லண்டனில் இந்த மாதம் மார்ச் 8ம் தேதி சிம்பொனியை இசையமைப்பாளர் இளையராஜா அரங்கேற்றம் செய்ய உள்ளார்.
இதையொட்டி பலரும் இளையராஜாவிற்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். கடந்த மார்ச் 3ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் இளையராஜாவை அவரது கோடம்பாக்கம் ஸ்டுடியோவில் சந்தித்து, “தமிழக அரசு சார்பாகவும், என் சார்பாகவும், முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதி சார்பாகவும் வாழ்த்துகள். தலைவர் கலைஞர் வைத்த ‘இசைஞானி’ பட்டம்தான் உங்களுக்கு என்றும் நிலைத்து நிற்கிறது. இசைஞானியாக எல்லோருடைய இல்லங்களிலும் உள்ளங்களிலும் நீங்கள் குடியிருக்கிறீகள். எஸ்.பி.பி அதிகமாக உங்க இசையில்தான் பாடியிருக்கிறார். உங்கள் பாடல்தான் காரில் எப்போதும் கேட்பேன். ஜுன் 3ம் தேதி கலைஞர் பிறந்த நாள். அன்றைக்குத்தான் உங்களுக்கும் பிறந்தநாள். ஆனால், கலைஞர் மேல் இருக்கும் அன்பினால், உங்க பிறந்தநாளையே மாற்றிவிட்டீர்கள்” எனப் பேசியிருந்தார்.
நடிகரும், ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சித் தலைவருமான கமல்ஹாசனும் இசையமைப்பாளர் இளையராஜாவைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அவ்வகையில் தற்போது ‘விடுதலை சிறுத்தைகள்’ கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், இளையராஜாவை அவரது கோடம்பாக்கம் ஸ்டுடியோவில் நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள திருமா, “இசைஞானி அவர்களைச் சந்திக்கும் போதெல்லாம் வியப்பு மேலிடுகிறது. அவர் மானுட வாழ்வை எவ்வளவு தத்துவார்த்தமாக புரிந்திருக்கிறார் என்பதை நமக்குப் புரியவைக்கிறார்.
#இசைஞானி அவர்களைச் சந்திக்கும் போதெல்லாம் வியப்பு மேலிடுகிறது.
அவர் மானுட வாழ்வை எவ்வளவு தத்துவார்த்தமாக புரிந்திருக்கிறார் என்பதை நமக்குப் புரியவைக்கிறார்.
"இசை எனக்குத் தொழில் அல்ல; இசை என்னிலிருந்து வேறு அல்ல; இசையாகவே நான் வாழ்கிறேன்" – என அவர் விளம்புகிறபோது அவரின்… pic.twitter.com/Wq9DbkkEkf— Thol. Thirumavalavan (@thirumaofficial) March 4, 2025
‘இசை எனக்குத் தொழில் அல்ல; இசை என்னிலிருந்து வேறு அல்ல; இசையாகவே நான் வாழ்கிறேன்’ – என அவர் விளம்புகிறபோது அவரின் விழிகளிலிருந்து வீசும் ஞானஒளியை உணரமுடிகிறது. அது- தான் என்கிற அகந்தையின் வெளிப்பாடு அல்ல; தன்னை உணர்ந்துள்ள மெய்ஞானத்தின் புலப்பாடு! அவர் இசைஞானி என்பதைவிட மெய்ஞானி என்பதே பொருந்தும்.” என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.