29
May, 2026

A News 365Times Venture

29
Friday
May, 2026

A News 365Times Venture

சவுதி விதித்த மரண தண்டனை; பிளட் மணி வழங்கிய கேரள மக்கள் – 20 ஆண்டுக்குப்பின் வீடு திரும்பிய ரஹீம்!

Date:

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கோடம்புழா பகுதியைச் சேர்ந்த முல்லா முஹம்மது – பாத்திமா ஆகியோரது மகன் அப்துல் ரஹீம். அப்துல் ரஹீமின் தந்தை முல்லா முகம்மது மரணமடைந்துவிட்டார். 2006-ம் ஆண்டு நவம்பர் மாதம் 28-ம் தேதி அப்துல் ரஹீம் சவுதி அரேபியா நாட்டுக்கு வேலைக்குச் சென்றார்.

சவுதி அரேபியாவின் ரியாத்தில் ஹவுஸ் டிரைவர் விசாவில் சென்று வேலைக்குச் சேரும்போது அப்துல் ரஹீமுக்கு 26 வயது ஆகியிருந்தது. ரியாத்தைச் சேர்ந்த அப்துல்லா அப்துரஹ்மான் அல்ஷாஹ்ரியின் மகனான அனாசி அல்ஷாஹ்ரி என்ற 15 வயது சிறுவனை பராமரிப்பது  அப்துல் ரஹீமுக்கு வேலையாக இருந்தது.

சிறுவன் அனாசி அல்ஷாஹ்ரி-க்கு கழுத்துக்கு கீழ் உள்ள பகுதிகள் செயல்படாமல் இருந்தது. சிறுவனின் கழுத்தில் பொருத்தப்பட்டிருந்த சிறப்பு கருவி மூலம் உணவு மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. அவ்வப்போது வீல் செயர் மூலமும், காரிலும் சிறுவனை மார்க்கெட்டுக்கு அழைத்துச் சென்று தேவையான பொருட்களை வாங்கிவிட்டு வீடு திரும்புவது வழக்கம். அப்துல் ரஹீம்தான் அந்த சிறுவனை காரில் வெளியில் அழைத்துச் சென்று வந்துள்ளார்.

2006-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24-ம் தேதி ரியாத் ஷிஃபா-வில் உள்ள வீட்டில் இருந்து அஸீஸி-யில் உள்ள ஃபாண்டா ஹைப்பர் மார்க்கெட்டுக்கு சிறுவனை அழைத்துச் சென்றார் அப்துல் ரஹீம். காரின் பின் சீட்டில் சிறுவன் அமர்ந்திருந்திருக்கிறான். போகும் வழியில் ட்ராபிக் சிக்னலை மீறி காரை ஓட்டிச் செல்லும்படி சிறுவன் அனாசி அல்ஷாஹ்ரி கூறியிருக்கிறார்.

ஆனால், அப்துல் ரஹீம் சிக்னலை மீறாமல் காத்திருந்தார். இதனால் சிறுவன் பின் சீட்டில் இருந்தபடி சத்தம்போட்டு பிரச்னை ஏற்படுத்தியிருக்கிறார். சிக்னலை மீறக்கூடாது எனக்கூறி புரியவைப்பதற்காக திரும்பியபோது அப்துல் ரஹீமின் முகத்தில் சிறுவன் பலமுறை எச்சில் துப்பியிருக்கிறார். அதை தடுப்பதற்காக அப்துல் ரஹீம் கையை நீட்டியபோது சிறுவனின் கழுத்தில் பொருத்தப்பட்டிருந்த உபகரணத்தில் தெரியாமல் கை பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து சிறுவன் மயக்க நிலைக்குச் சென்றுள்ளான். அதை கவனிக்காமல் சிக்னல் விழுந்ததும் மீண்டும் காரை ஓட்ட தொடங்கினார் அப்துல் ரஹீம்.

சவுதி அரேபியாவில் இருந்து கேரளா திரும்பிய ரஹீம்

தொடர்ந்து கார் ஓட்டிக்கொண்டிருந்த போது பின்பக்கம் சீட்டில் சிறுவனின் சத்தம் கேட்கவில்லையே என்று மெதுவாக திரும்பிப் பார்த்துள்ளார். அப்போது சிறுவன் சலனமற்று கிடந்ததை பார்த்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்துல் ரஹீம் சவுதி அரேபியாவில் வேலைசெய்துவந்த கோழிக்கோட்டைச் சேர்ந்த முஹமது நசீரை போனில் அழைத்து உள்ளார்.

முஹம்மது நசீர் அங்கு சென்ற நிலையில் இருவரும் என்ன செய்யலாம் என ஆலோசித்து ஒரு திட்டம் தீட்டினர். அதன்படி, பணம் பறிக்க வந்த கொள்ளைக்காரர்கள் அப்துல் ரஹீமை காரில் கட்டி போட்டுவிட்டு, சிறுவன் அனாசி அல்ஷாஹ்ரியை தாக்கியதாக நாடகமாடினர். இதுகுறித்து போலீஸுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீஸார் அப்துல் ரஹீமையும், முஹம்மது நசீரையும் கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் பொய்யாக நாடகமாடியது தெரியவந்தது. இருவரையும் போலீஸார் கைது செய்தனர். முஹம்மது நசீர் பத்து ஆண்டுகள் சிறையில் இருந்து விட்டு ஜாமினில் வெளியே வந்தார். ஆனால், அப்துல் ரஹீம் குற்றவாளி என அறிவித்த கோர்ட் அவருக்கு மரண தண்டனை விதித்தது.

