30
March, 2026

A News 365Times Venture

30
Monday
March, 2026

A News 365Times Venture

`காலம் சில கணக்குகளைப் போட்டுக் காத்திருந்தது' – ஓ.பி.எஸ் வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட தேர்தல்!

Date:

தமிழக அரசியல் வரலாறு எத்தனையோ பல விசித்திரங்களையும் விநோதங்களையும் ஆச்சரியங்களையும் கொண்டது. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் வாழ்க்கையும் அத்தகைய ஒன்றுதான். 2001 சட்டமன்ற தேர்தலில் முதல்முறையாக தேனி மாவட்டம், பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்ட பன்னீர்செல்வத்துக்கு ஆரம்பமே வெற்றிதான். எம்.எல்.ஏ-வாக சட்டமன்றத்தில் நுழைந்தவர், வருவாய்த் துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டபோதுதான் அதிமுக வட்டாரம் மட்டுமல்ல, அரசியல் வட்டாரமும் ஆச்சரியமும் வியப்புமாக பார்த்தது. 

ஆனால், பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ-வாகவும் அமைச்சராகவும் ஆனதன் பின்னணியை அறிந்தவர்களுக்கு அத்தகைய அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. அந்த பின்னணி என்ன, டீ கடை வைத்திருந்த பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ ஆனது எப்படி? யார் அவருக்கு தேர்தலில் சீட் வாங்கிக் கொடுத்தார்கள்? அதைவிட முதன்முறையாக எம்.எல்.ஏ-வாக ஆனவருக்கு அமைச்சர், அடுத்ததாக முதலமைச்சர் பதவியில் அமரும் அளவுக்கு செல்வாக்கு ஏற்பட்டது எப்படி..? எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள 1970 லிருந்து பயணிக்க வேண்டும்… 

ஓ.பன்னீர்செல்வம்

தேநீர் கடை உரிமையாளர் டு நகர்மன்றத் தலைவர்

தேனி மாவட்டத்தின் பெரியகுளம் அருகே உள்ள சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்தவர் ஓ.பன்னீர்செல்வம். பெரியகுளம் கார்டியா கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார். கல்லூரியில் படித்த மூன்றாண்டுகளிலும் அவரை நண்பர்களுடன் பார்ப்பது என்பது அரிது. ஏனெனில் அவருக்கு நண்பர் வட்டமே இல்லை. மதிய உணவு கூட தனிமையில்தான். அந்த அளவுக்கு அலட்டிக்கொள்ளாமல் இருந்தவர், கல்லூரி படிப்பை முடித்ததும், சிறிய அளவில் பால்பண்ணை ஒன்றை ஆரம்பித்தார். பால் கொள்முதல் தாராளமாக இருந்ததால், டீ கடை ஒன்றையும் நண்பர் ஒருவருடன் இணைந்து தொடங்கினார். அந்தக் கடைதான் அவருக்கு உள்ளூரில் ஓரளவு அறிமுகத்தைக் கொடுத்தது. 

எம்.ஜி.ஆர்.,திமுக-விலிருந்து பிரிந்து அதிமுக-வைத் தொடங்கியபோதிலிருந்து தொடங்கியது பன்னீர்செல்வத்தின் அரசியல் வாழ்க்கை. அதிமுகவில் இணைந்த அவர், சில மாதங்களிலேயே பெரியகுளம் நகர இளைஞர் அணிச் செயலாளரானார். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் கட்சி பிளவுபட்டபோது, ஜானகி அணியை ஆதரித்தார். 1989 சட்டமன்றத் தேர்தலில் போடி தொகுதியில் ஜெயலலிதாவுக்கு எதிராக ஜானகி அணி சார்பில் போட்டியிட்ட நடிகை வெண்ணிற ஆடை நிர்மலாவுக்கு ஆதரவாக தேர்தல் வேலைகளை மேற்கொண்டார். ஆனாலும், அந்தத் தொகுதியில் ஜெயலலிதாவே வெற்றிபெற்றார். அடுத்து வந்த ஆண்டுகளில் இரு அணிகளும் இணைந்தபோது, பன்னீர்செல்வம், ஜெயலலிதா தலைமையை ஏற்றார். 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற பெரியகுளம் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றவருக்கு, நகர்மன்ற தலைவர் பதவி கிடைத்தது.

