நடிகர் தனுஷ் தமிழக எழுச்சிக் கழகம் என புதிய கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. சில ஊடகங்களில் வெளியான இந்த செய்தி இணையத்தில் பேசுபொருளாகியிருக்கிறது.
இது சம்பந்தமாக தனுஷ் ரசிகர் மன்றத்தின் முக்கிய நிர்வாகிகள் சிலரிடம் பேச்சுக் கொடுத்தோம். “அப்படி புதிதாக எந்தக் கட்சியையும் எங்கள் சார்பில் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யவில்லை.
தலைவர் இப்படியான முக்கிய முடிவுகளை எடுக்கிறார் எனில், ரசிகர் மன்ற நிர்வாகிகளை அழைத்துப் பேசி ஊடகங்களிடம் சொல்லாமல் செய்யமாட்டார். அதனால் வெளியில் பரவும் இந்தச் செய்தியில் உண்மை இல்லை. எங்களை மக்களுக்கு பயன்பெறும் வகையில் நற்பணியில் ஈடுபடுமாறு தலைவர் கூறியிருக்கிறார். நாங்கள் ரசிகர் மன்ற கட்டமைப்பை வலுப்படுத்தி எங்களால் இயன்ற உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறோம். தலைவரும் எங்களின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து வருகிறார்.

சமீபத்தில்கூட ஒரு பிரமாண்ட நற்பணி நிகழ்ச்சியை தலைவர் தலைமையில் நடத்தியிருந்தோம். அந்த நிகழ்ச்சி எங்களுக்கு நல்லப் பெயரை ஈட்டிக் கொடுத்திருக்கிறது. இப்போதைக்கு இப்படியான நற்பணி செயல்பாடுகளில்தான் கவனம் செலுத்த சொல்லியிருக்கிறார். நாங்களும் மக்களுக்கு நெருக்கமாக செயல்பட்டு வருகிறோம். வருங்காலங்களில் தலைவர் என்ன முடிவை எடுத்தாலும் அவரின் விருப்பப்படி கடினமாக உழைப்போம். அடுத்ததாக இந்த மாத இறுதியில் ‘ஓம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடக்கவிருக்கிறது. அந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி முடிக்கும் வேலையில் இறங்கியிருக்கோம்” என்றனர்.
இருக்கு… ஆனா இப்போ இல்ல!




