வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில், அமைப்புரீதியாக ஐந்து மாவட்டக் கழகங்களாக அ.தி.மு.க-வின் கட்டமைப்பு இருக்கிறது. திருப்பத்தூர் மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணி உட்பட ஐந்து மாவட்ட கழகச் செயலாளர்களும் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டனர். அவர்களில், ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டச் செயலாளரான சு.ரவி மட்டுமே அரக்கோணம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார். மற்ற நால்வரும் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை இழந்தனர்.
இந்த நிலையில், வரும் தேர்தலிலும் அ.தி.மு.க-வின் ஐந்து மாவட்டச் செயலாளர்களும் மீண்டும் போட்டியிட ஆயத்தமாகி, பிரசாரக் களத்துக்கும் சென்றுவிட்டனர். `களம் எப்படி இருக்கிறது?’ என்பதை அவர்களின் தொகுதிகளில் இறங்கி அலசினோம்.
சிக்ஸர் அடிக்கும் அப்பு… டக்அவுட் ஆகும் கார்த்தி?
வேலூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரான எஸ்.ஆர்.கே.அப்பு மீண்டும் வேலூர் தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த தேர்தலில் 9,181 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவைச் சந்தித்த அப்புவை, இந்த முறை தி.மு.க-வின் சிட்டிங் எம்.எல்.ஏ கார்த்திகேயனின் அட்ராசிட்டியே மேலேற்றிவிடும் என்கிறார்கள்.
`மாநகராட்சியைக் குட்டிச்சுவராக்கியது, கூட்டணியில் இருக்கும் வி.சி.க-வினருடன் தொடர்ந்து மோதல் போக்கில் ஈடுபடுவது’ என கார்த்திகேயன் மீது குற்றச்சாட்டுகள் குவிந்துகிடக்கின்றன. கடந்த 19-ம் தேதி, தேர்தல் விதிகளை மீறி பரிசுப் பொருள்கள் வழங்கியதாக கார்த்திகேயனின் ஆதரவாளரான மேயர் சுஜாதா உட்பட மூன்றுபேர் மீது சத்துவாச்சாரி போலீஸார் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.
இவையெல்லாம் தி.மு.க தலைமையின் கவனத்திற்குச் செல்லவே, 20-ம் தேதி நடைபெற்ற நேர்காணலின்போது, `வேலூர் தொகுதியை கூட்டணிக்குக் கொடுத்துவிடலாமா?’ என்று ஸ்டாலின் கேட்டதற்கு, `சரிங்க, தலைவரே’ என்று கார்த்திகேயன் தலையாட்டிவிட்டு வந்ததுதான் உடன்பிறப்புகளுக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்திருக்கிறது. கடந்த இரண்டு தேர்தல்களாகத்தான் தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் வேலூர் தொகுதியில் நேரடியாக மோதுகின்றன. அதற்கு முன்புவரை இரண்டு கட்சிகளுமே மாறி மாறி கூட்டணிக்கே வேலூரைத் தாரைவார்த்தன. எனவே, `மீண்டும் அந்தவொரு சூழலை உருவாக்காமல், அ.தி.மு.க-வுடன் தி.மு.க நேரடியாக மோத வேண்டும்’ என்று எதிர்பார்க்கிறார்கள் வேலூர் உடன்பிறப்புகள். தற்போதைய சூழலில், களம் எஸ்.ஆர்.கே.அப்புக்கு சாதகமாகவே இருக்கிறது என்கிறார்கள்.
வேலழகன் வெறுப்பு பிரசாரம்… நந்தகுமார் சாதுர்யம்!
வேலூர் புறநகர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரான த.வேலழகன் மீண்டும் அணைக்கட்டு தொகுதியில் போட்டியிட முடிவு செய்து, கடந்த ஜனவரி மாதமே தொகுதிக்குள் சோஷியல் மீடியா டீமை இறக்கி, சிட்டிங் எம்.எல்.ஏ-வான தி.மு.க மாவட்டச் செயலாளர் ஏ.பி.நந்தகுமாருக்கு எதிராக கடுமையான தனிமனித தாக்குதலையும், வெறுப்பு பிரசாரத்தையும் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறார். கடந்த தேர்தலில் 6,360 வாக்குகள் வித்தியாசத்தில் தொகுதியை தக்கவைத்த நந்தகுமாரே மூன்றாவது முறையாகவும் களமிறங்குகிறார். தொகுதி வளர்ச்சிப் பணிகளை மேடைக்கு மேடை பேசி, தனக்கெதிரான வெறுப்பு பிரசாரத்துக்கும் பதிலடி தந்துகொண்டிருக்கிறார். தற்போதைய சூழலில், களம் நந்தகுமாருக்குச் சாதகமாகவே இருக்கிறது.
பல்டி அடித்த சுகுமார்… படுஅப்செட்டில் பாட்டாளிகள்!
