11
February, 2026

A News 365Times Venture

11
Wednesday
February, 2026

A News 365Times Venture

OPS: '130 எம்.எல்.ஏக்கள் வருவார்கள்’ டு தனிமரம்! – சரிந்த ஓ.பி.எஸ் சாம்ராஜ்யம்

Date:

`அதிகாரத்தை விட்டுக் கொடுப்பதற்காக யாரும் அதிகாரத்துக்கு வருவதில்லை!’ ஆனால், ஓ.பன்னீர்செல்வம் கொஞ்சம் வித்தியாசமானவர். அவர் தன் கையில் சிக்கும் அதிகாரத்தை எளிதில் விட்டுக்கொடுப்பார். விட்டுக்கொடுத்த அதிகாரத்தை மீட்க தர்மயுத்தம் புரிவார்.

கடைசியில் கையிருந்ததையும் கோட்டைவிட்டு பிழைத்திருத்தலுக்கே போராடிக் கொண்டிருப்பார். 2017 இல் இதே நாளில் ஓ.பி.எஸ் விகடனுக்காக கொடுத்த ஒரு பேட்டியில், ‘130 எம்.எல்.ஏக்களும் என் பக்கம் வருவார்கள்!’ என்றார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஓடியிருக்கிறது.

வைத்திலிங்கம், ஓ.பன்னீர்செல்வம்

திரிசங்கு நிலையில் ஓ.பி.எஸ்

ஓ.பி.எஸ் பக்கம் நின்ற பெரும்பாலானோர் கூடாரம் மாறிவிட்டனர். ‘நிபந்தனையின்றி அதிமுகவில் இணைய தயார்’ என்கிறார். எடப்பாடி அதை சட்டை செய்யவே இல்லை. பாஜக-வுக்கு தூது விடுகிறார். அந்த பக்கமிருந்தும் எந்த பதிலும் இல்லை. திமுக பக்கமும் தவெக பக்கமும் முழு மனதாக வண்டியை திருப்ப முடியவில்லை. மொத்தத்தில், எந்த முடிவும் எடுக்காமல் சேரும் இடமும் தெரியாமல் திரிசங்கு நிலையில் இருக்கிறார்.

இரட்டை இலை முடக்கம்…

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு டெல்லியின் அருள் மொத்தமும் ஓ.பி.எஸ்ஸூக்கு கிடைத்தது. ஓ.பி.எஸ்ஸூம் ஜெயலலிதாவின் இறப்பில் மர்மம் இருப்பதாக அரசியல் செய்ய ஆரம்பித்தார். எம்.எல்.ஏக்கள் மா.பா.பாண்டியராஜன், செம்மலை, ஆறுக்குட்டி போன்றோர் ஓ.பி.எஸ்ஸூடன் இருந்தனர்.

இரட்டை இலை முடக்கப்பட்டு அறிவிக்கப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஓ.பி.எஸ் அணிக்கு இரட்டை இலையை போன்றே இரட்டை மின்கம்பம் சின்னம் ஒதுக்கப்பட்டது. பணப்பட்டுவாடா காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் இடையே புகுந்து விளையாடிய டெல்லி

டெல்லி மீண்டும் இடையில் புகுந்து விளையாடியது. ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் இரண்டு பேரையும் இணைத்து வைக்க சமரசம் பேசியது. ஈ.பி.எஸ் இறங்கி வந்தார். சசிகலா குடும்பத்தை கட்சியிலிருந்து ஒதுக்கி வைத்தார். ஜெயலலிதாவின் மரணத்தை விசாரிக்க ஆறுமுகச்சாமி விசாரணை ஆணையத்தை நியமித்தார்.

ஓ.பி.எஸ் மீண்டும் ராயப்பேட்டை அலுவலகத்துக்கு வந்து. சேர்ந்தார். ஓ.பி.எஸ்க்கு துணை முதல்வர் பதவியும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியும் வழங்கப்பட்டது. ஆளுநர் வீரராகராவ் ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ்ஸின் கரங்களை பிடித்து சேர்த்து வைத்தார்.

