28
February, 2026

A News 365Times Venture

28
Saturday
February, 2026

A News 365Times Venture

StartUp சாகசம் 57: `உலகளாவிய சிறுதானியச் சந்தை; மதிப்புகூட்டி சாகசம் செய்யும் Even More Foods

Date:

இந்தியாவின் அடுத்த பெரும் ஏற்றுமதி வாய்ப்பு

தமிழ் மண்ணில் வேரூன்றிய மரபு அறிவு இன்று உலகச் சந்தையில் பெரும் வாய்ப்பாக மாறி வருகிறது.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, இடைக்காடர் என்னும் சித்தர் 12 ஆண்டுகால கடும் பஞ்சத்தை தனது ஞானத்தால் உணர்ந்து, சிறுதானியங்களையும் எருக்க இலைகளையும் நம்பி வாழ்ந்து வெற்றி கண்டார். அன்று அவரை ஏளனமாகப் பார்த்தவர்கள், பஞ்சத்தில் மடிய, அவர் மட்டும் செழிப்பாக இருந்தார். இக்கர்ணபரம்பரை கதை வெறும் புராணக் கதையல்ல — இது நம் முன்னோர்கள் தலைமுறை தலைமுறையாக கடத்திய ஒரு அவசர கால மேலாண்மை அறிவு (Crisis Management Wisdom).

இன்று, 2026-ம் ஆண்டில் நாம் நிற்கும் இடத்தில் திரும்பிப் பார்க்கும்போது, அந்த ஞானம் எவ்வளவு தூரம் சரியானது என்பது நிரூபணமாகிறது.

Even More Foods – StartUp சாகசம் 57

காலநிலை மாற்றம், நீர்வரத்து குறைவு, மண் வளச் சீரழிவு என்று விவசாயம் பல முனைகளில் சவாலை எதிர்கொள்ளும் இந்த காலகட்டத்தில், குறைந்த நீரில் வளரும், வறட்சியைத் தாங்கும், ஊட்டச்சத்து நிரம்பிய சிறுதானியங்கள் — இந்தியாவின் அடுத்த பெரும் ஏற்றுமதி வாய்ப்பாக உருவெடுத்துள்ளன.

உலகளாவிய சிறுதானியச் சந்தை ஆண்டுதோறும் 4.4% முதல் 4.6% வரை வளர்ந்து வருகிறது. இந்தியா உலக உற்பத்தியில் 38.4% பங்களிப்புடன் முதலிடம் வகிக்கிறது. மேற்கத்திய நாடுகளில் “Gluten-free Super Food” என்று போற்றப்படும் நமது கம்பு, ராகி, சாமை ஆகியவை UAE, அமெரிக்கா, ஐரோப்பாவில் வாய்ப்பை உருவாக்கி வருகின்றன.

இது வெறும் விவசாயிகளின் கதையல்ல. இது தொழில் முனைவோருக்கான தங்கக் கதவு.

மதிப்புக்கூட்டப்பட்ட தயாரிப்புகளில் 30% முதல் 60% வரை கூடுதல் லாபம், PLI திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகை, NABARD மானியங்கள், MSP உயர்வு — என்று அரசு ஒரு முழுமையான சுற்றுச்சூழலை (ecosystem) உருவாக்கி வருகிறது. இதை சரியான நேரத்தில் சரியான திசையில் பயன்படுத்திக்கொள்வது நம் தொழில் சமூகத்தின் கடமை.

பண்டைய சித்தர் காட்டிய வழியில், நவீன வணிக மூளையுடன் நாம் நடக்கும் நேரம் இது.

