2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், பல முக்கியத் தொகுதிகளில் நிலவும் மாற்றங்கள் குறித்து பா.ஜ.க-வின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
மயிலாப்பூர் தொகுதியில் அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை காலை முதலே தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வருகிறார். தவெக, திமுக வேட்பாளர்கள் முதல் இரண்டு இடத்தில் தொடர்கின்றனர்.
இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், “வெற்றி பெற்றவர்கள் மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதே நேரத்தில், தோல்வியடைந்த அரசியல் கட்சிகளோ அல்லது வேட்பாளர்களோ கவலைப்படத் தேவையில்லை.
இது அரசியலில் மிகவும் சாதாரணமானது. நாம் எந்த நோக்கத்திற்காக அரசியலுக்கு வந்தோமோ, அந்த மக்கள் பணியைத் தொடர்வதுதான் நமக்கு மிக அவசியம். எனது அரசியல் பணி இன்னும் தீவிரமாகத் தொடரும்.
தற்போது நிலவும் இந்தச் சூழலை ‘விஜய் அலை’ என்று சொல்வதா அல்லது ‘திமுக அரசின் மீதான எதிர்ப்பு அலை’ என்று சொல்வதா என்பதை நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். மக்கள் ஒரு மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பது மட்டும் நிதர்சனம். என்.டி.ஏ கூட்டணியை மக்கள் தேர்வு செய்யவில்லை என்பது உண்மைதான்.
மக்கள் தங்களின் எதிர்ப்பைக் காட்ட எந்த ஆயுதத்தைத் தேர்ந்தெடுக்கிறார்களோ, அதுதான் வாக்குகளாக மாறுகிறது. என்.டி.ஏ கூட்டணி பல தொகுதிகளில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றுள்ளது. பாஜக கூட்டணி மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுவிட்டதாக நான் கருதவில்லை. ஜனநாயகத்தில் யாருக்கு வேண்டுமானாலும் பெரும்பான்மை கிடைக்கலாம். ஆனால், பெரும்பான்மை கிடைக்காதவர்கள் மக்கள் ஆதரவற்றவர்கள் என்று அர்த்தமல்ல.
மக்களின் நலனுக்காகச் செயல்படும் புதிய அரசியல் கட்சிகள் நல்லது செய்தால் பாராட்டுவதும், தவறுகள் செய்தால் விமர்சிப்பதும், குரல் கொடுப்பதுமே எனது பணியாக இருக்கும். எப்போதும் போல மக்கள் பணி தொடரும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.




