23
April, 2025

A News 365Times Venture

23
Wednesday
April, 2025

A News 365Times Venture

"அமைச்சர் பதவியா, ஜாமீனா?" – காட்டமான உச்ச நீதிமன்றம்; இக்கட்டான நிலையில் செந்தில் பாலாஜி

Date:

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையைக் கவனிக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி, அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் அமைச்சராக இருந்தபோது அரசு வேலை வாங்கித் தருவதாக பணமோசடியில் ஈடுபட்டதாக அவர்மீது புகார்கள் எழுந்தன.

அதில், வழக்குப்பதிவு செய்து விசாரித்துவந்த அமலாக்கத்துறை, 2023 ஜுன் மாதம் நள்ளிரவில் அவரைக் கைதுசெய்தது. அதன்பிறகு, விசாரணை என்ற சிறையில் அடைக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் மறுத்தது.

செந்தில் பாலாஜி – ஸ்டாலின்

ஒரு கட்டத்தில், அமைச்சர் பதவியிலிருந்தும் அவர் விலக்கப்பட்டார். பின்னர், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மேல்முறையீட்டில், அமலாக்கத்துறையின் செயல்பாட்டைச் சுட்டிக்காட்டி கடந்த செப்டம்பரில் உச்ச நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

அதன்படி, 15 மாதங்களுக்குப் பிறகு சிறையிலிருந்து வந்த செந்தில் பாலாஜியைத் தியாகி என்று வரவேற்ற ஸ்டாலின், அடுத்த மூன்றாவது நாளே அவர் வகித்த அதே இலாகாவை அவருக்கு ஒதுக்கி அமைச்சராக்கினார்.

மீண்டும் அமைச்சர்… மீண்டும் விசாரணை!

இதனால், செந்தில் பாலாஜி மீதான விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில், அவரை மீண்டும் அமைச்சராக்கியிருப்பது மூலம், விசாரணையில் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தக் கூடும் என்றும், எனவே ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் வித்யா குமார் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

கூடவே, செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி அமலாக்கத்துறையும் தனியாக மனு தாக்கல் செய்தது. இந்த மனுக்கள் மொத்தமாக உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி அபயா எஸ் ஓகா தலைமையிலான அமர்வில் நடை பெற்றுவருகிறது.

இதில், முந்தைய விசாரணையின்போது, செந்தில் பாலாஜி அமைச்சராகத் தொடர்கிறாரா இல்லையா என்பதைத் தெரிவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற முடியாது!

இதில் செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், முகுல் ரோஹத்கி ஆகியோர் ஆஜராகினர். வாதத்தின்போது, “செந்தில் பாலாஜியின் அதிகாரம், விசாரணையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அச்சம் இருந்தால் விசாரணையை மாநிலத்திற்கு மாற்றலாம்” என கபில் சிபல் கூறினார்.

அதற்கு நீதிபதி அபயா எஸ் ஓகா, “உங்கள் நிலைப்பாட்டைத் தெரிவிக்க மூன்று முறை வாய்ப்புகள் வழங்கி இருந்தோம் ஆனால் அதை நீங்கள் பயன்படுத்தவில்லை இந்த வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றுவது என்பது இயலாத காரியம்.

ஏனென்றால் ஆயிரக்கணக்கான சாட்சிகள் விசாரிக்கப்பட வேண்டி இருக்கிறது. அது பெரும் சிரமத்தையும் ஏற்படுத்தும்” என்றார்.

சாட்சிகள் வராதபோதே எங்களுக்குத் தெரிகிறது!

அதைத்தொடர்ந்து, “ஜாமீன் வழங்கியபோது அமைச்சராகத் தொடரக்கூடாது போன்ற நிபந்தனைகள் எதையும் உச்ச நீதிமன்றம் விதிக்கவில்லை” என செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் கூறியதைக் கேட்டுக் கோபமடைந்த நீதிபதி, “உங்களுக்கு நாங்கள் ஜாமீன் வழங்கியது வழக்கின் தன்மைக்காக அல்ல, அரசியல் சாசனப் பிரிவு 21-ன் படி அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகத்தான்.

அதற்காக வழக்கில் நீங்கள் தாக்கத்தை ஏற்படுத்துகிறீர்கள் என்பதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. மிகவும் அதிகாரமிக்க அமைச்சர் பொறுப்பில் நீங்கள் தற்பொழுது தொடர்கிறீர்கள்.

இது இந்த நீதிமன்றத்தின் மூலமாக இந்த வழக்கில் சாட்சிகளாக இருப்பவர்களுக்கு என்ன மாதிரியான செய்தி தரப்படுகிறது. நாங்கள் உங்களுக்கு ஜாமினை வழங்கி இருக்கக் கூடாது. ஆனால், மாறும் சூழலை நாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

விசாரணையின் அறிக்கையில் தற்பொழுது நடைபெற்று வரும் குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட நபர் அமைச்சராக இருந்தபோது அவரது பங்கும் இருந்திருக்கிறது என கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதை எப்படிப் புறக்கணிக்க முடியும்.

சாட்சிகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், அதை நாங்கள் ஏற்க முடியாது. சாட்சிகள் சாட்சியமளிக்க நீதிமன்றத்திற்கு வராமல் இருக்கிறார்கள் என்பதிலிருந்து நிலைமையை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது.

பதவியா… சுதந்திரமா?

உங்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என எதிர் மனுதாரர்கள் முன் வைத்த குற்றச்சாட்டுகளைப் புறக்கணித்து உங்களுக்கு நாங்கள் ஜாமீன் வழங்கினோம். ஆனால், மீண்டும் அமைச்சராகப் பொறுப்பேற்று, நாங்கள் செய்தது தவறு என நீங்களே சொல்லி விட்டீர்கள்.

அதை நாங்களும் ஒப்புக்கொள்கிறோம். சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தில் இப்பொழுதெல்லாம் ஜாமீன் கிடைப்பது என்பது மிகவும் கடினமான விஷயம்.

உயர்நீதிமன்றம் உத்தரவு

இருப்பினும், அதையும் மீறி உங்களுக்கு நாங்கள் ஜாமீன் கொடுத்தால், நீங்கள் மீண்டும் அமைச்சராகப் பொறுப்பேற்று இந்த நீதிமன்றத்தை வேறு விதமாகக் கையாண்டிருக்கிறீர்கள்.

எனவே, பதவியா, சுதந்திரமா (ஜாமீன்) என்பதை நீங்கள்தான் செய்ய வேண்டும். நீங்கள் என்ன தேர்வு செய்ய விரும்புகிறீர்கள்?” என்று இறுதியாகக் கேட்டார். அதையடுத்து, திங்களன்று பதிலளிப்பதாக செந்தில் பாலாஜி தரப்பு கூறவே, விசாரணை திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

சமாதானபுரம்: அகற்றப்பட்ட பேருந்து நிறுத்த நிழற்குடைகள் அமைக்கப்படுமா? – வெயிலில் சிரமப்படும் பயணிகள்

திருநெல்வேலி நகரின் முக்கிய பகுதியான சமாதானபுரத்தில் அமைந்திருக்கும் பேருந்து நிறுத்தத்துக்கு தினமும்...

Pahalgam Attack: பின்னணியில் `TRF’ தீவிரவாதக் குழு… யார் இவர்கள்? | முழுத் தகவல்

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இந்தியாவிற்கு வந்திருக்கிறார். இந்தியப் பிரதமர் மோடி...

Pahalgam Attack: 'உளவுத்துறையின் தோல்வி இது; மோடி அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும்..' – அசாதுதின் ஓவைசி

காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட ...