மகாத்மா காந்தியின் பேரன் துஷார் காந்தி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த நெய்யாற்றின்கரையில் காந்தியவாதி கோபிநாதன் நாயரின் சிலை திறப்புவிழா நிகழ்ச்சியில் நேற்று கலந்துகொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய துஷார் காந்தி, “ஆர்.எஸ்.எஸும், சங்பரிவார் அமைப்புகளும் நம் தேசத்தின் ஆன்மாவில் விஷத்தைக் கலந்துள்ளன. நாம் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” எனப் பேசினார். அந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு காரில் ஏறிப் புறப்படத் தயாரானார் துஷார் காந்தி. அப்போது அவரது காரை மறித்து ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க நிர்வாகிகள் கோஷம் எழுப்பினர்.
ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க குறித்து அவர் விமர்சித்துப் பேசியதைத் திரும்பப் பெற வேண்டும் என விவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலர் துஷார் காந்திக்கு ஆதரவு தெரிவித்ததுடன், அவருக்கு ஆதரவாகக் கோஷம் எழுப்பினர். இதனால் சற்று நேரம் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. மகாத்மா காந்தியின் பேரன் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் கேரளாவில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் துஷார் காந்தியைத் தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தியதாக 5 பேர் மீது நெய்யாற்றின்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து கேரளா மாநில சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வி.டி.சதீசன் கூறுகையில், “மகாத்மா காந்தி சிவகிரிக்கு வந்து ஸ்ரீநாராயண குருதேவனைச் சந்தித்த நூறாவது ஆண்டு நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. நம் நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான தினத்தில் காந்தியின் பேரனான துஷார் காந்தியைப் பாசிஸ்டுகள் தடுத்து நிறுத்திப் போராட்டம் நடத்தியுள்ளனர். இது மிகவும் குரூரமான ஒரு செயல்பாடாகும். அது மகாத்மா காந்தியை அவமதிக்கும் செயலாகும்.

இந்த விவகாரத்தில் கேரள மாநில அரசும், காவல்துறையும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆர்.எஸ்.எஸும், சங்பரிவாரும் இந்தியாவின் ஆத்மாவில் படர்ந்துள்ள விஷம் என அவர் பேசியதில் எந்த தவறும் இல்லை. நாங்களும் அதைத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறோம். நாட்டை ஆளும் பாசிசம், நம் ஜனநாயகத்தின் ஆத்மாவைத் தின்றுகொண்டிருக்கிறது. பாசிசத்துக்கு எதிரான மாநிலம் கேரளம். நாங்கள் துஷார் காந்திக்கு முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறோம். துஷார் காந்தியை அழைத்து கேரளாவில் இன்னும் பல நிகழ்ச்சிகளை நாங்கள் நடத்த உள்ளோம்” என்றார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
