பாமக சார்பில் தர்மபுரியில் போட்டியிடும் சௌமியா அன்புமணியைத் தோற்கடிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வீடியோ வெளியிட்டிருக்கிறார்.
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவர் மகன் அன்புமணி இடையே கருத்து வேறுபாடு நீடித்து வரும் நிலையில், இருவரும் தங்களுக்குத்தான் கட்சி சொந்தம் எனக் கூறி வருகின்றனர்.
`உண்மையான பா.ம.க., நாங்கள்தான்’ எனக் கூறிவந்த அன்புமணி, வருகிற தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து தேர்தலைச் சந்திக்கிறார்.
அவருக்கே மாம்பழம் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வாக சசிகலாவின் அ.இ.பு.த.ம.மு.க-வுடன் ராமதாஸ் கூட்டணி அமைத்தார்.
இந்நிலையில், பிரசாரத்திற்கு செல்ல முடியாத சூழலில் பாமக நிறுவனர் ராமதாஸ் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் அந்த வீடியோவில், “தற்போதைய தேர்தலில் போட்டியிடும் அன்புமணி தலைமையிலான அணி, மக்கள் சேவைக்காக அன்றி, அதிகாரம் கிடைத்தால் அதன் மூலம் பணம் சம்பாதிப்பதையே நோக்கமாகக் கொண்டிருக்கிறது.
நான் வளர்த்தெடுத்த பிள்ளைகள் இன்று பணத்திற்காக அணி மாறி, கொள்கையற்ற துரோக கூட்டத்தில் இணைந்திருப்பது வருத்தமளிக்கிறது.
அதிகாரம் இருந்தால்தான் சேவை செய்ய முடியும் என்பது உண்மை, ஆனால் இவர்கள் அந்த அதிகாரத்தைப் பணமாக்கவே நினைக்கிறார்கள்.
மக்களின் குறைகளை நாடாளுமன்றத்திலோ, சட்டமன்றத்திலோ எதிரொலிக்க வேண்டும் என்பதே நான் அளித்த பயிற்சி.
ஆனால், அன்புமணி இந்தியாவிலேயே மிகக் குறைந்த நாள்களே நாடாளுமன்ற அவைக்குச் சென்றவர்.

நேரடி மக்கள் களத்தைக் காண அஞ்சி, சட்டமன்றத் தேர்தல்களில் தனது மனைவியை நிறுத்திவிட்டு, இவர் பின்னணியில் இருந்து கொண்டு அதிகாரத்தைத் தேடுகிறார்.
அரசியல் ரீதியாக மட்டுமன்றி, தனிப்பட்ட ரீதியிலும் அன்புமணி நாகரிகமற்ற முறையில் நடந்துகொண்டிருக்கிறார்.
குறிப்பாக, அண்மையில் நான் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சேலம் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிய நிலையில், ஒரு வார்த்தைக்கூட நலம் விசாரிக்க வராதவர் அன்புமணி.
இது அவரது குணாதிசயத்தையும், துரோக மனப்பான்மையையும் வெளிப்படுத்துகிறது. அன்புமணி தலைமையிலான இந்த கும்பல் போட்டியிடும் 18 தொகுதிகளிலும் வாக்காளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
அதேபோல தர்மபுரியில் போட்டியிடும் சௌமியாவைத் தோற்கடிக்க வேண்டும். பணத்துக்காகவும், அதிகாரத்தைக் கைப்பற்றவுமே தேர்தலில் போட்டியிடுகிறார் செளமியா. அன்புமணி துரோக கும்பலுக்கு வாக்களிக்காதீர்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.




