நேற்று முதல்வர் விஜய்யின் பெரம்பூர் தொகுதியின் கொடுங்கையூர் பகுதியில் மழைநீர் வடிகால் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் இருவர் விஷவாயு தாக்கி உயிரிழந்திருந்தனர்.
அவர்களின் உடல் ஸ்டான்லி மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்திக்க ஸ்டான்லி மருத்துவமனைக்குச் சென்றிருந்தோம்.
நவீன் குமார், பாட்ஷா என இருவர்தான் இறந்தவர்கள். இருவருமே நடுத்தர வயதைச் சேர்ந்தவர்கள். ஸ்டான்லி மருத்துவமனையின் பிணவறைக்கு வெளியே இரண்டு பேரின் குடும்பத்தினரும் இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியாமல் கதறி அழுதுக் கொண்டிருக்கின்றனர்.
பாட்ஷாவின் குடும்பத்தினரிடம் நம்மால் பேசவே முடியவே இல்லை. அவர்கள் உடைந்து போய் பேசும் மனநிலையிலேயே இல்லை. நவீன் குமாரின் குடும்பத்தினர் பிணவறைக்கு வெளியேயே சில கோரிக்கைகளை முன்வைத்து போராடியிருந்தனர். அவர்களிடம் நெருங்கி சென்று துக்கம் விசாரித்து பேசினோம்.
பிணவறைக்கு வெளியே ஒன்றரை வயது குழந்தையை கையில் பிடித்தபடி அமர்ந்திருக்கும் நவீன் குமாரின் மனைவி ப்ரீத்தி, ”மோட்டார் இறக்குற வேலைக்குன்னு சொல்லி கூட்டிட்டு போனாங்கண்ணா… இந்த மாதிரி வேலைக்கு அவர் அடிக்கடி போவாரு. எனக்கு என்ன ஆச்சுன்னே தெரியலை. அவர் போயிட்டாருன்னு சொல்றாங்க. நானும் என் குடும்பமும் இப்ப என்ன பண்ணுவோம்.

என் அம்மா 5 வருசமா படுத்த படுக்கையா இருக்காங்க. எனக்கு அண்ணனோ தம்பியோ யாரும் கிடையாது. இவர்தான் எங்க வீட்டையும் அவங்க வீட்டையும் பொறுப்பா பார்த்துக்கிட்டு இருந்தாரு. கல்யாணம் முடிஞ்சு ரெண்டரை வருசம்தான் ஆகுது. குழந்தைக்கு ஒன்றரை வயசு ஆகுது.
என்னால குழந்தையை கையில் வச்சுக்கிட்டு அழக் கூட முடியல. குழந்தைக்கு எதுவும் ஆயிடோமோன்னு பயமா இருக்கு. இந்தப் புள்ள நாளைக்கு அப்பா எங்கன்னு கேட்டா நான் என்ன சொல்லுவேன். என் குழந்தைக்கு ஒரு நீதி வாங்கிக் கொடுங்க…” எனக் குழந்தையைப் பிடித்தபடி அழுகையை அடக்க முடியாமல் கண்ணீர்விட்டார்.
ப்ரீத்தியைத் தேற்றிக் கொண்டிருந்த நவீனின் சித்தி பேசுகையில், ”எங்க குடும்பமே கஷ்டப்பட்ட குடும்பம். அன்னன்னைக்கு என்ன வேலை கிடைக்குதோ அந்த வேலைக்குப் போயி கிடைக்குற கூலியை வச்சு வாழ்க்கையை ஓட்டுவோம். எங்க புள்ளைக்கு இப்படி ஆயிடுச்சுன்னு கூட யாரும் எங்களுக்கு முறையா தெரியப்படுத்தல.
3 பேர் வேலை பண்ணாங்க. 2 பேர் இறந்துட்டாங்க. ஒருத்தர் பிழைச்சிட்டாருன்னு சொன்னாங்க. பிழைச்ச புள்ள எங்க புள்ளையா இருக்கும்னு நம்பினோமே… ஆனா யாரும் எங்களுக்கு முறையா எந்தத் தகவலையும் சொல்லலை. போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து போன் போட்டு கையெழுத்து போட கூப்பிட்டாங்க.

கையெழுத்து போட்டாதான் அடுத்தக்கட்டமா எதுவும் செய்ய முடியும்னு சொன்னாங்க. எங்க புள்ளைங்களுக்கு கல்யாணம் ஆகியே ரெண்டரை வருசம்தான் ஆகுது. வாழ்க்கைன்னா என்னன்னு கூட இன்னும் முழுசா பார்க்காமலேயே போயிட்டானே…” எனப் பேச முடியாமல் விம்மினார்.
”நேத்து மதியம் புள்ள செத்துருக்கான். எங்களுக்கு நைட்டு ஏழு மணிக்குதான் தகவலே சொன்னாங்க. அதுவும் போலீஸ் போன் போட்டு விஷயம் எப்படி நடந்துச்சுன்னு தன்மையா கூட சொல்லலை. யாருக்கும் இப்படி ஒரு நிலைமை வாய்க்கவே கூடாது. இவ்வளவு ஆபத்தான வேலைன்னா அதைப் பார்க்குறவங்களுக்கு முறையா பாதுகாப்பு கொடுக்கணுமா இல்லையா?
ஒரு மாஸ்க் கூட இல்லாம எப்படி வேலைக்கு இறக்குனீங்க? இந்த மாதிரி வேலைக்கு வர்ற எங்க சனங்களோட உயிரையும் மதிங்க. எங்க புள்ளயோட உசுரு போயிருச்சு. நாங்க இன்னைக்கு நடுத்தெருவுல அழுதுட்டு இருக்கோம். இந்த மாதிரி நிலைமை வேற குடும்பத்துக்கு இனி ஏற்படக்கூடாது. அதுக்கு அரசு ஒரு வழி பண்ணனும்.

இறந்து போன எங்க புள்ளையோட மனைவிக்கு அரசு வேலை கொடுக்கணும். ஒரு வேலை இருந்தா மட்டும்தான் அந்தப் புள்ளை நாளைக்கு இந்தச் சமூகத்துல கௌரவமா பிழைச்சு நிக்க முடியும்” என்கின்றனர் நவீன் குமாரின் உறவுக்காரர்கள்.
பாட்ஷா, நவீன் குமாரின் குடும்பத்தினருக்குத் தலா 30 லட்ச ரூபாய் அரசு சார்பில் இழப்பீடாக வழங்கப்பட்டிருக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும் ஒப்பந்தத்தாரர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அரசு தரப்பில் கூறுகிறார்கள்.
அன்றாட கூலிகளின் இப்படியான இறப்புகள் கொடூரமானவை. வளர்ச்சித் திட்டங்களுக்காக பல்லாயிரம் கோடிகளை வாரியிறைக்கும் அரசுகள், ஒரு சாமானிய தொழிலாளியின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது என்பது பெரும் அவலம்.




