கேரள மாநிலம் சாலக்குடியில் உள்ள எம்.ஆர்.சி என்ற பிரபல பேக்கரியில் 15 சதவீதம் வரை ஆல்கஹால் அடங்கிய வீரியமிக்க ஹார்ட்டி ஒயின் விற்பனை தொடங்கப்பட்டது. இது குறித்த செய்திகள் நேற்று வெளியானதும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆல்கஹால் கலந்த வீரியமிக்க ஹார்ட்டி ஒயின் எளிதில் பேக்கரிகளில் கிடைப்பது இளம் தலைமுறையினரை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் என எதிர்ப்பு கிளம்பியது. இது ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. பேக்கரிகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் வழியாக 15% வீரியமுள்ள ஒயின் விற்பனை செய்ய கலால் துறை பிறப்பித்த உத்தரவுக்கு அமைச்சர் எம்.லிஜு உடனடியாகத் தடை விதித்துள்ளார். அரசு விடுமுறை நாளாக இருந்தபோதிலும், இவ்விவகாரத்தில் நேற்று அவசர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு விற்பனையை முடக்கி உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இந்த உரிமத்தை அனுமதித்த கலால் துறை துணை ஆணையர் சி.கே.அனில்குமார் அப்பொறுப்பிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக பெவ்கோ தலைமையக துணை ஆணையர் வி.சுபாஷிடம் கூடுதல் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக ஆலப்புழாவில் செய்தியாளர்களைச் சந்தித்த கலால் துறை அமைச்சர் எம். லிஜு, கூறுகையில், “பேக்கரி மூலம் வீரியமிக்க ஹார்ட்டி ஒயின் விற்பனை செய்யப்படுவது அரசின் ஒப்புதலுடன் நடந்ததல்ல. முந்தைய இடதுசாரி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திருத்தங்களை அடிப்படையாகக் கொண்டு, கலால் துறை ஆணையர் இந்த முடிவை தன்னிச்சையாக எடுத்துள்ளார். துறை அமைச்சரான எனக்கே தெரியாமல், இதுபோன்ற ஒரு சர்ச்சை உத்தரவைப் பிறப்பித்ததை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த உத்தரவைப் பிறப்பித்த கலால்துறை துணை ஆணையர் மாற்றப்பட்டுள்ளார். ஒயின் விற்பனை உரிமத்தை உடனடியாக ரத்து செய்யவும் நான் உத்தரவிட்டுள்ளேன். பேக்கரிகள் மற்றும் பொதுக் கடைகள் வழியாக எளிதாக ஒயின் விற்பனை செய்வது நமது சமூகத்தில் மிக மோசமான எதிர்மறை தாக்கங்களை ஏற்படுத்தும்.
தற்போது மாநில அரசின் புதிய மதுபானக் கொள்கை தொடர்பான தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. முந்தைய அரசின் சட்டத் திருத்தங்களை மாற்றியமைக்க வேண்டுமா என்பது குறித்து இந்த புதிய மதுபானக் கொள்கையில்தான் முடிவெடுக்கப்படும். ஆனால், எங்களது அரசின் மதுபானக் கொள்கையில் பேக்கரிகள் மூலம் ஒயின் விற்பனை செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட வாய்ப்பே இல்லை. இதுபோன்று அத்தியாவசிய கடைகளில் எளிதாக மது விற்பனைக்கு வழிவகுப்பது யு.டி.எஃப் கூட்டணியின் கொள்கையே கிடையாது. முந்தைய எல்.டி.எஃப் அரசு சட்ட விதிகளில் திருத்தங்கள் கொண்டு வந்திருந்ததன் அடிப்படையில் தான் அதிகாரிகள் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறுகிறார்கள். ஆனால், எங்களது அரசு தனது கொள்கை முடிவை இன்னும் இறுதி செய்யவில்லை. பழைய அரசின் கொள்கைகளை அதிகாரிகள் தன்னிச்சையாக நடைமுறைப்படுத்தக் கூடாது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கொள்கை முடிவுகளை எடுக்கும் போது, துறை அமைச்சரிடம் விரிவாக விவாதித்து தகவல் தெரிவித்த பிறகே முடிவெடுத்திருக்க வேண்டும்” என்றார்.




