தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் உச்ச நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டது.
மாநில அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் தமிழ்நாடு ஆளுநர் செயல்படும்போதெல்லாம் உச்ச நீதிமன்றத்தை நாடி தமிழ்நாடு அரசு நிவாரணம் பெற்று வருகிறது. அதன்படி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய 10க்கும் அதிகமான மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் தமிழ்நாடு ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார். எனவே அவருக்கு உரிய உத்தரவு பிறப்பியங்கள் எனக் கூறி தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பர்திவாலா மற்றும் மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நான்கு நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்றைய தினம் இறுதி நாள் விசாரணையாக நடைபெற்றது.
இன்றைய தினம் தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திரிவேதி வாதங்களை முன்வைத்தார்.
`ஆளுநருக்கு என்று தனி அதிகாரங்கள் எதுவும் கிடையாது’
“ஆளுநருக்கு என்று தனி அதிகாரங்கள் எதுவும் கிடையாது. அவர் அமைச்சரவையின் குழுவின் ஆலோசனை மற்றும் அறிவுரைகளுக்கு உட்பட்டவர். ஆளுநரின் அதிகாரங்கள் தொடர்பாக அரசியல் சாசன நிர்ணய சபையில் விவாதங்கள் நடைபெற்ற போது, அம்பேத்கர் அவர்கள் தெளிவாக கூறியிருக்கிறார். அமைச்சரவையின் குழுவின் முடிவுகளுக்கு எதிராக அவர் செயல்படுகிறார் என்றால் அரசியல் சாசனத்திற்கு எதிராக செயல்படுகிறார் என்று அர்த்தம். ஏனென்றால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தான் அதிகாரம் இருக்கிறது என உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகளில் கூறியிருக்கிறது.
ஆனால் இது எதையும் தமிழ்நாடு ஆளுநர் கருத்தில் கொள்வதே கிடையாது. நாங்கள் அனுப்பி வைத்த மசோதாவில் மாற்றங்கள் செய்யுங்கள் எனக் கூறி எங்களுக்கு அனுப்பி வைக்கிறார். அதே மசோதாக்களை நாங்கள் மீண்டும் ஆளுநருக்கு கொடுத்தால் ஒப்புதல் அளிக்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கிறார். அவர் அப்படி செய்வதற்கான எந்த அதிகாரமும் அவருக்கு கிடையாது. எனவே தமிழ்நாடு ஆளுநர் செய்திருப்பது அப்பட்டமான அதிகார வரம்பு மீறல்” என வாதங்களை முன்வைத்தனர்.
தமிழ்நாடு ஆளுநர் சார்பில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி இருந்த போது அவரிடமே நேரடியாக நீதிபதிகள் கேள்விகளை எழுப்பினர்.
“சட்டப்பேரவை அனுப்பும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க முடியாது என ஆளுநர் முடிவெடுத்து விட்டால், அதை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டியதுதானே? அதை விடுத்து ஏன் சட்டப்பேரவைக்கு மீண்டும் அனுப்பி வைத்தார். இந்த ஒரே ஒரு கேள்வியை தான் நாங்கள் இரண்டு நாட்களாக உங்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். இதற்கு நீங்கள் பதில் அளித்து விட்டீர்கள் என்றால் இந்த வழக்கில் அனைத்து விஷயங்களும் முடிவுக்கு வந்துவிடும். ஏனென்றால் ஆளுநர் பதவி என்பது மிக முக்கியமான பதவி. எனவே அவற்றின் செயல்பாடுகள் சரியானதாக இருக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம்.” என வினவினர் நீதிபதிகள்.
ஆளுநருக்கு உள்ள அதிகாரத்தின்படி…
அதற்கு பதிலளித்த அட்டர்னி ஜெனரல், “ஆளுநருக்கு உள்ள அதிகாரத்தின்படி ஒரு மசோதாவை எந்த ஒரு நிலையிலும் அவரால் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடியும். அவ்வாறு அனுப்பிவிட்டால் அந்த மசோதா மீதான ஆளுநரின் முடிவெடுக்கும் அதிகாரங்கள் முடிவுக்கு வந்துவிடும். அதற்குப் பிறகு மசோதா மீது முடிவெடுப்பது குடியரசு தலைவர் தான்
மசோதாவை நிராகரித்தால், அதற்கான காரணத்தை ஆளுநர் தெரிவிக்கவில்லை என தமிழ்நாடு அரசு சொல்கிறது. ஆனால் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களின் நியமிப்பது தொடர்பான மசோதாவில் ஆளுநருக்கு இருக்கும் அதிகாரத்தை அகற்றும் வகையில் அதன் அம்சங்கள் இருந்தது. அதனால் தான் அந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை” என வாதங்களை முன் வைத்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “துணைவேந்தர் நியமன மசோதாவை விடுங்கள், மற்ற மசோதாவுக்கு வருவோம், இந்த மசோதாக்களையும் ஆளுநர் நிறுத்தி வைத்திருக்கிறார், ஆனால் அதற்கான காரணங்களை அவர் கூறவில்லை, அவர் கூறினால் தானே என்ன தவறு இருக்கிறது என்று அரசுக்கு தெரியும், ஆளுநர் மனதில் என்ன இருக்கிறது என்பதை அரசு எப்படி தானாகவே புரிந்து கொள்ள முடியும், இதைத்தான் ஆளுநர் செய்யத் தவறியிருக்கிறார். இரண்டாவது முறை ஒரு மசோதாவை அரசு அனுப்பும் போது அதற்கு நிச்சயம் ஒப்புதல் அளித்தே தீர வேண்டும். ஆனால் மாறாக அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி இருக்கிறார் அதுதான் எங்களுக்கு ஏன் என்று புரியவில்லை?” என வினவினர்.

மசோதாவை எப்போது வேண்டுமானாலும் ஆளுநரால் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடியும் என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்த போது, அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், “குடியரசுத் தலைவருக்கு மசோதாக்களை எப்போது வேண்டுமானாலும் ஆளுநர் அனுப்பி வைக்கலாம் என்றால் அதை முதலிலேயே செய்திருக்க வேண்டும். ஏன் அரசுக்கு திருப்பி அனுப்பினார்?” என மீண்டும் கேட்டனர்.
இன்றைய தினம் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து வழக்கின் தீர்ப்பானது தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. வழக்கின் மனுதாரர்கள் எதிர்மனுதாரர்கள் எழுத்துப்பூர்வமான வாதங்களை ஒரு வார காலத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Vikatan Play
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்’ பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play