23
November, 2026

A News 365Times Venture

23
Monday
November, 2026

A News 365Times Venture

ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் 'பவர்' யார்? 3-வது இடத்தில் இந்தியா; சறுக்கிய ட்ரம்ப்.. செக் வைத்த சீனா

Date:

ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் அதிகாரக் களத்தில் யார் கரம் ஓங்கியிருக்கிறது என்பதை ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற சர்வதேச கொள்கை ஆய்வு நிறுவனமான ‘லோவி இன்ஸ்டிடியூட்’ (Lowy Institute), தனது ‘2026 ஆசியா பவர் இண்டெக்ஸ்’ (Asia Power Index 2026) அறிக்கையை வெளியிட்டு சர்வதேச அரசியல் அரங்கில் பரபரப்பைக் கூட்டியுள்ளது.

இந்தப் பட்டியலில் இந்தியா தனது 3-வது இடத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கும் அதேவேளையில், வல்லரசுகளான அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான இடைவெளி வரலாறு காணாத அளவுக்குச் சுருங்கியிருப்பதுதான் இந்த ஆண்டின் ஹாட் டாபிக்!

அமெரிக்கா, சீனா!

அமெரிக்கா Vs சீனா: குறைந்த இடைவெளி!

ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள 27 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் பொருளாதாரம், ராணுவ பலம், ராஜதந்திர செல்வாக்கு உள்ளிட்ட 8 முக்கிய அளவுகோல்களின் கீழ், 131 குறியீடுகளைக் கொண்டு இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

 அமெரிக்கா 78.9 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. சீனா: 73.6 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. இந்தியா: 40.5 புள்ளிகளுடன் 3-வது இடத்தைத் தக்கவைத்துள்ளது (கடந்த ஆண்டை விட 0.5 புள்ளிகள் அதிகம்). ஜப்பான்: 38.6 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் இருக்கிறது.

2018-ம் ஆண்டு இந்தக் குறியீடு தொடங்கப்பட்டதிலிருந்து இல்லாத அளவிற்கு, அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வித்தியாசம் வெறும் 5.3 புள்ளிகளாகக் குறைந்துள்ளது. ராணுவத் திறனிலும் சீனா, அமெரிக்காவின் கழுத்தை நெரிக்கும் அளவிற்கு நெருங்கிவிட்டது.

மோடியின் ‘பிராந்திய’ பாய்ச்சலும், ‘உலகளாவிய’ சறுக்கலும்!

இந்தியாவைப் பொறுத்தவரை, சீனாவின் ஒட்டுமொத்த அதிகாரம் நம்மை விட அதிகமாக இருந்தாலும், 2018-க்குப் பிறகு சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான அதிகார இடைவெளி மிகக் குறைந்த அளவிற்குச் சுருங்கியிருப்பது ஆறுதலான விஷயம்.

பிராந்தியத் தலைமைத்துவ மதிப்பீட்டில் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு அடுத்தபடியாக ஆசியாவின் 2-வது செல்வாக்கு மிக்க தலைவராக முன்னேறியுள்ளார். ஆனால், ஒரு சின்ன ‘ட்விஸ்ட்’டும் இருக்கிறது. வளைகுடா போரின் போது ஈரான் கடற்படைக் கப்பலை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கடித்த சம்பவத்திற்கு இந்தியா மென்மையான எதிர்வினையாற்றியது போன்ற காரணங்களால், மோடியின் உலகளாவிய தலைமைத்துவம் மற்றும் ராஜதந்திர லட்சியம் குறித்த பார்வைகளில் சற்று சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இந்தியாவின் ‘பிளஸ்’ மற்றும் ‘மைனஸ்’ என்ன?

 ராஜதந்திர பலம்: பெரும்பாலான நாடுகள் தடுமாறிய ஆண்டிலும், இந்தியா தனது ராஜதந்திர செல்வாக்கில் 70.3 புள்ளிகளுடன் கம்பீரமாக நிற்கிறது.