இன்று நாம் பார்க்கவிருக்கும் சாகசக்கதையில் இவன் மோர் புட்ஸ் (Even More Foods) எனும் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் திரு.ஜனகன் பரமேஸ்வரன்

அவர்களின் சாகசக்கதையை த்தான் கேட்கப்போகின்றோம். ஏறக்குறைய 100க்கும் மேற்பட்ட பொருட்களை மதிப்பு கூட்டி உண்ணத்தயார்(Read to Eat), சமைக்கத்தயார் (Ready to Cook) என்ற வகைகளின் கீழ் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வந்திருக்கிறார். இனி அவரின் சாகச்சக்கதையே கேட்போம்….

உத்வேகம்

1.இன்றைய நவீன காலத்தில் துரித உணவுகள் சந்தையை ஆக்கிரமித்துள்ள நிலையில், நீங்கள் முழுக்க முழுக்க 100 வகை சிறுதானியப் பொருட்களை மட்டுமே மையமாக வைத்து ஒரு நிறுவனத்தைத் தொடங்க வேண்டும் என்ற அந்த உத்வேகம் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது?

தொடக்கத்தில் இவ்வளவு பெரிய நிறுவனமாக இது வளரும் என்று நான் நினைக்கவில்லை. சிறுதானியங்கள் குறைந்த நீரில், வறண்ட நிலத்திலும் வளரக்கூடியவை மற்றும் ஆரோக்கியமானவை என்பதே எனது அடிப்படை ஆர்வமாக இருந்தது. முதலில் 5 முதல் 6 பொருட்களுடன் தொடங்கினோம். ஆனால், சந்தையில் மக்களிடம் இருந்த வரவேற்பும், அவர்கள் எதிர்பார்த்த தேர்வுகளும் எங்களை அதிக பொருட்களை உருவாக்கத் தூண்டியது.

எனது இந்த பயணத்திற்கு முக்கியக் காரணம், நான் வேலையில் இருந்தபோது படித்த ஒரு கட்டுரை. தேனிலும், தாய்ப்பாலிலும் கூட பூச்சிக்கொல்லி மருந்தின் துகள்கள் இருப்பதாக அந்த கட்டுரை குறிப்பிட்டிருந்தது.

ஜனகன் பரமேஸ்வரன்

இது என்னைப் பெரிதும் பாதித்தது. பிறந்த குழந்தைக்குக் கொடுக்கும் உணவே இவ்வளவு நஞ்சாகிப் போனால், சாதாரண உணவுகளின் நிலை என்ன? என்ற கேள்வி எழுந்தது. அதனால், செய்யும் தொழிலையே ஒரு சேவையாகவும், வாழ்க்கையாகவும் மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் உருவானதுதான் இந்த நிறுவனம். எதிர்காலத்தில் தண்ணீர்ப் பற்றாக்குறை மற்றும் உடல்நலச் சிக்கல்களால் மக்கள் நிச்சயம் சிறுதானியங்களை நோக்கி வருவார்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு இருந்தது.

பிறகு என்ன செய்தாலும் ஒரே பொருளை பெரிதாக செய்யலாம் என்று ஆரம்பித்து சிறுதானியமாக வாங்கி அரிசியாக மாற்றினோம், பின் அவற்றை ரவையாக, பொங்கலாக மாற்றினோம், பிறகு மாவாக்கினோம். இவற்றிலிருந்து வீணாகும் கழிவை மாவாக மாற்றி கால்நடை தீவனமாக மாற்றி வழங்க ஆரம்பித்தோம்.

அதன் பின் காலை உணவாக அவல், பிரேக்ஃபாஸ்ட் சீரியல்ஸ்குள்ள உள்ள வந்தோம். அடுத்தது அதையே வந்து பிஸ்கட்ஸா நூடுல்ஸ், மாவா இருக்குறத நூடுல்ஸா பண்ண ஆரம்பிச்சோம். எங்களிடம் வரும் 95% வாடிக்கைாளர்கள் பி2பி. எனவே ஒரே பொருளை விற்பதை விட நிறைய தேர்வுகளை வழங்கினோம். அதனால் எங்கள் வாடிக்கையாளர்களும் சந்தை மதிப்பை பெறுகிறார்கள். எங்களுக்கும் நல்ல பொருளை வழங்கியதில் திருப்தி