கடந்த 20 ஆண்டுகளாக சவுதி அரேபியாவின் அல் ஹைர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அதே சமயம் சிறுவனின் பெற்றோர் அப்துல் ரஹீமை மன்னித்தால் அவரை மரண தண்டனையில் இருந்து விடுவிக்கலாம் என்ற நிலை ஏற்பட்டது. இதையடுத்து சிறுவனின் பெற்றோர் பிளட் மணி என்ற வகையில் ஒன்றரை கோடி ரியால் கேட்டனர்.

அதன்படி இந்திய மதிப்பில் 34 கோடி ரூபாய் வழங்க வேண்டும். அதுவும் 2024-ம் ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதிக்குள் அந்த தொகையை வழங்கினால்தான் அவரது உயிரை காப்பாற்ற முடியும் என்ற நிலை ஏற்பட்டது. இதையடுத்து அப்துல் ரஹீமின் உயிரை காக்க சமூக சேவகர்கள் களம் இறங்கினர்.

அப்துல் ரஹீம் சட்ட உதவி டிரஸ்ட் ஏற்படுத்தப்பட்டது. கேரளாவில் அதற்கான செயல்படுகள் நடந்தன. கேரளா மக்கள் மனமுவந்து பண உதவிகளை செய்தனர். அப்துல் ரஹீமுக்காக ஏற்படுத்தப்பட்ட வங்கிகணக்கில் உலகம் முழுவதும் உள்ள கேரள மக்கள் இணைந்து 34 கோடி ரூபாய் திரட்டி இந்தியா தூதரகம் மூலம் சவுதியில் உள்ள சிறுவனின் குடும்பத்துக்கு வழங்கப்பட்டது.

உலகெங்கிலும் உள்ள கேரள மக்களின் கருணை மற்றும் ஒற்றுமையின் காரணமாக மரண தண்டனையிலிருந்து தப்பினார் ரஹீம். ஆனாலும் சில சட்ட நடவடிக்கைகள் தாமதமானதால் அவர் சிறையில் இருக்க நிலை ஏற்பட்டது. மே 26 அன்று ரஹீமின் விடுதலை ஆணை பிறப்பிக்கப்பட்டு, அவர் சொந்த ஊர் செல்வதற்கான விசாவும் தயாரானது. இதைத் தொடர்ந்து, அவர் இந்தியா திரும்புவதற்கான பயண ஏற்பாடுகள் விரைவுபடுத்தப்பட்டன.

புதன்கிழமை மதியம் சிறையிலிருந்து நாடு கடத்தும் பிரிவுக்கு மாற்றப்பட்ட ரஹீம், நள்ளிரவில் விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, மிகவும் தாமதமாக நடைபெற்ற கைரேகை பதிவு உள்ளிட்ட குடிவரவு நடைமுறைகளை முடித்த பிறகு விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்பட்டார். சட்ட நடைமுறைகளை முடித்துக்கொண்டு புதன்கிழமை இரவு ரியாத் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ரஹீம், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் IX 322-ல் கோழிக்கோடுக்குப் புறப்பட்டார்.

நேற்று காலை கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்தை அடைந்த ரஹீமை, அவரது குடும்ப உறுப்பினர்கள், ரஹீம் சஹாய் சமிதி அறக்கட்டளையின் அலுவலகப் பொறுப்பாளர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் வரவேற்றனர். கோடம்புழாவில் உள்ள தனது வீட்டின் முற்றத்தில் ரஹீம் காலடி எடுத்து வைத்தபோது, ​​அவரது கண்கள் கண்ணீரால் நிறைந்திருந்தன.

ஊர் திரும்பிய அப்துல் ரஹீம் தாயை அணைத்து கண்ணீர் விட்டார்

ரஹீமின் தாய் பாத்திமா நடுங்கியபடி தன் மகனின் மார்பில் சாய்ந்தார். “அம்மா, நான் வந்துவிட்டேன்” என்று கூறிய ரஹீம் கண்ணீர் விட்டு அழுதார். ரஹீம் உள்ளூர் மக்களைப் பார்த்து கையசைத்து, உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். மேலும் ரஹீம் கூறுகையில், “20 ஆண்டுகளுக்குப்பின் ஊருக்கு வந்துள்ளேன். 18 ஆண்டுகளாக நான் மீண்டு வருவேன் என்ற நம்பிக்கை ஏற்படவே இல்லை. எனக்காக நிதி உதவி செய்தவர்களுக்கும், எனக்காக பிரார்த்தனை செய்த நல் உள்ளங்களுக்கும் நன்றி.

நிதி பெற்றுக்கொண்டு என்னை விடுவிக்க உதவிய சவுதி அரேபியா குடும்பத்தினருக்கும் நன்றி. மோசமான பழைய நிகழ்வுகள் அனைத்தையும் மறந்து புதிய வாழ்க்கையில் அடியெடுத்து வைக்க விரும்புகிறேன்” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`கோவைக்கு மெட்ரோ, எங்கள் தேர்தல் அறிக்கையிலேயே இருக்கிறது; அதற்கான நடவடிக்கைகள்…'- அமைச்சர் சம்பத்

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார், கோவை அரசு மருத்துவமனையில்...

'பிள்ளை பிடிப்பவர்களிடம் கவனமாக இருங்கள்..!' – நீலகிரி அதிமுக மா.செ சூட்சும அறிக்கை

நீலகிரி மாவட்ட அ.தி.மு.க முக்கிய நிர்வாகிகள் பலர் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில்...

சர்ச், பள்ளி, டாஸ்மாக் மூணும் அடுத்தடுத்து.! 'எப்ப சார் கடையை மூடுவீங்க?' கேட்பது பெரம்பூர் மக்கள்!

``பள்ளிகள், வழிபாட்டுத் தலங்களில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரத்துக்குள் இருக்கும்...