 பாதுகாப்பு & வர்த்தகம்: தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு பிரம்மோஸ் ஏவுகணை விற்பனை மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு மூலம் பாதுகாப்புக் கூட்டமைப்பில் இரண்டு இடங்கள் முன்னேறி 9-வது இடத்தையும் (18.6 புள்ளிகள்), பிராந்திய வர்த்தக உறவுகளில் இரண்டு இடங்கள் முன்னேறி 7-வது இடத்தையும் இந்தியா பிடித்துள்ளது. கலாசாரச் செல்வாக்கு 43.8 புள்ளிகளாகவும், எதிர்கால வளங்கள் 56.2 புள்ளிகளாகவும் உள்ளன.

 பொருளாதாரச் சவால்: பொருளாதாரத் திறன் புள்ளிகள் 26.4 ஆகச் சற்று சரிந்துள்ளது. ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கணக்கீட்டு முறை மாற்றங்கள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளில் ஏற்பட்ட சுமார் 20 பில்லியன் டாலர் சரிவு ஆகியவை நமது ஒப்பீட்டு ஜி.டி.பி (GDP) நிலையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி

சீனா வளரவில்லை… அமெரிக்காதான் சறுக்கியது!

இந்த அறிக்கையின் மிக முக்கியமான கவனிப்பு இதுதான்: சீனாவின் அபரிமிதமான வளர்ச்சியை விட, அமெரிக்காவின் சுயசறுக்கல்களே சீனாவை முதலிடத்திற்கு நெருக்கமாகக் கொண்டு வந்துள்ளன.

2026-ம் ஆண்டில் அமெரிக்காவின் ராஜதந்திர செல்வாக்கு 6 புள்ளிகள் சரிந்து 76.7 ஆகக் குறைந்துள்ளது. தொடர்ந்து 4-வது ஆண்டாகச் சரிவைச் சந்தித்து வரும் அமெரிக்காவுக்கு, 2018-க்குப் பிறகு ஒரே ஆண்டில் ஏற்பட்ட மிகப்பெரிய அடி இது.

ட்ரம்ப் நிர்வாகத்தின் ஒருதலைப்பட்சமான வெளியுறவுக் கொள்கை, வர்த்தக வரிகள், ஈரானுடனான போர், சர்வதேச அமைப்புகளுடனான மோதல் போக்கு, தைவானுக்கு ஆயுத விற்பனை மற்றும் தென் கொரியாவுடனான ராணுவப் பயிற்சிகள் குறித்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உதிர்த்த கருத்துக்கள் ஆகியவை ஆசிய நாடுகளிடையே அமெரிக்கத் தலைமை மீதான நம்பிக்கையைப் பலவீனப்படுத்திவிட்டன.

சுருக்கமாகச் சொன்னால், அமெரிக்காவின் தடுமாற்றம் சீனாவுக்குச் சாதகமாக மாறியிருக்க, ஆசியாவின் ‘முக்கிய சக்தியாக’ இந்தியா தனது இடத்தைத் தக்கவைத்து நிதானமாக முன்னேறி வருகிறது!

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ குறுஞ்செய்தி அனுப்பினாரா? இல்லையா?'- பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாசமாக...

கள்ளக்குறிச்சி விவகாரம்: `எங்களிடம் புகார் வந்தது!' – தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம்

கள்ளக்குறிச்சி கலெக்டருக்கு அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வாட்ஸ்அப்பில் ஆபாச மெசேஜ்...

'காங்கிரஸ் MLAக்களுடன் மட்டும் 45 நிமிட ஆலோசனை!- விஜய்யின் எம்.எல்.ஏக்கள் மீட்டிங்கில் என்ன நடந்தது?

தவெக அரசு ஆதரவு தெரிவிக்கும் கட்சிகளின் எம்.எல்.ஏக்களை முதல்வர் விஜய் இன்று...

'திருப்பரங்குன்றத்தில் இருப்பது நில அளவைக்கல்தான்!' – தமிழக அரசு வெளியிட்ட ஆதாரம்!

கார்த்திகை தீப தினமான நாளை திருப்பரங்குன்றம் மலையிலுள்ள தூணில் தீபம் ஏற்றிக்...