ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்தியத் துப்பாக்கிச் சூடு சம்பவம் நாட்டையே உலுக்கியிருக்கிறது. சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட இந்தத் திடீர் துப்பாக்கிச் சூட்டில் இதுவரை வெளிநாட்டினர் 2 பேர் உள்ளிட்ட 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்திருப்பதாகவும், காயமடைந்தவர்கள் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இந்தத் தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளைப் பிடிக்கும் பணியில் பாதுகாப்புத் துறை தீவிரமாக இறங்கியிருக்கிறது. இந்தத் தாக்குதலை நடத்திய கோழைத்தனமான தீவிரவாதிகளுக்கும், அவர்களுக்குப் பின்னால் இருக்கும் கும்பலுக்கும் தக்க பதிலடி கொடுக்கப்படும் என மத்தியப் பாதுகாப்புத் துறை தெரிவித்திருக்கிறது.
இதில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அரசு மரியாதையுடன் நேற்று (ஏப்ரல் 23) டெல்லியில் இறுதி மரியாதை செய்யப்பட்டது.
இதுகுறித்து பிகாரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கும் பிரதமர் மோடி, “மொத்த நாடும் தீவரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்குத் துணையாக நிற்கிறது. அரசு காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளித்து அவர்கள் குணமடைய எல்லாவிதமான உதவிகளையும் செய்து வருகிறது.
கார்கில் முதல் கன்னியாகுமரி வரை…
தந்தையை, மகனை, சகோதரரை, வாழ்க்கைத் துணையை இழந்து தவிக்கிறார்கள். அங்கு பாதிக்கப்படவர்கள் பெங்காலி, கன்னடம், மராத்தி, குஜராத்தி எனப் பல மொழி பேசுபவர்களாக இருக்கிறார்கள். கார்கில் முதல் கன்னியாகுமரி வரை, துக்கமும் ஆத்திரமும் நிறைந்திருக்கிறது. தீவிரவாதிகள், நம் நாட்டின் எதிரிகள், அப்பாவி மக்கள் மீது மட்டும் தாக்குதல் நடத்தவில்லை, இந்திய நாட்டின் ஆன்மா மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்.

அந்தத் தீவிரவாதிகளையும், அவர்கள் பின்னால் இருப்பவர்களையும் விரைவில் கண்டிபிடித்துக் கடுமையாக தண்டனை வழங்கப்படும் என்பதை இந்த உலகிற்கு அழுத்தமாகச் செல்லிக் கொள்கிறேன். இந்த பூமியை விட்டே அவர்களைத் துரத்தி அடிப்போம்.
தீவிரவாதத்தை ஒருபோதும் மன்னிக்க முடியாது, தண்டிக்காமல் இருக்க முடியாது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதியை வழங்குவோம். பயங்கரவாதத்தால், தீவிரவாதத்தால் இந்தியாவின் ஆன்மாவை ஒன்றும் செய்துவிட முடியாது.
India will identify, track and punish every terrorist, their handlers and their backers.
We will pursue them to the ends of the earth.
India’s spirit will never be broken by terrorism. pic.twitter.com/sV3zk8gM94— Narendra Modi (@narendramodi) April 24, 2025
மனிதநேயத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும் நம் பக்கம் இருக்கிறார்கள். இந்தியாவிற்குத் துணையாக நிற்கும் உலக நாடுகள், உலகத் தலைவர்கள் அனைவருக்கும் நன்றி.” என்று பேசியிருக்கிறார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
