நேற்று முன்தினம் (பிப்ரவரி 12) வங்கதேசம் முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது.
வங்கதேசத்தில் மொத்தம் 300 தொகுதிகள் உள்ளன. ஆனால், 12-ம் தேதி 299 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. இதில் 210 தொகுதிகளை வென்றுள்ளது வங்கதேச தேசிய கட்சியின் கீழ் அமைந்த கூட்டணி.
ஆக, வங்கதேசத்தின் அடுத்த பிரதமர் வங்கதேச தேசிய கட்சியின் தலைவரான தாரிக் ரஹ்மான். கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்குப் பிறகு, வங்கதேசத்தில் பிரதமராக பதவியேற்கும் முதல் ஆண் பிரதமர் இவர்.
வங்கதேசத்தில் கடந்த 12-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் மட்டும் நடைபெறவில்லை… ‘ஜூலை தேசிய சாசனம் 2025 (July National Charter, 2025)‘-க்கான தேசிய வாக்கெடுப்பும் நடந்தது.
இந்தத் தேசிய வாக்கெடுப்பிற்கு 60.26 சதவிகித மக்கள் சாதகமாக வாக்களித்துள்ளனர்.
அது என்ன ‘ஜூலை தேசிய சாசனம் 2025’?
இது வங்கதேசத்தின் ஆட்சி நிர்வாகத்தை முற்றிலும் மாற்றுவதற்கான புதிய சாசனம் ஆகும். இந்த சாசனத்தில் தேசிய கட்டமைப்பை மாற்றுவதற்கான 84 புள்ளிகள் இடம்பெற்றிருக்கின்றன.
இந்த சாசனத்தில் இடம்பெற்றிருக்கும் முக்கிய அம்சங்கள் இதோ…
> நீண்ட காலமாக ஒரே பிரதமர் நாட்டை ஆள்வதற்கு செக் வைக்கும் விதமாக, இனி ஒருவர் இரண்டு முறை மட்டுமே பிரதமர் ஆகலாம்.
> புதிதாக 100 மேல் சபை சீட்டுகள் உருவாக்கப்படும். இந்தச் சீட்டுகள் தேசிய வாக்குகளின் பங்கைப் பொறுத்து பிரித்துக்கொடுக்கப்படும்.
> பிரதமரிடம் ஒட்டுமொத்த அதிகாரமும் குவிவதைத் தடுக்க, ஜனாதிபதியின் அதிகாரம் வலுப்படுத்தப்பட உள்ளது.
> நீதிமன்றம் உள்ளிட்ட முக்கிய அரசு சார்ந்த அமைப்புகளில் அரசியல் செல்வாக்கு குறைக்கப்பட உள்ளது.
> எதிர்க்கட்சிகளுக்கு உரிய அதிகாரம் கொடுத்தல் மற்றும் எதிர்க்கட்சியினருக்கு துணை சபா நாயகர் பதவி வழங்கப்படும்.
> நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட உள்ளது.