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளரான எஸ்.எம்.சுகுமார், கடந்த தேர்தலில் ராணிப்பேட்டை தொகுதியில் தி.மு.க மாவட்ட செயலாளர் காந்தியோடு மோதி 16,498 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். தற்போது அமைச்சர் பலத்துடன் வலம் வரும் காந்தி, மீண்டும் ராணிப்பேட்டையில் களமிறங்குவது உறுதி என்பதால், தொகுதியை த.மா.கா-வுக்குத் தள்ளிவிட்டுவிட்டு, பக்கத்துத் தொகுதியான ஆற்காடுக்குத் தாவியிருக்கிறார் சுகுமார். இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் ராணிப்பேட்டை தொகுதியில் தாமரைச் சின்னத்தில் போட்டியிட த.மா.கா முடிவு செய்திருப்பதால், தி.மு.க-வுக்கே களம் சாதகமாக அமைந்திருக்கிறது.
கடந்த முறை ஆற்காடு தொகுதியில் 19,958 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை இழந்த பா.ம.க., மீண்டும் தொகுதியை எதிர்பார்த்துக் காத்திருக்க, சுகுமாரின் திடீர் வரவால் படுஅப்செட்டில் இருக்கிறார்கள். பாட்டாளிகளின் அதிருப்தியும், விளாப்பாக்கம், கலவை, திமிரி பேரூராட்சிகள் மற்றும் ஆற்காடு நகர்ப் பகுதிகளில் வாழும் அகமுடைய முதலியார், செங்குந்த முதலியார் பிரிவினரிடையே போதிய வரவேற்பு இல்லாததும் சுகுமாருக்கு பின்னடைவாகத் தெரிகிறது. தி.மு.க-வில் மாவட்ட பொருளாளரும் தொழிலதிபருமான ஏ.வி.சாரதி களமிறக்கப்பட்டால், சுகுமாரின் நிலை பரிதாபமாகிவிடும் என்பதே தற்போதைய கள நிலவரம்.

மகிழ்ச்சியில் சு.ரவி… ஷாக் கொடுக்கும் தி.மு.க!
அரக்கோணம் சட்டமன்றத் தொகுதியில் தொடர்ந்து மூன்று முறையாக வெற்றிபெற்று தக்கவைத்துக்கொண்டிருக்கும் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளரான சு.ரவி, மீண்டும் களம் காண்கிறார். கடந்த தேர்தலில் தி.மு.க கூட்டணியில் வி.சி.க-வின் கௌதம சன்னாவைவிட 27,169 வாக்குகள் அதிகமாகப் பெற்ற மகிழ்ச்சியில் இருக்கும் சு.ரவிக்கு `ஷாக்’ தரும் வகையில், தி.மு.க-வில் நெமிலி ஒன்றியச் சேர்மன் பெ.வடிவேலுவின் மனைவி பவானி உட்பட 48 பேர் விருப்ப மனு அளித்திருக்கின்றனர்.
அவர்களிடம் ஸ்டாலினும் நேர்காணல் நடத்தி முடித்திருக்கிறார். இந்த முறை கூட்டணிக் கட்சிகள் கேட்காததால், தி.மு.க-வே நேரடியாக களமிறங்க முடிவு செய்துவிட்டது. உதயசூரியன் சின்னத்தில் உள்ளூர் வேட்பாளர் களமிறங்கும் பட்சத்தில், சு.ரவி ஆட்டம் கண்டுவிடுவார் என்பதே கள நிலவரம்.
வீரமணிக்கு வெற்றி முகம்… தெறித்து ஓடும் தேவராஜி!
அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் திருப்பத்தூர் மாவட்டச் செயலாளருமான கே.சி.வீரமணி நான்காவது முறையாக ஜோலார்பேட்டை தொகுதியில் களமிறங்கியிருக்கிறார். கடந்த தேர்தலின்போது தி.மு.க மாவட்டச் செயலாளர் தேவராஜியிடம் வெறும் 1091 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இந்த முறை, வீரமணி வைட்டமின்களை அள்ளி இறைத்து தொகுதிக்குள் தனக்கான ஆதரவு அலையை உருவாக்கி வைத்திருக்கிறார். அதனால் வாணியம்பாடி தொகுதிக்கு மாற விருப்பப்பட்ட தேவராஜியிடம் `ஜோலார்பேட்டையில் போய் வேலையைப் பார்’ என்று தி.மு.க தலைமை `குட்டு’ வைத்து அனுப்பியதால், பின்னங்கால் பிடரியில் அடிக்க தொகுதிப் பக்கம் ஓடிச்சென்று தீவிர பிரசாரத்திலும் ஈடுபட்டிருக்கிறார். தற்போதைய சூழலில், களம் வீரமணிக்கு சாதகமாகவே இருக்கிறது.!




