10
April, 2026

A News 365Times Venture

10
Friday
April, 2026

A News 365Times Venture

Hezbollah: 70 ஆண்டுகாலப் பகை; போர் நிறுத்த நாடகம்; லெபனானைத் தாக்கும் இஸ்ரேல்; பின்னணி என்ன?

Date:

“இரண்டு வாரங்களுக்கு ஈரான் போர் நிறுத்தப்படுகிறது” என்ற செய்தியறிந்து உலக நாடுகள் நிம்மதிப் பெருமூச்சுவிட்டு முடிப்பதற்குள், லெபனான் தலைநகர் பெய்ரூட்டைச் சுடுகாடாக்கும் வேலையில் இறங்கியிருக்கிறார் இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு.

பெய்ரூட்டில் இஸ்ரேல் ராணுவம் பொழியும் குண்டு மழை, மீண்டும் மத்திய கிழக்கில் பெரும் போரைத் தொடங்கிவிடும் அபாயத்தை உண்டாக்கியிருக்கிறது!

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரானில், இஸ்ரேல், அமெரிக்கக் கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலால், மத்திய கிழக்கில் தொடங்கிய போர் சுமார் 40 நாள்கள் நீடித்தன.

பாகிஸ்தானின் தலையீட்டால், கடந்த ஏப்ரல் 7-ம் தேதி இந்தப் போர் இரண்டு வாரங்களுக்கு நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், “லெபனான் உள்பட அனைத்து நாடுகளிலும் தாக்குதல்கள் நிறுத்தப்படும். இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா, ஈரான் நாடுகளின் தூதுக்குழுக்கள் பேச்சுவார்த்தை நடத்தும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

லெபனான்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் தாக்குதல்கள் இரண்டு வாரம் நிறுத்த ஒப்புக்கொண்டார். இஸ்ரேலும் இந்த ஒப்பந்தத்தை வரவேற்பதாகச் சொல்லிவிட்டு, லெபனானில் தாக்குதலைத் தீவிரப்படுத்தியது.

லெபனான் – இஸ்ரேல் இடையேயான மோதல் இன்று, நேற்று தொடங்கியதல்ல… ஏழு தசாப்தங்களுக்கு முன்னர் 1948-ம் ஆண்டு, அரபு நாடுகள் – இஸ்ரேல் படைகளுக்கிடையே நடந்த போரிலேயே இரு நாடுகளுக்கும் பகை தொடங்கியிருந்தது.

பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியை யூதர்களுக்கு வழங்கும் பிரிட்டனின் முயற்சிக்கு எதிராக அரபு நாடுகள் நடத்திய போரில் லெபனான் நாட்டு வீரர்களும் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்தப் போரில் வென்ற இஸ்ரேல், வெற்றிகரமாகத் தனி நாடானது.

1978-ல், லெபனானில் பதுங்கியிருக்கும் `பாலஸ்தீன விடுதலை அமைப்பின்’ தலைவர்களை ஒழித்துக்கட்டுவதாகச் சொல்லி, அந்த நாட்டின்மீது படையெடுத்தது இஸ்ரேல். பின்னர், 1982-லும் லெபனான்மீது படையெடுத்து, சில இடங்களை ஆக்கிரமித்தது இஸ்ரேல்.

இந்த ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக ஈரானின் ஆதரவோடு லெபனானில் உருவானது `ஹிஸ்புல்லா’ புரட்சிப்படை. இதையடுத்து, இஸ்ரேல் – ஹிஸ்புல்லாவுக்கு இடையே அவ்வப்போது தாக்குதல்கள் நடைபெறுவது வழக்கமானது.

2023-ம் ஆண்டு, காஸாவில் கொடூரத் தாக்குதலில் ஈடுபட்ட இஸ்ரேலை எதிர்த்து நின்றது ஹிஸ்புல்லா படை. இதனால், லெபனானிலும் கடும் தாக்குதல்களை நடத்தியது இஸ்ரேல் ராணுவம். ஹிஸ்புல்லாவின் முக்கியத் தலைவர்கள் சிலர் கொல்லப்பட்டனர். இந்தப் போர் முடிவுற்ற பிறகு, லெபனானைத் தாக்குவதை இஸ்ரேல் சற்று குறைத்துக் கொண்டது.

இந்த ஆண்டு ஈரான் போர் தொடங்கிய பிறகு, ஹிஸ்புல்லா – இஸ்ரேல் மோதல் மீண்டும் வெடித்தது. கடந்த ஆறு வாரங்களாக நடந்த தாக்குதலில் லெபனானைச் சேர்ந்த சுமார் 130 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில்தான், பாகிஸ்தான் தலையீட்டால் மத்திய கிழக்கில் தாக்குதல்கள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இஸ்ரேலோ, “ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம் லெபனானுக்குப் பொருந்தாது” என்று சொல்லி மிகப்பெரிய ஏவுகணைத் தாக்குதலை பெய்ரூட்டில் நடத்திக் கொண்டிருக்கிறது.

எப்போதும்போல போர் விதிகளை மீறி மக்கள் வசிக்கும் பகுதிகளில் குண்டு மழை பொழிந்து, 250-க்கும் அதிகமான அப்பாவி உயிர்களைப் பறித்திருக்கிறது இஸ்ரேல்.

War
War

இரண்டு வார கால போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டு, உலக வர்த்தகத்தின் முக்கியக் கப்பல் பாதையான ஹார்மூஸ் நீரிணைப் பாதையைத் திறந்துவைத்தது ஈரான். ஆனால், லெபனான்மீது இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்கிய பிறகு, நாளொன்றுக்கு 15 கப்பல்களை மட்டுமே அனுமதிப்பதாகத் தெரிகிறது.

