12
February, 2026

A News 365Times Venture

12
Thursday
February, 2026

A News 365Times Venture

சேலம்: `10 வருஷமாகியும் குழந்தைக்கு பிறப்பு சான்று கிடைக்கல'- அலட்சிய அதிகாரிகள்; அல்லாடும் பெற்றோர்

Date:

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி வட்டம், தாத்தியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் – வினோதா தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்து, கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாகியும் பிறப்புச் சான்றிதழ் பெறமுடியாமல் போராடி வருகின்றனர். இது குறித்த தகவல் நமக்குக் கிடைக்கப்பெறவே, அவர்களை நேரில் சென்று சந்தித்து, `என்ன பிரச்னை?’ என்று விசாரித்தோம்.

10 ஆண்டுக்காலப் போராட்டம்

தங்கள் பிரச்னை குறித்து தம்பதியர் விரிவாக எடுத்துரைத்தனர். குழந்தையின் தாய் வினோதா பேசுகையில், “பிரசவத்திற்காக என்னை 19.05.2016ல் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கூட்டிட்டுப் போனாங்க. எங்களுடைய குழந்தை மறுநாள் பிறந்தது. அப்போதிலிருந்தே என் குழந்தைக்குப் பிறப்புச் சான்றிதழைப் பெற முயற்சி செய்றேன். பிறப்புச் சான்றிதழ் வாங்கித் தர்றேன்னு சொல்லி அப்போவே 500 ரூபாய் வாங்குனாங்க. குழந்தை பிறந்த உடனே சில மருத்துவக் காரணத்துக்காக அவசர சிகிச்சை பிரிவிலும் இருந்தோம். அதுக்குப் பதிவு செஞ்ச டாக்குமென்ட்ஸ் எல்லாம் எங்கிட்ட இருக்கு. டிஸ்சார்ஜ் சம்மரி இருந்தால் வாங்கிடலாம்ன்னு சொல்லியே பல நாள் அலைக்கழிக்கிறாங்க. அங்க வேலை பார்த்த நர்ஸ் ஒருத்தவங்க வாங்கித் தர்றேன்னு சொன்னாங்க. இப்போ அவங்களும் வேற இடத்துக்கு டிரான்ஸ்பர் வாங்கிட்டு போனதுனால, நீங்களே எப்படியாவது வாங்கிக்கோங்கன்னு அலட்சியமா சொல்றாங்க.

அரசு மருத்துவமனையிலுள்ள பிறப்பு – இறப்பு பதிவு அலுவலகத்துல போய் கேட்கும்போது, ‘உங்க பிள்ளையோட பிறப்பு பதிவு செய்யப்படல’ன்னு சொன்னாங்க. அதுக்கப்புறம் அவங்களே சேலம் மாநகராட்சி அலுவலகத்துல போய் கேட்டுப் பார்க்கச் சொன்னாங்க.

தட்டிக்கழிக்கும் அதிகாரிகள்… அலைக்கழிக்கப்படும் பெற்றோர்!

அங்க போய் கேட்டா, பிறப்பு பதிவில்லா சான்று வாங்குன பிறகுதான் பிறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கணும்னு அதுக்கு ஒரு நோட்டரி வழக்கறிஞர் ஆணையுறுதி ஆவணம், உள்ளூர் மக்கள் வாக்குமூலம், மருத்துவப் பதிவேடு நகல், கிராம நிர்வாக அலுவலர் பிறப்பு பதியவில்லைன்னு உறுதிமொழி மற்றும் ஆண்டுகளுக்கு ஏற்ப அபராதத் தொகைன்னு எல்லாம் தேவைப்படும்ன்னு சொன்னாங்க. ஆனா பெரிசா எழுதப் படிக்க தெரியாத நாங்க இதை எப்படி பண்ணுறதுன்னு தெரியாம ஒரு வக்கீல்கிட்ட போய் கேட்டோம். அவர் பத்தாயிரம் ரூபாய் கொடுத்தா பிறப்புச் சான்றிதழ் வாங்கித் தர்றேன்னு சொன்னாரு. சாதாரணமா உழைச்சி சாப்பிடுற மக்களால அந்தப் பத்தாயிரத்தை எப்படி கொடுக்க முடியும்? அதுல ஏழு வருசம் ஓடிருச்சு. இந்த எழு வருசத்துல ஐந்நூறு, ஆயிரம் ரூபாய்ன்னு ஏராளமா செலவழிச்சாலும் பணம் வாங்கினப் பிறகு யாருமே கண்டுக்கிறதில்லை.

