ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் குதிரை சவாரி செய்து பைசரன் மலை உச்சி வரை சென்று அங்கிருக்கும் ரிசார்ட்டில் தங்கி வருவது பிரபலமான சுற்றுலாப் பயணமாக இருந்து வருகிறது. சுற்றுலாப் பயணிகள் அங்கு இருக்கும் இந்தக் குதிரை சவாரிப் பயணத்தை மேற்கொள்வது நாள்தோறும் இயல்பாக நடக்கும் ஒன்றுதான். ஆனால், இன்று அந்த பைசரன் மலை உச்சியில் அமைந்துள்ள ரிசார்ட் அருகே திடீரென தீவரவாதிகள் துப்பாக்குச் சூடு நடத்தியிருக்கின்றனர்.
தீவிரவாதிகளின் இந்தத் தீடீர் துப்பாக்கிச் சூட்டில் 27 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்திருப்பதாகவும், 12 பேர் காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
Pahalgam Attack
இந்தத் தாக்குதலில் கணவரை கண் முன் இழந்து, அங்கிருந்து உயிர்தப்பிய கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பல்லவி, “நான், எனது கணவர், எனது மகன் மூவரும் குடும்பத்துடன் இங்கு சுற்றுலா வந்திருந்தோம். இன்று (22.04.25) மதியம் 1.30 மணியளவில் திடீரென தாக்குதல் நடந்தது. சம்பவ இடத்திலேயே என் கண் முன்னே என் கணவர் துடித்து இறந்தார். இன்னும் என்னால் அதை நம்ம முடியவில்லை, ஏதோ கெட்ட கனவு போல் இருக்கிறது.
இதைப் போய் மோடியிடம் சொல்லு!
மூன்று, நான்கு பேர் எங்களை தாக்கினார்கள். நான் அந்தத் தீவிரவாதிகளிடம், ‘என் கணவரைக் கொன்று விட்டீர்கள், எங்களையும் கொன்று விடுங்கள்’ என்று சொன்னேன். அதற்கு, அங்கிருந்த ஒரு தீவிரவாதி, ‘போ… இதைப் போய் மோடியிடம் சொல்லு’ என்றான். அங்கிருந்த அப்பகுதி மக்கள்தான் எங்களுக்கு உதவி செய்தார்கள். என் கணவரின் உடலை மலையிலிருந்து, சீக்கிரம் கீழே கொண்டுவந்து சொந்த ஊருக்குக் கொண்டு செல்ல உதவுங்கள்” என்று கூறியிருக்கிறார்.
இரணுவத்தினர், மீட்புப் படையினர், பாதுகாப்பு படையினர் விரைந்து அப்பகுதிக்குச் சென்று பாதுகாப்பு பணியில், விசாரணையில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்தத் தாக்குதல் தொடர்பான தகவல் அறிந்தவுடன், சவுதி அரேபியாவில் இருந்த பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தொடர்பு கொண்டு இது குறித்துக் கேட்டறிந்திருக்கிறார். அதேபோல அமித் ஷாவும் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியுள்ளார். அமித் ஷா சம்பவ இடத்திற்கு செல்லவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதலுக்குப் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.