சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் அலுவலகத்தில் கடந்த மார்ச் 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை சுமார் 60 மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
இந்த சோதனையின்போது ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளதாக அமலாக்கத்துறை அறிவித்தது.
இதையடுத்து, அமலாக்கத்துறையின் இந்த திடீர் சோதனையை சட்டவிரோதம் என்று அறிவிக்க கோரியும், இந்த சோதனையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க கோரியும் சென்னை ஐகோர்ட்டில் டாஸ்மாக் நிர்வாக இயக்குனர், தமிழ்நாடு அரசு தனிதனியாக வழக்குகளை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தது.
இந்த வழக்குகளை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் 6 நாள்கள் விசாரித்தனர்.
இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் இன்று பிறப்பித்தனர். அதில் கூறியிருப்பதாவது, “சட்டவிரோத பண பரிமாற்றம் முறைகேடு என்பது நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் நிதி உரிமைக்கு எதிரானது. இதுபோன்ற குற்றச் செயல்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையை ஏற்படுத்தும்.
இந்த குற்றத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. அதேநேரம், அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இதுபோன்ற சோதனையை அமலாக்கத்துறை மூலம் நடத்தப்படுவதாக மனுதாரர் தரப்பில் கூறப்படுகிறது.

ஆனால், இதுபோன்ற குற்றச்சாட்டை ஒரு நல்ல நீதிபதிகள் ஏற்க மாட்டார்கள். நீதிபதிகளை பொறுத்தவரையில், நிதி முறைகேடு குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளதா? என்பதைத்தான் பார்க்க முடியுமே தவிர, அரசியல் உள்ளதாக என்பதை பார்க்க முடியாது. இந்த வழக்கை பொறுத்தவரை டாஸ்மாக் அதிகாரிகளுக்கு எதிரான அமலாக்கத்துறை கூறியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளது. அதனால், அமலாக்கத்துறை சோதனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்குகளை தள்ளுபடி செய்கிறோம். அமலாக்கத்துறை நடத்திய சோதனையின் அடிப்படையில் சட்டப்படி மேல் நடவடிக்கை எடுக்கலாம்.” என நீதிபதிகள் கூறியுள்ளனர்.