சிறுதானி முக்கியத்துவம் & Marketing

2. சிறு தொழிலைத் தொடங்கும்போது பலரும் சந்திக்கும் மிகப்பெரிய சவால் சந்தைப்படுத்துதல் (Marketing). மக்கள் சிறுதானியங்களை மறந்திருந்த காலத்தில், அதன் முக்கியத்துவத்தைப் புரியவைத்து உங்கள் நிறுவனத்திற்கான முதல் வாடிக்கையாளரைப் பிடிக்க நீங்கள் எதிர்கொண்ட போராட்டங்கள் என்ன?

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு நான் தொழிலைத் தொடங்கியபோது, சிறுதானியம் என்பது நோயாளிகளுக்கான உணவு அல்லது உணவுக் கட்டுப்பாட்டில் (Diet) இருப்பவர்களுக்கானது என்ற எண்ணமே மக்களிடம் இருந்தது. மேலும், சிறுதானியங்கள் சுவையாக இருக்குமா என்ற சந்தேகமும் இருந்தது.

எல்லாரும் பொதுவாக வெள்ளை அரிசியுடன் சிறுதானியத்தின் விலையை ஒப்பிட்டார்கள். அது மிகவும் பெரிய சவாலாக இருந்தது.

அப்போதுதான் நாங்கள் ஒரு புதிய முயற்சியை செய்தோம்.

Even More Foods – StartUp சாகசம் 57

விளம்பரங்களுக்காகச் செலவு செய்யவில்லை. அதற்குப் பதிலாக, வருபவர்களுக்கு இலவசமாகச் சிறுதானிய மாதிரிகளை (Samples) வழங்கினோம். அவற்றை எப்படிச் சமைக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தும், அங்கேயே சமைத்துச் சுவைக்க வைத்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினோம். மெல்ல மெல்ல சுவையையும் ஆரோக்கியத்தையும் உணர்ந்தவர்கள் மீண்டும் வரத் தொடங்கினார்கள். வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்பச் சிறு பாக்கெட்டுகளாகவும் வழங்கியது, செய்முறை விளக்கங்களைக் கொடுத்தது மற்றும் வாடிக்கையாளர்களின் கருத்துக்களைக் கேட்டுப் பொருட்களை மேம்படுத்தியது எங்களை வளர்த்தது. ஒரு வாடிக்கையாளர் மற்றொருவரிடம் பரிந்துரைக்கும் ‘வாய்மொழி பரிந்துரை’ மூலமாகவே எங்கள் சந்தை விரிவடைந்தது.

நிதிப் பயணம் – அனுபவம்: தொழிலாளர்களின் சம்பளத்தை ஒருபோதும் நிறுத்தியதில்லை

3. ஒரு உணவுத் தொழில் நிறுவனத்தைப் பெரிய அளவில் கொண்டு செல்ல முதலீடு மிக அவசியம். உங்கள் நிதிப் பயணத்தைப் பற்றிச் சொல்லுங்கள்.

கொல்லிமலை அடிவாரத்தில் எங்கள் தோட்டம் உள்ளது. என் தந்தை அப்பா பரமேஸ்வரன் அறிவுரைப்படி சொந்தத் தோட்டத்திலேயே தொழிலைத் தொடங்கினேன். ஆரம்பத்தில் தந்தை கொடுத்த 2.5 லட்ச ரூபாய் மற்றும் 10 லட்ச ரூபாய் வங்கி கடன் மூலம் இயந்திரங்களை வாங்கிப் பணியைத் தொடங்கினேன்.

