இந்தியாவில் 2024-ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையில் சுமார் 22 லட்சம் நாய் கடி வழக்குகள் பதிவாகியுள்ளதாக மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் அலியாஸ் லாலன் சிங் மக்களவையில் எழுத்துப் பூர்வமாக தெரிவித்திருக்கிறார்.
அவர் அளித்திருக்கும் தகவலில், “மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டம் (ஒருங்கிணைந்த சுகாதார தகவல் தளம்) போர்ட்டலில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தெரிவித்த தரவுகளின் அடிப்படையில், 2024-ம் ஆண்டில் 21,95,122 நாய் கடி வழக்குகளும் 37 இறப்புகளும் பதிவாகியுள்ளது.
குரங்கு கடி உள்பட பிற விலங்குகளின் கடியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,04,728. இதில், 11 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மொத்த நாய் கடி வழக்குகளில், 5,19,704 வழக்குகள் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள். நாய்க்கடிகள் அதிகம் பதிவாகும் மாநிலங்களில் நாட்டிலேயே தமிழகம் 2ஆவது இடத்தில் உள்ளது. இந்த விவகாரங்கள் மாநில அரசுகளின் வரம்பிற்கு உட்பட்டது. எனவே, இந்த சம்பவங்களை கையாள மாநில அரசுகள்தான் கடமைப்பட்டுள்ளன.” என்றார்.
தமிழகத்தின் பல முக்கிய நகரங்களில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், மக்கள் பயந்துகொண்டே தெருக்களில் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த தொடர்ந்து கோரிக்கை வைத்துக் கொண்டே வருகின்றனர்.
இந்நிலையில், இது குறித்துப் பேசிய தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம், “2023-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் 4,40,000 நாய்க்கடி வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் எண்ணிக்கை 22 பேர். 2024-ல் நாய்க்கடி எண்ணிக்கை 4,79,000. உயிரிழந்தவர்கள் 40 பேர். தமிழகத்தில் சுமார் 13 லட்சம் நாய்கள் உள்ளன. இவற்றில் தெருநாய்கள் எண்ணிக்கை நான்கரை லட்சம். தொடரும் நாய்க்கடி சம்பவங்களையடுத்து, அவற்றின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.” என்றார்.