும்போதெல்லாம், பூங்காவின் உட்புறமும் கழிவு நீர் வந்து விடுகிறது. அது போன்ற நேரங்களில் கழிவுநீரைக் கடந்தும் மிதித்துக் கொண்டும் நடக்க வேண்டியுள்ளது .. பராமரிப்பும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை” என்று குறைபட்டுக் கொண்டார்கள் .





மாமன்ற உறுப்பினர் விளக்கம்
இது குறித்து சம்பந்தப்பட்ட பகுதியின்( வார்டு 178 ) மாமன்ற உறுப்பினர் பாஸ்கரனிடம் தொடர் முயற்சிக்குப் பிறகு பேசினோம்…
“நீங்க சொல்ற மாதிரி இதுவரைக்கும் எந்த புகாரும் யாரும் என்கிட்டே சொல்லலை. இருந்தாலும் கேட்டை ஏன் பூட்டி வைத்திருக்கிறார்கள் என்று விசாரிக்கிறேன். விளையாட்டுத் திடல் வலை சம்பந்தமாக டெண்டர் விட்டு வாங்கணுன்னா ரொம்ப லேட்டா ஆகும். யார் கிட்டையாவது ஸ்பான்ஸர் வாங்கி ஏற்பாடு செய்கிறேன். நீங்க சொல்ற குறைகளை நிவர்த்தி செய்ய சொல்றேன். இந்தக் கழிவு நீர் சம்பந்தமாக இதுவரைக்கும் யாரும் என்கிட்டே புகார் சொல்லவில்லை. அது குறித்தும் விசாரிக்கிறேன்” என்றார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