வெளி முதலீட்டாளர்களிடம் செல்லாததால், நிறுவனத்தின் முழு அதிகாரம் இன்றும் என்னிடமே உள்ளது. இது விரைவான முடிவுகளை எடுக்க எனக்கு உதவுகிறது. பி2பி வர்த்தகத்தில் சில நேரம் உடனுக்குடன் முடிவு எடுக்க இது உதவுகிறது. சில சமயம் கூட்டாளிகள், முதலீட்டு நிறுவனங்கள் முதலீடு செய்திருந்தால் கொஞ்சம் காலதாமதமாகும். ஆனால் நிறுவனத்தின் முழு அதிகாரமுமே என்னிடம் உள்ளதால் எனக்கு உபயோகமாக உள்ளது

பல சமயங்களில் எங்களது Even More Foods நிறுவனம் திவாலாகும் நிலைக்குக் அருகில் சென்றிருக்கிறது. ஆனால், தொழிலாளர்களின் சம்பளத்தை ஒருபோதும் நிறுத்தியதில்லை. வங்கிக் கடன்களைச் சரியாகத் திருப்பிச் செலுத்தியதால் வங்கியின் முழு ஒத்துழைப்பு கிடைத்தது. அன்று 1,000 சதுர அடியில் தொடங்கிய நிறுவனம், 16,000 சதுர அடியாக வளர்ந்துள்ளது.

அனுபவத்தின் மூலம் எப்போது இயந்திரங்களை வாங்க வேண்டும், எப்போது லாபம் எடுக்க வேண்டும் என்ற தெளிவு கிடைத்துள்ளது. பிற நிறுவனங்களுக்குத் தயாரித்துக் கொடுக்கும் (White Labeling) பணியைச் செய்வதால், மிகக் குறைந்த லாப வரம்பிலேயே (7% – 12%) இயங்கி வருகிறோம். இன்னொரு புறம் நிதிக்கு எங்களது நண்பர்களிடம் கடன் வாங்கினோம். நல்ல வட்டி சரியான நேரத்தில் திருப்பி தந்ததில் அவர்களுக்கும் திருப்தி. எனவே பணம் எப்போது தேவை என்றாலும் ஏதோ ஒரு வகையில் வாங்கிட முடிகிறதும் எனக்கும் உதவியாக இருக்கிறது

முக்கியமா இந்தியாவில் எந்த மூலையில் இயந்திர கண்காட்சி என்றாலும் போய் பார்ப்பேன் அதை வாங்கி வந்து இங்கே முயலுவேன். அதற்கு வங்கிகளும் எனக்கு துணை நிற்கின்றன.

Even More Foods – StartUp சாகசம் 57

இப்போது சில பொறியியல் பணிகளுக்கு என்றே தனி குழுவே வைத்திருக்கிறேன் என்பதும் முக்கியமானது. இப்படித்தான் எல்லா இடங்களிலும் பணத்தை மேலாண்மை செய்து, திவலாகும் நிலைக்கு அருகில் சென்று மீண்டு வந்திருக்கிறேன்.

4. மத்திய, மாநில அரசுகளின் சிறுதானிய இயக்கங்கள் மற்றும் கடனுதவித் திட்டங்கள் உங்கள் தொழில் வளர்ச்சிக்கு எந்த வகையில் உதவியாக உள்ளன?

அரசின் திட்டங்களில் பல நன்மைகள் உள்ளன, அவற்றை நாங்கள் பயன்படுத்துகிறோம். குறிப்பாக, மாவட்டத் தொழில் மையம் (DIC) மூலம் வழங்கப்படும் 25% மூலதன மானியம் (Capital Subsidy) மற்றும் வேளாண் உட்கட்டமைப்பு நிதி (Agri Infra Fund) மூலம் கிடைக்கும் 3% வட்டி மானியம் ஆகியவை மிகப்பெரிய பலம். ஆரம்பத்தில் சில தவறான வழிகாட்டுதலால் இவற்றைப் பயன்படுத்தத் தயங்கினேன், ஆனால் சரியான தகவல்களைத் திரட்டி இப்போது முறையாகப் பயன்படுத்தி வருகிறோம். மானியத்திற்காக மட்டுமே தொழிலைத் தொடங்கக்கூடாது, அது ஒரு ஊக்கியாக (Accelerator) மட்டுமே இருக்க வேண்டும் என்பது எனது கருத்து.