கொஞ்ச நாளுக்கு முன்னாடி நடந்த ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் காடையாம்பட்டி வருவாய் துறையினர்கிட்ட மனு கொடுக்கும்போது, அவர் அதை வாங்கவே இல்லை. இப்போ கடைசியாக தாத்தியம்பட்டியிலுள்ள ‘முக்கலை வளர்ப்புக்குழு இளையோர் நற்பணி மன்றம்’ பத்தி தெரியவந்து, கடந்த ரெண்டு வருசமா முதல்வரோட மனு பிரிவுக்கு அந்த மன்றம்தான் பார்த்திட்டு இருக்குன்னு தெரிஞ்சுது. கடைசியா இந்த மன்றத்தின் மூலமாச்சும் எங்க பிள்ளைக்கு பிறப்புச் சான்றிதழ் கிடைக்கும்ன்னு நம்பிப் போராட்டிட்டு இருக்கேன்” என்று விரக்தி பொங்க பேசி முடித்தார் வினோதா.

முக்கலை வளர்ப்புக்குழு இளையோர் நற்பணி மன்றத்தில் இந்தப் பிரச்னைக்கு என நியமிக்கப்பட்ட நபரிடம் பேசியபோது,

“அவர்கள் பிரச்சனை பற்றி எங்களிடம் வந்து சொன்னார்கள். அதனடிப்படையில் தொடர்புடைய ஆவணங்களின் நகல்கள் அடிப்படையில் இந்த பிரச்னைக்குத் தீர்வு காண முடிவு செய்யப்பட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கும் அதனைத் தொடர்ந்து, சேலம் மாநகராட்சிக்கும் நேரடியாகச் சென்று விசாரித்தோம். அதன்படி குழந்தை பிறப்பு பதிவு கண்டறிய சேலம் மாநகராட்சியில் தேடுதல் விண்ணப்பம் 28.11.2023 அன்று ₹100 கட்டணம் செலுத்தி அளிக்கப்பட்டது. பல மாதங்கள் ஆகியும் பதில் அளிக்கப்படாததால் நேரில் பல முறை சென்று கேட்டதன் விளைவாக, பதிவு இல்லை என வாய்வழியாக பதில் அளித்தனர். முதல் மனு இணைய வழியில் முதல்வர் மனு பிரிவுக்கு 02.07.2023 அன்று அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அடுத்த மனு 18.12.2023 அன்று எழுத்துபூர்வமான பிறப்பு பதிவு தொடர்பான பதிலுக்காக அளிக்கப்பட்டது. 10.01.2024 அன்று, `குழந்தை பிறப்பை பதிய வேண்டியது மருத்துவமனை கடமை.

அதன் பின்பு, குழந்தை பிறப்பு தொடர்பான மருத்துவ ஆவணங்கள் மருத்துவமனையிலும், பெற்றோரிடமும் உள்ளது. அதன் அடிப்படையில் பதிவு செய்ய வேண்டும்’ என்று வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது. மேற்கண்ட 4 மனுக்கள் மீதும் நடவடிக்கை இல்லை என்று 16.01.2024 அன்று மீண்டும் முதல்வர் மனு பிரிவில் மனு அளிக்கப்பட்டது அதன்படி, தெளிவான பதிலானது 23.01.2024 அன்று பிறப்பு – இறப்பு பதிவு சட்டம்,1969 பிரிவு 13(3) படியும் தமிழ்நாடு பிறப்பு – இறப்பு விதிகள் 2000-ன் 9(3) படியும் பிறப்பு பதிவு செய்ய வருவாய் கோட்டாட்சியரின் ஆணைப் பெற்ற பிறகே பதிவு செய்யப்படும் என்றும், அதற்கு கட்டாயமாக பதிவின்மை சான்று கட்டாயம் விண்ணப்பித்து பெற்ற பின்பே விண்ணப்பிக்க முடியும் என்று பதில் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக பலமுறை அரசு மருத்துவமனை மற்றும் சேலம் மாநகராட்சி என்று அலைந்த பிறகு மாநகராட்சி பிறப்பு பதிவு இல்லை என்று எழுத்துப்பூர்வமான தகவல் அளித்தது. அதன் அடிப்படையில் 04.01.2026 அன்று மற்றொரு மனு அடிப்படையில், மருத்துவமனை தரப்பிலிருந்து எழுத்துப்பூர்வமாக குழந்தை பிறந்த பதிவு நகல் மருத்துவமனையில் உள்ளதற்கான ஆவணம் பெறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பதிவின்மை சான்று பெற்று அதன் பிறகு வருவாய் கோட்டாட்சியருக்கு விண்ணப்பித்து பிறப்பு பதிவுசெய்ய‌ வேண்டிய பல பணிகள் நிலுவையிலுள்ளது‌” என்றார்.

