சென்னையின் மிக முக்கிய மற்றும் பரபரப்பான வழித்தடங்களில் ஒன்றான அண்ணா சாலை, எப்போதும் மக்கள் நடமாட்டமும் வாகனப் போக்குவரத்தும் நிறைந்து காணப்படும் பகுதியாகும்.
இப்பாதையை தினமும் தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர்கள் (IT Employees), பள்ளி-கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் தங்களின் முக்கிய வழித்தடமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால், சமீபகாலமாக அண்ணா சாலையின் முக்கிய நடைபாதைகளில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளாலும், அலட்சியமாகப் போடப்பட்டுள்ள கேபிள் ஒயர்களாலும் பொதுமக்கள் தங்களின் அன்றாடப் பயணத்தில் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
நடைபாதை ஆக்கிரமிப்பு: தடையின்றி நடக்க முடியாத நிலை
அண்ணா சாலை, ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB) அருகே அமைந்துள்ள நடைபாதையை ஆக்கிரமித்து, குடையுடன் கூடிய கடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதனால், அந்தப் பாதையில் மக்கள் தாராளமாக நடந்து செல்ல முடிவதில்லை.
மிகவும் குறுகலான இடமே எஞ்சியிருப்பதால், ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே அந்தப் பகுதியைக் கடந்து செல்ல முடிகிறது. இதனால் எதிரெதிரே வரும் மக்கள் ஒருவருக்கொருவர் வழிவிட்டு, காத்திருந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அலுவலக நேரங்களில் அவசரமாகச் செல்லும் ஊழியர்களும், மாணவர்களும் இங்கு வரிசையாக, மெதுவாகக் கடந்து செல்ல வேண்டியிருப்பதால் தேவையற்ற நேர விரயம் ஏற்படுகிறது.
மேலும், கடையைச் சுற்றி வாடிக்கையாளர்கள் நிற்கும்போது, நடந்து செல்பவர்கள் அவர்கள் மீது இடித்துக் கொண்டு செல்ல வேண்டிய சங்கடமான சூழலும் உருவாகிறது. வாகனங்கள் செல்லும் சாலையில் இறங்கி நடக்கும்படி உள்ளது.
தரை எங்கும் கேபிள் ஒயர்கள்:
ஆக்கிரமிப்புகள் ஒருபுறமிருக்க, மறுபுறம் ஆயிரம் விளக்கு மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள வணிக வளாகப் பகுதிகளில் உள்ள முக்கிய நடைபாதைகளில் கேபிள் ஒயர்கள் ஆங்காங்கே அறுந்து, ஆபத்தான முறையில் தரையில் கிடக்கின்றன.
பொதுமக்கள் தினமும் கடந்து செல்ல வேண்டிய கட்டாயமான இப்பாதையில், இரவு நேரங்களில் போதிய வெளிச்சமின்மை காரணமாக, இவ்வழியே செல்வோர் இந்த ஒயர்களைக் கவனிக்க முடியாமல் தடுமாறுகின்றனர்.

சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வேறு வழியின்றி இந்த ஒயர்களை மிதித்துக் கொண்டே கடந்து செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இப்படி ஒயர்கள் சிதறிக் கிடப்பது அவசியமற்ற ஒன்றாகவும், விபத்துகளுக்கு வழிவகுப்பதாகவும் காணப்படுகிறது.

பொதுமக்கள் கோரிக்கை : ஆபத்து இல்லை என்றாலும், பொதுமக்கள் தடையின்றி இயல்பாக நடந்து செல்ல முடியாமல் தினமும் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். சிறுவியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில், கடைகளை முறைப்படுத்த வேண்டியது அவசியமாகும்.
எனவே, சென்னை மாநகராட்சி அதிகாரிகளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உடனடியாக இப்பகுதியைப் பார்வையிட்டு, நடைபாதையில் ஆபத்தாகக் கிடக்கும் கேபிள் ஒயர்களை அகற்ற வேண்டும். மேலும், நடைபாதை ஆக்கிரமிப்புகளை முறைப்படுத்தி, பொதுமக்கள் எவ்விதத் தடங்கலும் இன்றி, பாதுகாப்பாகவும் தாராளமாகவும் நடந்து செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
– சுபிக்ஷா ஆ, சுதா கா