ஒரு முறை வந்த சிக்கல் இன்னொரு முறை வரக்கூடாது

5. 100 வகையான பொருட்களைத் தயாரிக்கும்போது தரத்தை (Quality Control) எப்படிப் பராமரிக்கிறீர்கள்? விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்கிறீர்களா?

100+ பொருட்களைத் தயாரிக்கும்போது முறையான கட்டமைப்பு (System) அவசியம். ஒரு பொருளில் 25 வகையான மூலப்பொருட்கள் சேர்க்கும்போது, ஒன்றின் தரம் குறைந்தாலும் முழு உற்பத்தியும் வீணாகிவிடும். எனவே, ஒவ்வொரு கட்டத்திலும் தரப்பரிசோதனை செய்கிறோம். விவசாயிகளிடமிருந்தும், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களிடமிருந்தும் நேரடியாகக் கொள்முதல் செய்கிறோம்.

Even More Foods – StartUp சாகசம் 57

ஈரப்பதம் (Moisture) மற்றும் நுண்ணுயிரிப் பரிசோதனைகளை (Microbial Testing) எங்கள் சொந்த ஆய்வகத்திலேயே செய்கிறோம். ஒரு பொருள் எங்கு உற்பத்தியானது, யாரால் பேக் செய்யப்பட்டது என்பது வரை முழுமையான விவரங்களை (Traceability) பராமரிக்கிறோம். முறையான தரக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் (SOP) மற்றும் ஊழியர்களுக்கான தொடர் பயிற்சிகள் மூலம் தரத்தை உறுதி செய்கிறோம்.

ஒவ்வொரு முறை ஒவ்வொரு சிக்கல் வரும் எல்லாவற்றையும் தொகுத்து ஒரு முறை வந்த சிக்கல் இன்னொரு முறை வரக்கூடாது என்பதில்தான் நாங்கள் விதிமுறைகளை உருவாக்குகின்றோம்

சுத்தம் செய்வதற்கு என்றே தனி குழு ஒன்றை வைத்திருக்னறோம். உணவுப்பொருட்களை கடைசியாக எப்படி வைத்தோம். ஒருவேளை அதில் சிக்கல் இருந்தால் அடுத்த ஷிப்டில் வரும் பணியாட்களுக்கு இதை தெரியப்படுத்த ஒரு விதிமுறை என இப்போது எல்லாவற்றையும் விதிமுறைகளுக்கு கொண்டு வந்திருக்கின்றோம். எல்லாமே விழுந்து பழகியதுதான்.

கற்ற பாடம் – தேவையறிந்து உற்பத்தி – ஏற்றுமதி

6. உங்கள் வணிக ரீதியாக நீங்கள் சந்தித்த கடினமான தருணம் எது? அதிலிருந்து நீங்கள் கற்ற பாடம் என்ன?

ஆரம்பத்தில் விற்பனை அதிகமாக இருக்கும், ஆனால் லாபம் சரியாகத் தெரியாது. நாம் முன்கூட்டியே பணம் கொடுத்துப் பொருட்களை வாங்கித் தயாரிப்போம், ஆனால் வாடிக்கையாளர்களிடமிருந்து பணம் வந்து சேர நீண்ட காலம் (Credit Cycle) எடுக்கும். இது பெரும் சிக்கலாக இருந்தது.

இதைத் தவிர்க்க, மெதுவாக விற்பனையாகும் பொருட்களை (Slow Moving SKU) குறைத்துக் கொண்டோம். கடன் கொள்கைகளைக் கடுமையாக்கினோம். தேவையறிந்து உற்பத்தியைத் திட்டமிட்டோம் (Demand Based Production). விற்பனை அளவை விட, லாப விகிதத்தைச் சரியாகக் கணக்கிடுவது முக்கியம் என்பதை உணர்ந்தோம்.

