தஞ்சாவூரில் அ.ம.மு.க நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது, “முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தை நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்த போது அரசியலும் பேசினோம். அமமுக, பழனிசாமி தலைமையில் இணைய வேண்டிய அவசியமே கிடையாது. ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒன்றிணைந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்தும் விதமாகச் செயல்பட்டால் தான் திமுக என்கிற தீயசக்தியையும், அந்த கூட்டணியையும் வீழ்த்த முடியும்.
அதிமுக, இரட்டை இலை சின்னம், கட்சி அலுவலகம் பழனிச்சாமியிடம் இருப்பதால் பத்து முறை தொடர் தோல்விகளைச் சந்தித்திருப்பதுடன் கட்சி பலவீனமாகியும் வருகிறது. இது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. இரட்டை இலை சின்னம், பண பலம் இருப்பதால் அங்குள்ள நிர்வாகிகள் தொண்டர்கள் அவருக்குக் காவடி தூக்கினால் 2026 தேர்தலுக்குப் பிறகு கட்சியே இல்லாமல் செய்து விடுவார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு உள்ளது. தன் மீது வழக்கு வரக்கூடாது என்பதற்காகக் கட்சியைக் கேடயமாகப் பயன்படுத்தி வருகிறார். திமுகவிற்குப் பயந்து கொண்டு நாடாளுமன்றத் தேர்தல் உட்பட திமுக வெற்றி பெறுவதற்கு மறைமுகமாக இரட்டை இலையைப் பயன்படுத்தி வருகிறார்.
கட்சியினர் விழித்துக் கொள்ளவில்லை என்றால் உங்கள் மீது பெரிய பழி வரும். தேர்தலுக்குப் பிறகு நாங்கள் சேர்ந்து கட்சியை மீட்டுத்தர வேண்டிய நிலை வரும். தீர்க்கதரிசியான அண்ணா இருந்திருந்தால் இந்த காலசூழ்நிலையில் மூன்றாவது ஒரு மொழி வேண்டும் என்பதை ஒத்துக்கொண்டிருப்பார் என நான் பேசினேன். அறிஞர் அண்ணாவின் நேர்காணல் என்கிற புத்தகத்தில் படித்துள்ளேன். அதன் அடிப்படையில் அவர் சொல்லியிருப்பதை நான் பேசினேன். அண்ணா முதல்வராக இருந்தபோது எங்களுடைய மொழியும் கலாசாரமும் காப்பாற்றப்பட வேண்டும். இந்தியக் கூட்டாட்சிக்குள் எங்கள் மாநிலத்திற்கு உரிய அரசியல் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். எங்களுடைய பொருளாதார முன்னேற்றத்திற்கு உறுதிமொழி தேவை.
தனி நாடாகப் பிரிந்தால்தான் இத்தகைய பாதுகாப்பு கிடைக்கும் என முதலில் நினைத்தோம். ஆனால் சீன படையெடுப்பிற்குப் பிறகு இந்தியாவின் ஒரு பகுதியாகச் செயல்படுவதன் அவசியத்தை உணர்ந்தோம். காலப்போக்கில் அனைத்து இந்தியாவிற்கும் ஒரு பொது தொடர்பு மொழி உருவாக வேண்டும். அதுவரை ஆங்கிலமே இணைப்பு மொழியாக நீடிக்க வேண்டும். 14 தேசிய மொழிகளுக்கும் சம மதிப்பு அளிக்கப்பட வேண்டும் என்று அண்ணா குறிப்பிட்டுள்ளார். அனைத்து இந்தியாவிற்கும் ஒரு பொது தொடர்பு மொழி உருவாக வேண்டும் என அண்ணா கூறியிருக்கிறார்.
அண்ணாவை நாம் பின்பற்றுகிறோம். அவர் பெயரைச் சொல்லி கட்சி, ஆட்சி நடத்துகிறோம். அண்ணா சொன்னதை நான் சொல்லியிருக்கிறேன். 60 ஆண்டுகளுக்கு முன்பு அண்ணா சொன்ன அந்த வார்த்தைகள் மெய்யாகிறது. எனக்கு ஆங்கிலம் தெரியும். ஆனால் இந்தி தெரியாததால் டெல்லியில் நான் பட்ட கஷ்டம் எனக்குத் தெரியும். தமிழ்நாட்டை விட்டு வெளியே போகமாட்டோம் என முடிவெடுத்தவர்களுக்கு மூன்றாவது மொழி தேவையில்லை. அண்ணா இந்தியைச் சொல்லவில்லை. ஆனால் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

அரசுப் பள்ளிகளில் மட்டும் இரண்டு மொழி உள்ளன. ஆனால் தனியார்ப் பள்ளிகளில் விரும்பாவிட்டாலும் மூன்றாவது மொழியாக இந்தி படிக்கிறார்கள். ஏழை, எளிய மாணவர்கள்தான் அரசுப் பள்ளிகளில் படிக்கின்றனர். நான் பல மாவட்டங்களுக்குச் செல்லும் போதெல்லாம் சாதாரண பொதுமக்களைச் சந்தித்து கருத்து கேட்டேன். மூன்றாவது மொழி படிப்பதில் என்ன தவறு இருக்கிறது என்றுதான் அவர்கள் என்னிடத்தில் கேட்கிறார்கள். பீகாரிலிருந்து வந்து விவசாயக் கூலி வேலை செய்கின்றனர். நாம் இந்தி மொழியைக் கற்றால் என்ன தவறு என்கின்றனர்.
நான் பா.ஜ.க கூட்டணியில் இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் அழுத்தமாகப் பேசியிருப்பேன். இது மொழி திணிப்பு இல்லை. அரசின் கல்விக்கொள்கை. தாய் மொழி, அதனுடன் ஆங்கிலம் படியுங்கள் மூன்றாவதாக ஒரு மொழியைப் படியுங்கள் என்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை அது இந்தியாக இருந்தால் இந்தியா முழுவதும் தொடர்பு மொழியாக இருப்பதற்குப் பயனுள்ளதாக இருக்கும் என்கிறேன். இதை மறுப்பதும், ஏற்றுக்கொள்வதும் உங்களுடைய சொந்தக் கருத்து. காலப்போக்கில் அனைத்து இந்தியாவிற்கும் ஒரு இணைப்பு மொழி தேவை என்பதை அண்ணா சொல்லியிருக்கிறார். அவரின் பெயரைச் சொல்லி யாரும் ஏமாற்ற முடியாது. இந்தி மொழி ஈஸியான மொழி. இந்தி படித்தால் எல்லா மாநிலத்தையும் ஈஸியாக தொடர்பு கொள்ளலாம்” என்றார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