தினகரனால் கிடைத்த அரசியல் வெளிச்சம்

1999 நாடாளுமன்றத் தேர்தலின்போதுதான் பன்னீரின் அரசியல் வாழ்க்கையில் வெளிச்சம் பரவத் தொடங்கியது.  அந்தத் தேர்தலில், அப்போது போயஸ் தோட்டத்தில் செல்லப்பிள்ளையாக வலம் வந்த டி.டி.வி தினகரன் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்ட நிலையில், அவரை வெற்றி பெறச் செய்வதற்கான தேர்தல் வேலைகளைப் பார்த்தவர் பன்னீர் செல்வம்தான். குறிப்பாக தினகரனுக்கான தேர்தல் செலவுகளை நயாபைசா துல்லியமாகக் கணக்கிட்டு நிர்வகித்தார். திமுக மாவட்டச் செயலாளர் மூக்கையாவையும் பலமாக ‘கவனித்து’ அவரை தேர்தல் வேலை பார்க்கவிடாமல் முடக்கிப்போட்டதாகவும் சொல்லப்பட்டது. தேர்தலில் தினகரன் வெற்றி பெறவும், அதற்குப் பிரதிபலனாக, பன்னீர்செல்வத்துக்கு மாவட்டச் செயலாளர் பதவியும் போயஸ் கார்டனுக்குள் நுழையும் அங்கீகாரமும் கிடைத்தது.

பன்னீர்செல்வம் – தினகரன்

உச்சத்துக்கு கொண்டு சென்ற முதல் தேர்தல் வெற்றி 

 இந்த நிலையில், 2001-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தினகரன் உதவியால் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது பன்னீருக்கு. அவரை எதிர்த்து திமுக சார்பில், எம். அபுதாகிர் களம் இறங்கினார். மதிமுக உள்ளிட்ட சிறிய கட்சிகளும், சுயேட்சைகளும் போட்டியிட்டாலும், உண்மையில் அது இரு பெரிய திராவிடக் கட்சிகளுக்கு இடையிலான நேரடிப் போட்டியாகவே அமைந்தது.

தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டபோது, 62,125 வாக்குகளைப் பெற்று, 17,920 வாக்குகள் வித்தியாசத்தில் அபுதாகிரை வீழ்த்தி வெற்றி பெற்றார் பன்னீர்செல்வம். அடிமட்டத்தில் வலுவான அமைப்பும், அதிமுக-வின் செல்வாக்குமிக்க நபரின் ஆசியும் ஆதரவும் இருந்ததால், அவரது வெற்றி எதிர்பார்த்த ஒன்றாகவே இருந்தது. முதன்முறையாக எம்.எல்.ஏ ஆன பன்னீர்செல்வம், அடுத்ததாக யாரும் எதிர்பாராத வகையில், வருவாய்த் துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். 

ஆச்சரியங்கள் அதோடு நின்றதா என்றால் இல்லை. காலம் இன்னும் வேறு சில கணக்குகளைப் போட்டுக் காத்திருந்தது. 

அது 2001 செப்டம்பர் 21-ம் தேதி. ‘டான்சி’ ஊழல் வழக்கில் தண்டனை பெற்றிருந்த ஜெயலலிதாவுக்கு, ஆளுநர் பாத்திமாபீவி முதலமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைத்தது செல்லாது என உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினால், அதிர்ந்துபோனார்கள் அதிமுகவினர். அரசியல் வட்டாரத்தில் ஏக பரபரப்பு. அதிமுகவுக்கு முழு பெரும்பான்மை பலம் இருந்ததால், ஆட்சிக்கு ஆபத்தில்லை. ஆனால், ஜெயலலிதாவுக்குப் பதில் வேறு ஒருவரை அக்கட்சி முதலமைச்சராக தேர்வு செய்ய வேண்டிய நிலை. 

இராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்குச் செல்லுமாறு அமைச்சர்களுக்கும் எம்.எல்.ஏ-க்களுக்கும் உத்தரவு பறக்கிறது. இன்னொருபுறம், போயஸ் தோட்டத்தில் அவசர ஆலோசனை நடைபெறுகிறது. யாரை முதலமைச்சராக்கினால், அவர் நமக்கு கட்டுப்பட்டு நடப்பார், விசுவாசமாக இருப்பார்  என்கிற மந்திராலோசனையில் ஒருவர் பெயர் முடிவு செய்யப்படுகிறது. 