7. உங்கள் விநியோகச் சங்கிலியை (Supply Chain) எப்படி விரிவுபடுத்தினீர்கள்? ஆன்லைன் மற்றும் ஏற்றுமதி குறித்த உங்கள் நிலைப்பாடு என்ன?

நாங்கள் இடைத்தரகர்களைக் குறைத்து, நேரடியாகக் கடைகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் பொருட்களை வழங்குகிறோம். இதனால் போக்குவரத்துச் செலவு குறைந்து, பொருளின் விலையையும் கட்டுக்குள் வைக்க முடிகிறது. பல டிரான்ஸ்போர்ட் நிறுவனங்களுடன் இணைந்து கிராமப்புறத்தில் இருந்தாலும் சீரான விநியோகத்தை உறுதி செய்துள்ளோம்.

Even More Foods – StartUp சாகசம் 57

எங்கள் உற்பத்தியில் 10% முதல் 15% வரை ஏற்றுமதி செய்கிறோம். பிற நிறுவனங்களின் பெயரில் தயாரித்துக் கொடுப்பதன் (White Labeling) மூலம் அதிக அளவு ஆர்டர்களைக் கையாள முடிகிறது. ஆன்லைன் விற்பனையில் உள்ள அதிகப்படியான தள்ளுபடி முறைகளைத் தவிர்த்து வருகிறோம். இந்த நிலைப்பாட்டுடன் இருக்கும்போது எங்களால் நல்ல வரவேற்பை பெற முடிகிறது

8. அடுத்த ஐந்து ஆண்டுகளில் உங்கள் நிறுவனத்தை எந்த நிலையில் பார்க்க விரும்புகிறீர்கள்?

அடுத்த ஐந்து ஆண்டுகளில் தென்னிந்தியா முழுவதும் எங்கள் கிளைகளை வலுப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். சிறுதானியப் பிரிவு என்று எடுத்தாலே எங்கள் நிறுவனத்தின் பெயர் நினைவுக்கு வர வேண்டும். பாரம்பரிய உணவுகளை உலகத் தரத்திற்கு உயர்த்தி, இந்திய சூப்பர் ஃபுட்ஸ் (Super Foods)களில் நாங்கள் பிரதான அடையாளமாக மாற வேண்டும் என்பதே எனது இலக்கு. அத்துடன், எங்களோடு பயணிக்கும் ஊழியர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், விவசாயிகளுக்குச் சிறந்த விலையை வழங்கவும் தொடர்ந்து பாடுபடுவோம்.

சாகசம் தொடரும்

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

மதுரை: பிரதமர் மோடி கலந்துகொள்ளும் பொதுக் கூட்டத்தில் ’பெரியார், அண்ணா’ புகைப்படங்கள்!

மதுரையில் உள்ள மண்டேலா நகரில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தேர்தல்...

'விஜய்யே மன உளைச்சலில் இருப்பார்!' – அறிவாலயத்தில் கருணாஸ் பேட்டி

அறிவாலயத்தில் திமுகவின் தொகுதி பங்கீடு குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு பத்திரிகையாளர்களை...

'ஆம்லெட்டும் வடையும் சாப்பிடாத ஒரே கட்சி' – தனியரசுவின் வினோத பெருமிதம்!

அறிவாலயத்தில் திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை முடிந்த பிறகு தமிழ்நாடு கொங்கு...

'ஒரு ராஜ்ய சபா சீட் உறுதி; மற்றவை…' – பேச்சுவார்த்தைக்கு பின் காங்கிரஸ்!

திமுகவின் தொகுதிப் பங்கீடு குழுவுடன் கிரிஷ் சோடங்கர் தலைமையிலான காங்கிரஸின் கூட்டணி...