கவனமாக செயல்பட்ட ஈ.பி.எஸ்

அரசியல் செய்ய ஓ.பி.எஸ்ஸூக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு இது. ‘130 பேர் என் பக்கம் இருக்கிறார்கள்’ என்றார் அல்லவா? அதை இந்த சமயத்தில் மெய்ப்பித்து காண்பித்திருக்க வேண்டும். ஓ.பி.எஸ் தவறினார். ஈ.பி.எஸ் இதிலெல்லாம் கவனமாக செயல்பட்டார். பதவியை மட்டும் வைத்து ஒன்றும் செய்ய முடியாது. நிர்வாகிகளின் ஆதரவும் வேண்டும் என்பதில் குறியாக இருந்தார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

கட்சியை கட்டுக்குள் கொண்டு வந்த ஈ.பி.எஸ்

பொதுக்குழு,செயற்குழு உறுப்பினர்களை தன் பக்கமாக இழுத்தார். எதிர்க்கட்சியாக திமுக குடைச்சல் கொடுக்க, இன்னொரு டிடிவி ஸ்லீப்பர் செல் என பயம் காட்டிக் கொண்டிருந்தார். இத்தனைக்கும் நடுவில் கட்சியை கட்டுக்குள் கொண்டு வந்தார்.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு பலத்த அடி. ஆனால், அந்த நாடாளுமன்றத் தேர்தலோடு நடந்த 19 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் ஈ.பி.எஸ் சுற்றி சுழன்று பெரும்பாலான தொகுதிகளை வென்று ஆட்சியைக் காப்பாற்றினார். இதெல்லாம் கட்சிக்குள் ஈ.பி.எஸ்ஸின் செல்வாக்கை அதிகரித்தது.

கேள்விக்குள்ளான ஓ.பி.எஸ் செல்வாக்கு

2021 தேர்தலில் ஓ.பி.எஸ் அதிமுகவுக்குள் இருந்தும் டிடிவி தினகரன் தென் மாவட்டங்களில் பெருத்த சேதாரத்தை ஏற்படுத்தினார். இதெல்லாம் ஓ.பி.எஸ் இன் செல்வாக்கை கேள்விக்குள்ளாக்கியது.

இரட்டைக்குழல் துப்பாக்கியைப் போல செயல்படுவோம் என கூறப்பட்ட இரட்டைத் தலைமை விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வர ஈ.பி.எஸ் எண்ணினார். முக்கியமான முடிவுகளில் ஓ.பி.எஸ்ஸின் சம்மதம் இல்லாமல் எதையும் செய்ய முடியவில்லை என்பது இதற்கு காரணமாக அமைந்தது.

இபிஎஸ், ஓபிஎஸ்
இபிஎஸ், ஓபிஎஸ்

அதிமுக தொண்டர் உரிமை மீட்புக்குழு

கட்சிக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. ஓ.பி.எஸ்ஸை வெளியேற்றுவதற்கென பொதுக்குழுவை திட்டமிட்டு ஏற்பாடு செய்தார் ஈ.பி.எஸ். வானகரத்தில் நடந்த பொதுக்குழுவில் தண்ணீர் பாட்டில்கள் வீசப்பட்டு அவமதிக்கப்பட்டு ஓ.பி.எஸ் வெளியேற்றப்பட்டார்.

அத்தோடு அதிமுகவிலிருந்து ஒதுக்கப்பட்டார். மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், பண்ருட்டி ராமச்சந்திரன் போன்றோர் பன்னீர்செல்வத்தோடு வந்தனர். அதிமுக தொண்டர் உரிமை மீட்புக்குழு தொடங்கப்பட்டது.

ஓ.பி.எஸ்ஸின் ஆளுமை?

தனிக்கட்சி தொடங்கி அரசியல் செய்த டிடிவி இன்று அதிமுக கூட்டணியில் ஐக்கியமாகிவிட்டார். ஆனால், ஓ.பி.எஸ்ஸூக்கு அதிமுகவிலும் இடமில்லை. அதிமுக கூட்டணியிலும் இடமில்லை. காரணம், நிலையற்ற அவரின் முடிவுகள். எல்லாவற்றுக்க டெல்லியை சார்ந்தே செயல்பட்டார். டெல்லி சொல்லித்தான் ஈ.பி.எஸ்ஸூடன் இணைந்தேன் என்றார். இதெல்லாம் முன்னாள் முதல்வராக இருந்த ஓ.பி.எஸ்ஸின் ஆளுமை மீது கேள்வியை எழுப்பியது.

ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்

அதிமுகவை மீட்டே தீருவேன். எடப்பாடி ஒரு துரோகி. மதுரையில் ஒரு பிரமாண்ட மாநாட்டை கூட்டி எழுச்சியை காட்டப் போகிறேன் என ரீல் விடுவார். இரண்டே நாட்களில் வந்து அதிமுகவில் இணைய எந்த நிபந்தனையும் இல்லை என்பார். இதே மாதிரியான சீரற்ற நிலைப்பாடுகளும் தெளிவற்ற முடிவுகளும்தான் ஓ.பி.எஸ்ஸின் ஆதரவாளர்கள் மத்தியிலும் ஈ.பி.எஸ்ஸிடமும் அவரின் நம்பகத்தன்மையை சிதைத்தது.

தெளிவு இல்லை…

என்.டி.ஏவை வலுப்படுத்த வேண்டி பாஜக ஈ.பி.எஸ்ஸின் கரத்தை வலுப்படுத்தியது. ஓ.பி.எஸ் ஓரங்கட்டப்பட்டார். பதட்டத்தில் ஒரே நாளில் திமுக தலைவர் ஸ்டாலினை இரண்டு முறை சந்தித்தார். விஜய்யை ஆதரித்து பேசினார். நிர்வாகிகள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்தி தவெகவுடன் கூட்டணி செல்லலாம் என்ற கருத்தைப் பெற்றார்.

ஆனால், வழக்கம் போல எந்த உறுதியான முடிவையும் அவர் எடுக்கவில்லை. எந்தப் பக்கம் நின்று அரசியல் செய்யப்போகிறோம் என்ற தெளிவும் இல்லை. தேவர் ஜெயந்தியில் அவருடன் கைகோர்த்த டிடிவி என்.டி.ஏவுக்குள் வந்துவிட்டார்.

செங்கோட்டையன் - டிடிவி தினகரன் - ஓபிஎஸ்
செங்கோட்டையன் – டிடிவி தினகரன் – ஓபிஎஸ்

முடிவெடுக்கவே முடியாமல் திணறுபவர்கள்…

செங்கோட்டையன் தவெகவில் இணைந்துவிட்டார். ஓ.பி.எஸ் இன்னமும் மண்டபம் பிடித்து நிர்வாகிகள் கூட்டத்தை மட்டுமே நடத்திக் கொண்டிருக்கிறார். அதனால்தான் உறுதுணையாக உடன் நின்றவர்கள் கூட கூடாரம் மாற, ஓ.பி.எஸ் இப்போது தனித்து நிற்கிறார்.

சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுப்பவர் மட்டுமே அரசியலில் நிலைத்து நிற்க முடியும். முடிவெடுக்கவே முடியாமல் திணறுபவர்கள் காற்றில் பறக்கும் காகிதமாகிப் போவார்கள்.!

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

அதிமுக: `எமெர்ஜென்சி ஆதரவு; பாஜக-வின் நட்பு; யாருக்குமில்லா அந்த துணிச்சல்!' | கூட்டணி சர்க்கஸ் 5

அதிமுககூட்டணி சர்க்கஸ் 5ஏறுகிற மேடையிலெல்லாம் 1967 மற்றும் 1977 இல் நிகழ்ந்ததைப்...

மகாராஷ்டிரா: பாஜகவிற்கு மேயர் தேர்தலில் கைகொடுத்த உத்தவ் தாக்கரே; உட்கட்சி மோதலால் காங்கிரஸ் தோல்வி

மகாராஷ்டிராவில் கடந்த மாதம் நடந்த மாநகராட்சித் தேர்தலில் பா.ஜ.க அதிகப்படியான இடங்களைப்...

தவெக: 'வேட்பாளரை இப்படித்தான் தேர்வு பண்ணப் போறோம்' – ஆனந்த் போட்ட கண்டிஷன்; அப்செட்டில் மா.செக்கள்?

விருப்ப மனு விநியோகம் ஆன்லைன் மூலமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், திடீரென...

நெல்லை: பொருநை 9வது புத்தகத் திருவிழா தொடக்கம்; லட்சக்கணக்கான புத்தகங்களின் அணிவகுப்பு | Photo Album

`படம் தொடங்கினப்ப கருணாநிதி படத்துலயே இல்ல!' - ‘பராசக்தி தடை’ புத்தகம்...