பன்னீர்செல்வம்

பணிவுக்கும் விசுவாசத்துக்கும் கிடைத்த முதலமைச்சர் பதவி 

இந்த நிலையில், மாலை 3 மணியில் இருந்தே அதிமுக தலைமைக் கழகத்தில் குவியத் தொடங்கிய எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அமைச்சர்கள் ஒவ்வொருவரின் முகத்திலும் அடுத்த முதலமைச்சராக அம்மா யாரை அறிவிக்கப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு. ஒருவருக்கொருவர் குசுகுசுவெனப் பேசிக்கொள்கிறார்கள். நமக்கு அந்த வாய்ப்பு கிடைக்காதா என்கிற ஏக்கமும் எதிர்பார்ப்புமாக இருக்கும் மூத்த அமைச்சர்கள் சிலர் ஒன்றுகூடி, ரகசியமாக  விவாதித்துக்கொண்டிருக்கிறார்கள்.   

இரவு 7 மணி வாக்கில் தலைமைக் கழகத்துக்கு வருகிறார் ஜெயலலிதா. அடுத்த சில நிமிடங்களில் கூட்ட அரங்குக்குச் சென்ற அவர், வழக்கில் தாம் வெற்றிபெறும் வரை முதலமைச்சர் பதவிக்கு வேறு ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பதை விளக்கி, அப்பதவிக்கு தாம் முடிவு செய்த ஒரு நபரின் பெயரை அறிவிக்கிறார். அவர் பெயர் ஓ.பன்னீர்செல்வம். 

அந்தப் பெயரைக் கேட்டதும், அரங்கில் கூடி இருந்த ஒட்டுமொத்த எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அமைச்சர்களுக்கும் மிகுந்த அதிர்ச்சி. 2001 தேர்தலில் முதல்முறையாக பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ-வான பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டபோதே அதை ஆச்சரியமாகத்தான் பார்த்தார்கள் அதிமுக-வினர். தற்போது முதலமைச்சர் பதவியும் அவருக்கே என்பதை அதிமுக மூத்த அமைச்சர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை. அவ்வளவு ஏன், எம்.எல்.ஏ-க்களுக்கு கூட அதிர்ச்சிதான். 

ஆனால், பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ-வாகவும் அமைச்சராகவும் ஆனதன் பின்னணியை அறிந்தவர்களுக்கு அத்தகைய அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. அமைதியானவர்; அடக்கமானவர்; விசுவாசமாக நடந்துகொள்வார் என பன்னீர்செல்வத்தின் மீது போயஸ்தோட்ட அதிகார மையத்துக்கு ஏற்பட்ட நம்பிக்கையே அவருக்கு இந்தப் பதவியைப் பெற்றுத்தந்தது. வேறு எந்தத் தகுதியும் கருத்தில்கொள்ளப்படவில்லை. 

போயஸ்தோட்டத்தில் தினமும் ஆஜர்  

அன்றைய காலகட்டத்தில் அதிமுக அமைச்சர்கள் யாருக்கும் கோப்புகளில் கையெழுத்திடுவது முதல் டெண்டர்களை முடிவு செய்வதுவரை தன்னிச்சையாக தீர்மானிக்கும் அதிகாரம் எதுவும் கிடையாது. அதற்கான அறிவாற்றலும் ஒரு சில மூத்த அமைச்சர்கள் தவிர வேறு யாருக்கும் கிடையாது.   போயஸ்தோட்டத்திலிருந்து வரும் அறிவுறுத்தல்கள் என்னவோ, அதன்படிதான் செயல்பட வேண்டும். அந்தந்த துறை அதிகாரிகள் அதற்கு உதவுவார்கள். நீட்டிய இடத்தில் கையெழுத்திட வேண்டும். ‘கப்பமும் கட்டிங்கும்’ கரெக்ட்டாக சென்றுவிட வேண்டும். எஞ்சியதுதான் அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும்.

இத்தகைய சூழ்நிலையில்தான் 2001 செப்டம்பர் 21 அன்று, எம்.எல்.ஏ-வாக பதவியேற்ற சில மாதங்களிலேயே  தமிழகத்தின் ஆறாவது முதலமைச்சராகப் பதவியேற்றார் பன்னீர்செல்வம். மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அவரை விடுவித்ததும், ஜெயலலிதா இடைத்தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் முதலமைச்சராகும் வரை, பன்னீர்செல்வம் 2002 மார்ச் 1 வரை முதலமைச்சர் பதவியில் நீடித்தார்.

