அண்ணா அறிவாலயத்தில் வடக்கு மண்டல வழக்கறிஞர்கள் அணி ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தான் கைது செய்யப்பட்டபோது நடந்தது குறித்தும், தவெக அரசை விமர்சித்தும் பேசியிருக்கிறார்.
அவர் பேசுகையில், “பொதுவாக மற்ற இயக்கங்கள், கைது பண்றாங்கன்னு சொன்ன உடனே ரொம்ப சீரியஸ் ஆயிடுவாங்க. ஆனால் மிசா, எமர்ஜென்சி என எத்தனையோ அடக்குமுறைகளைப் பார்த்த திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கலைஞரின் உடன்பிறப்புகளாகிய நாம், இதற்கெல்லாம் பயப்படுவோமா?
இந்த மாதிரி கைது நடவடிக்கைகளை எல்லாம் ரொம்பவே சாதாரண விஷயமாக எடுத்துக்கொண்டுதான் நாம் போய்க்கொண்டிருந்தோம். கைதாகிப் போகும்போது ஏதோ ஜாலியாக ஒரு ட்ரிப் போவது மாதிரிதான் போனோம். நான், சேகர் பாபு, மா. சுப்பிரமணியன் அண்ணன் எல்லோரும் போனோம்.
அப்போ நான் அவங்ககிட்ட, “மக்களோட வரிப் பணத்துல அரசாங்கம் நமக்கு ஒரு சூப்பரான ரோட் ஷோ அமைத்துக் கொடுத்திருக்கு!”னு சொன்னேன். போகும்போது நம்ம உடன்பிறப்புகள் ஆங்காங்கே என்னோட வழியை மறித்து, எங்களுக்கு மட்டும் இல்லாமல், கூட வந்த காவல்துறை அதிகாரிகளுக்கும் சேர்த்து காஃபி, டீ, ஜூஸ்னு கரெக்ட்டா உபசரித்துக்கொண்டே வந்தார்கள்.
அதேபோல, ‘சொல்லி அடிக்கிற மாதிரி’ நான் தஞ்சாவூர் போய்ச் சேர்வதற்குள், நீதிமன்றம் மூலமாக என்னோட கைது நடவடிக்கையை ரத்து செய்ய வைத்ததும் நீங்கள்தான்.
இதில் ரொம்ப முக்கியமான விஷயம் என்னவென்றால்… ஆளுங்கட்சியே கோர்ட்டுக்குப் போய், “எதிர்க்கட்சித் தலைவரைப் போய் கைது பண்ற ஐடியா எல்லாம் எங்களுக்கு இல்லைங்க… சும்மா விசாரித்துவிட்டு விட்டுவிடுவோம்”னு சொன்னார்கள்.
அதற்கு நான், “ஏங்க, நேத்து நைட்டுதான் நான் தஞ்சாவூர்ல இருந்து வந்தேன். கைது பண்ணப் போறோம்னு முன்னாடியே சொல்லியிருந்தால் நான் அங்கேயே தங்கியிருப்பேனே. எனக்கு இன்னைக்கு இரண்டு மீட்டிங் வேற இருந்தது, அதையும் கெடுத்துட்டீங்க”னு சொன்னேன்.

இப்படி அரசாங்கத்திற்கு எந்தச் செலவும் இல்லாமல், மக்களோட வரிப் பணத்துல நாம் ஒரு பிரமாண்டமான ரோட் ஷோ நடத்தி முடித்திருக்கிறோம். அதற்காக நாம் இந்த அரசுக்கு ஒரு நன்றியைச் சொல்லித்தான் ஆகவேண்டும்.
தேர்தலுக்கு அப்புறம் கொஞ்சம் சோர்ந்து போயிருந்த நம்ம உடன்பிறப்புகள், இந்த ‘டம்மி அரசு’ பண்ணின வேலையால, அவர்களின் தயவால மறுபடியும் பழைய ஃபார்முக்குத் திரும்பியிருக்கிறார்கள்.
டம்மி முதலமைச்சர், கேடுகெட்ட அரசு, எதற்கும் தைரியம் இல்லை, விவசாயிகளை நடுரோட்டில் விட்டுவிட்டீர்கள் என விமர்சனம் செஞ்சேன். இதற்குத்தான் கைது செய்ய வந்திருக்காங்கனு என நினைச்சேன்.
ஆனால் அதற்கு எந்த ரியாக்ஷனும் கொடுக்காம, காவிரியில் தண்ணீர் வர வேண்டும் எனச் சொன்னதுக்காக கைது செய்யப்பட்டேன்,” எனப் பேசியிருக்கிறார்.