“போர் நிறுத்த ஒப்பந்தத்தை அப்பட்டமாக மீறி லெபனானைத் தாக்குகிறது இஸ்ரேல். இந்தத் தாக்குதலை உடனடியாக நிறுத்திக்கொள்ளவில்லை என்றால், இஸ்ரேல் வருத்தப்படும் அளவுக்கு மீண்டும் தாக்குவோம்” என்றிருக்கிறது ஈரான்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “போர் நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாக ஈரான் பின்பற்றவில்லையெனில், இதுவரை எவரும் பாத்திராத வலிமையான தாக்குதலை ஈரான்மீது நடத்துவோம். ஈரானுக்கு எந்த நாடு ஆயுதம் வழங்கினாலும், அவர்கள்மீது 50% வரி விதிக்கப்படும்” என்று எச்சரித்திருக்கிறார்.

அதே நேரம், பேட்டியொன்றில் லெபனான் தாக்குதல் குறித்தான கேள்விக்கு, “ஈரான் போர் ஒப்பந்த நிபந்தனைகள் இஸ்ரேல் மீறவில்லை” என்று பதிலளித்திருக்கிறார். நெதன்யாகுவும், “ஈரான் ஒப்பந்தத்துக்கும் லெபனான் தாக்குதலுக்கும் சம்பந்தமில்லை. தேவைப்பட்டால் ஈரானை மீண்டும் தாக்குவோம்” என்று கூறியிருக்கிறார்.

பாகிஸ்தானின் பாதுகாப்புத்துறை அமைச்சர் உஸ்மான் கவாஜா, “லெபனானிலும் இனப்படுகொலையை அரங்கேற்றிக் கொண்டிருக்கும் இஸ்ரேல், மனிதகுலத்துக்கே ஒரு சாபக்கேடு” எனக் கடுமையாகச் சாடியிருக்கிறார்.

இஸ்ரேலோ, “அமைதிக்காக மத்தியஸ்தம் பேசுவதாகச் சொல்லிவிட்டு, யூத இனத்துக்கு எதிராக நிற்கிறது பாகிஸ்தான். இத்தகைய பயங்கரவாதிகளிமிடருந்து இஸ்ரேலைப் பாதுகாப்போம்” எனப் பாகிஸ்தானுக்குப் பதிலடி கொடுத்திருக்கிறது.

இந்தப் போர் நிறுத்தத்துக்கு முயற்சித்த பாகிஸ்தானைப் பல நாடுகளும் பாராட்டிக் கொண்டிருக்கும் சூழலில், “பாகிஸ்தான் வெறும் பொம்மைதான். அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் பேச்சைக் கேட்டுக்கொண்டுதான், இதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறது பாகிஸ்தான். ஹிஸ்புல்லாவை அழிக்க போடும் நாடகம்தான் இந்தப் போர் நிறுத்தம்” என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

ட்ரம்ப் - நெதன்யாகு
ட்ரம்ப் – நெதன்யாகு

இஸ்ரேல், அமெரிக்காவின் போக்கைப் பார்க்கும்போது, `போரை நிறுத்த இந்த ஒப்பந்தத்துக்கு ஒப்புக்கொண்டார்களா… அல்லது, ஈரானின் கைகளைக் கட்டிவிட்டு ஹிஸ்புல்லாவை வேட்டையாடத் திட்டமிட்டார்களா?’ என்ற சந்தேகம் நமக்கு எழுகிறது.

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே போடப்பட்டிருக்கும் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்கெனவே பலவீனமாக இருக்கும் சூழலில், லெபனானைத் தாக்கி மீண்டும் மத்திய கிழக்கில் பெரும் போரைத் தூண்டிக் கொண்டிருக்கிறது இஸ்ரேல்.

எரிபொருள் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு என உலகமே இந்தப் போரால் திண்டாடிக் கொண்டிருக்க, மீண்டும் இந்தப் போர் தொடங்கினால் உலகம் தாங்காது.

`உலக மக்கள் விரும்புவது அமைதியைத்தானே தவிர… போரை அல்ல’ என்பதை உலகத் தலைவர்கள் உணர்ந்து, வானத்தில் ஏவுகணைகளைப் பறக்கவிடாமல், அமைதிப் புறாக்களைப் பறக்கவிட வேண்டும்!

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"அஸ்ஸாமில் வாக்களிக்க 50,000 பேர் உ.பி-யிலிருந்து வந்திருக்கின்றனர்" – மம்தா 'பகீர்' குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் இன்னும் சில வாரங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. தேசியத்...

வானதி சீனிவாசன் மருத்துவமனையில் திடீர் அட்மிட் – காரணம் என்ன?

பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ, கோவை வடக்கு...

குமரி: விபத்துகளால் பலியாகும் உயிர்கள்; நான்குவழிச் சாலை பணி முடியும் வரை கனிமவள லாரிகள் செல்ல தடை

கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளா மாநிலத்திற்குத் தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் கனிமவளங்கள்...

“காசு வாங்கி சீட்டை கொடுத்தார் கார்க்கே” – ஹசீனா சையத் பதவி பறிப்பின் பின்னணி!

``மகிளா காங்கிரஸ் கட்சிக்கு எம்.எல்.ஏ சீட் கொடுக்காமல் போனதற்கு காங்கிரஸ் கட்சியில்...