முதலமைச்சராக இருந்த குறுகிய காலத்தில்  முக்கியத்துவம் வாய்ந்த  வருவாய், பொதுப்பணித்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறைகளை ஓ.பி.எஸ் கையில் வைத்திருந்தார் . அவருக்கான ஆலோசனைகளை அப்போது மூத்த அமைச்சராக இருந்த பொன்னையன்தான் வழங்கியதாகவும், கோப்புகள் போயஸ்தோட்டம் சென்றுவந்ததாகவும்  சொல்லப்பட்டதுண்டு. அதே சமயம், ஓபி.எஸ் அன்றாடம் ஜெயலலிதாவைச் சந்தித்து ஆஜர் போட்டதும் தவறாமல் நடந்தேறின.

ஓ. பன்னீர்செல்வம்
ஓ. பன்னீர்செல்வம்

மீண்டும் இரண்டு முறை முதலமைச்சர்

2006-ல் பெரியகுளம் தொகுதியிலிருந்து மீண்டும் எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓ.பி.எஸ், திமுக ஆட்சிக்கு வந்ததால் எதிர்க்கட்சியில் அமர்ந்தார். 2011-ல் போடிநாயக்கனூர் தொகுதிக்கு மாறி வென்ற அவர், ஜெயலலிதா அமைச்சரவையில் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டு முக்கியப் பொறுப்பை ஏற்றார். 2014-ல் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெற்றதும், மீண்டும் இடைக்கால முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் ஜெயலலிதாவை விடுவித்ததைத் தொடர்ந்து, அவரிடம் மீண்டும் முதலமைச்சர் பதவியை ஒப்படைத்தார். 2016-ல் போடிநாயக்கனூரிலிருந்து மறுபடியும் வென்ற அவர், டிசம்பரில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு மூன்றாவது முறையாக முதலமைச்சரானார்.

அதிமுகவிலிருந்தே நீக்கம்

சில மாதங்களில் சசிகலா குடும்பத்தினர் கொடுத்த நெருக்கடியைத் தொடர்ந்து, அவருக்கு எதிராக போர்க்குரல் எழுப்பி ஜெயலலிதா சமாதியில் உண்ணாவிரதம் இருந்தது, அதனைத் தொடர்ந்து அதிமுக மீண்டும் இரண்டாக பிளவுபட்டது, 2017-ல் அதிமுக அணிகள் இணைந்ததும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் துணை முதலமைச்சராக  பதவியேற்றதெல்லாம் பன்னீர்செல்வத்தின் அரசியல் அத்தியாயத்தின் பரபரப்பான நிகழ்வுகள்.

பின்னர், 2021-ல் போடிநாயக்கனூர் தொகுதியிலிருந்து மீண்டும் எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், ஆட்சி அதிகாரம் கையைவிட்டுப் போனது. தோல்விக்கு யார் காரணம் என்பதில் தொடங்கி, கட்சியைக் கைப்பற்றுவதில் எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட மோதலில், ‘துரோகி’ முத்திரை குத்தப்பட்டு, அதிமுகவிலிருந்தே வெளியேற்றப்பட்டு, இன்று திமுக-வில் ஐக்கியமாகி, எம்.எல்.ஏ சீட்டும் பெற்றிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்! 

இப்போது, இந்தக் கட்டுரையின் முதல் வரியை மீண்டும் வாசித்துக்கொள்ளுங்கள்! 

(தொடரும்)

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`5 லட்சத்திற்கு வங்கிக் கடன்; அசையா சொத்து ரூ.39 லட்சம்' – வெளியான சீமானின் வேட்புமனு விவரம்

காரைக்குடியில் போட்டியிடுவதற்காக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் இன்று (...

Vijay: `ஆனந்துக்கு ரூ.3 கோடி கடன்; தாய், தந்தைக்கு.!' – வேட்புமனுவில் விஜய் கொடுத்த கடன் விவரங்கள்

பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் இன்று வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்....

'கொளத்தூருக்குள் செல்லவே முடியவில்லை; வில்லிவாக்கத்தில் பிரசாரம் கேன்சல்!' – என்ன சொல்கிறது தவெக?

தவெக தலைவர் விஜய் இன்று சென்னையில் மூன்று இடங்களில் பிரசாரம் செய்ய...

`உடலா மனமா எது அடையாளம்?'- திருநர் பாலின உரிமையை கேள்விக்குள்ளாக்குகிறதா அரசு?- Trans amendment bill

திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) திருத்த மசோதா 2026மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்துள்ள...