செந்தில் பாலாஜி ஜாமீனை ரத்து செய்ய வேண்டுமென அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்திருக்கிறது.
அ.தி.மு.க ஆட்சி காலத்தில் போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர், நடத்துனர் உள்ளிட்ட வேலைகளை பெற்றுத் தருவதற்கு லஞ்சம் வாங்கியதாக அப்போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மீது புகார்கள் எழுந்தது. இதில் ‘சட்டவிரோத பண பரிமாற்றத்தில் செந்தில் பாலாஜி ஈடுபட்டார்’ என குற்றச்சாட்டுகளை முன்வைத்து அமலாக்கத்துறை செந்தில் பாலாஜிக்கு எதிராக வழக்கு தொடர்ந்து. அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனைகளை நடத்தி, அதன் தொடர்ச்சியாக கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் 14-ம் தேதி கைதும் செய்தது.
பின்னர், உச்ச நீதிமன்றத்தை நாடி, 471 நாள்களுக்குப் பிறகு ஜாமீன் பெற்ற செந்தில் பாலாஜி, அடுத்த நாளே அமைச்சராகவும் பொறுப்பேற்றார். இவர் அமைச்சராக பொறுப்பேற்றுவதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகள் மீதான விசாரணை கடந்த வாரம், உச்ச நீதிமன்ற நீதிபதி அபய் எஸ் ஓஹா தலைமையிலான அமர்வில் நடந்தது. அப்போது, செந்தில் பாலாஜியிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது.
குறிப்பாக ‘அவசர அவசரமாக செந்தில் பாலாஜி அமைச்சராக பொறுப்பேற்றது ஏன்? அவருக்கு எதிரான சாட்சியங்கள் அரசு அதிகாரிகளாகவும் ஊழியர்களாகவும் இருக்கும் நிலையில் அமைச்சருக்கு எதிராக அவர்கள் எப்படி சாட்சியம் அளிக்க வருவார்கள்?’ என கேள்வி எழுப்பியதோடு, “அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர விரும்புகிறாரா… எனக் கேட்டு சொல்லுங்கள். ஆம் என்று அவர் பதிலளித்தால் அவருக்கு எதிரான வழக்குகளை நாங்கள் உடனடியாக பட்டியலிட்டு விசாரிப்போம்” என எச்சரித்தனர்.

இதற்கிடையில், உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பாக செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கு விசாரணை, அவர் ஜாமீன் பெற்று வெளியே வந்ததற்கு பிறகு எவ்வாறு நடந்தது? வழக்கில் சாட்சியங்களாக இருப்பவர்கள் சாட்சியளிக்க வராமல் புறக்கணித்தது போன்ற விவரங்களை, தேதி வாரியாக ஆதாரங்களாக சமர்ப்பித்திருக்கின்றனர். இதை முன்வைத்து, செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய கோரிக்கை வைத்துள்ளனர்.
ஏற்கனவே கடந்த விசாரணையின் போது செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி குறித்து கடும் ஆட்சியபனை தெரிவித்த நீதிபதிகள், வரும் மார்ச் 4-ம் தேதி இது தொடர்பான வழக்கினை விசாரிக்கும் போது அமலாக்கத் துறையின் இந்த புதிய மனுவையும் கவனத்தில் கொள்வார்கள் என்பதால், அன்றைய விசாரணை அதி முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
Vikatan Play
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்’ பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play