தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அந்தவகையில், சேலம் மாவட்டத்தில் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நேற்று (ஏப்ரல் 15) பிரசாரம் செய்தார். இந்தப் பிரசாரத்தில் தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டிருந்தார்.
அப்போது மேடையில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “என்றைக்கு ஒரு பெண் தனியாக நடு இரவில் போகிறாளோ, அன்றைக்குத்தான் உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம் என்று தந்தை காந்தியடிகள் சொன்னார். இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் ஒரே ஒரு குற்றச்சாட்டுதான் அண்ணன் (முதல்வர் மு.க. ஸ்டாலின்) மேல் இருக்கிறது.
அதுவும் இந்தப் பெண்கள் கூட்டத்தில் நான் சொல்கிறேன். எங்கே பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை, போதை கலாசாரம் இருக்கிறது. இதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்? இந்த ஆட்சியின் மேல் வேறு ஒன்றும் சொல்ல முடியாது.

ஒரு சகோதரியாக இன்றைக்கு இந்தக் கூட்டணியிலே அண்ணனுக்கு வலது கரமாக இணைந்திருக்கிறேன். எங்காவது ஒரு பெண்ணுக்கு ஏதாவது என்றால்… நான் அண்ணனிடம் (மு.க.ஸ்டாலின்) உரிமையாகப் பேசுவேன்” என்று பேசியிருக்கிறார். ஸ்டாலின் மேடையில் இருக்கும்போதே பிரேமலதா விஜயகாந்த் இவ்வாறு பேசியது, இணையத்தில் வைரலாகி இருக்கிறது.