நாங்கள் பொறுப்பல்ல

இது குறித்து சேலம் அரசு மருத்துவமனை மருத்துவ பதிவேடு அலுவலரை அணுகி விசாரித்தபோது, “குழந்தை பிறப்பு தொடர்பான பதிவேடுகள் மருத்துவமனை நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது. பிறப்பு பதிவு கட்டாயம் செய்யப்பட்டிருக்கும். இந்த தவற்றுக்கு நாங்கள் பொறுப்பல்ல” என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

சேலம் மாநகராட்சி அலுவலக பிறப்பு – இறப்பு பிரிவு அதிகாரிகளிடத்தில் விசாரித்தபோது, “மருத்துவமனை பிறப்பைப் பதிவு செய்யவில்லை. எனவே, மருத்துவமனை சார்பிலேயே பிறப்பு பதிவின்மை சான்று விண்ணப்பிக்க முடியும். தவறு மருத்துவமனையுடையது” என்றனர்.

Birth

யார் தவறு?

தமிழ்நாடு பிறப்பு இறப்பு விதிகள், 2000-படி குழந்தை‌ பிறப்பு மருத்துவமனையில் நடந்திருந்தால், மருத்துவமனை அளிக்கும் தகவலின் பேரில் பிறப்பு இறப்பு பதிவாளர் பிறப்பைப் பதிவுசெய்ய வேண்டும். மருத்துவமனை, குழந்தை பிறப்பு குறித்த தகவல் அளிக்க தவறியதா?

அல்லது

பிறப்பு இறப்பு பதிவாளர் பதிவுசெய்யத் தவறினாரா? என்பதே கேள்விக்குறியாக உள்ளது.

அரசு துறைகளின் கவனக்குறைவால் ஒரு குழந்தையின் கல்வி பாதிக்கப்பட்டு, பெற்றோர் சுமார் 10 ஆண்டுக்காலமாக அரசு அலுவலகப் படிகளை ஏறி இறங்கி, மிகுந்த மன உளைச்சலில் இருக்கின்றனர். அரசு இயந்திரத்தின் நிர்வாக தவற்றால்… பெரும் அலட்சியத்தால் பிஞ்சுக் குழந்தையின் எதிர்காலம் கேள்விக்குறியாகி நிற்பது வேதனை அளிக்கக்கூடிய விஷயம்! சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த விவகாரத்தில், பெற்றோரின்… குழந்தையின் நிலையைக் கருத்தில்கொண்டு `பிறப்புச் சான்று’ கிடைக்க விரைந்து வழிவகை செய்ய வேண்டும்!

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

நாளை நடக்கவிருந்த செவிலியர் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி ரத்தா? – கடைசி நேரத்தில் நடந்தது என்ன?

கோவிட் காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த செவிலியர்களுக்கு சென்னையில் நாளை பணி...

வடகொரியா: அதிகாரத்தின் அடுத்த வாரிசு; தலைமைப் பொறுப்புக்கு மகளை முன்னிறுத்தும் கிம் ஜாங் உன்!

வடகொரியாவின் உச்சபட்ச அதிகார மையமாகத் திகழும் கிம் ஜாங் உன், கடந்த...

'காங்கிரஸின் தவறு தான் அது'; சுட்டிக்காட்டிய மாணிக்கம் தாகூர் – 2006 தேர்தலில் நடந்தது என்ன?

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்குள்...