7
April, 2025

A News 365Times Venture

7
Monday
April, 2025

A News 365Times Venture

Congress : `அன்று’ விழுத் தொடங்கிய காங்கிரஸ் இன்னும் எழ முடியாமல் திணறுவது ஏன்? – விரிவான அலசல்!

Date:

`முன்னொரு காலத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் என்ற ஒரு கட்சி இருந்ததாகவும், அதைப் பல முக்கிய அரசியல் தலைவர்கள் வழிநடத்தியதாகவும் கேள்விப்பட்டிருக்கிறோம்’ என மக்கள் பேசத் தொடங்கிவிடுவார்கள் போல. அந்தளவு கடந்த சில ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் இருக்கிறது. இதற்கான காரணம் தான் என்ன?

ராகுல் காந்தி

இந்தியாவின் மாபெரும் அரசியல் கட்சியான காங்கிரஸ், 2014 முதல் இப்போதுவரை மூன்று நாடாளுமன்றத் தேர்தலிலும் கடும் தோல்வியை சந்தித்திருக்கிறது. ஏன்…டெல்லி, மகாராஷ்டிரா போன்ற ஆதிக்கம் செலுத்திய மாநிலங்களில் கூட அடிமட்ட தோல்வியை எதிர்கொண்டது. இது காங்கிரஸ் தலைவர்களுக்கு வேண்டுமானால் அதிர்ச்சியை ஏற்படுத்தாமல் இருந்திருக்கலாம். ஆனால், அதன் தீவிர ஆதரவாளர்களுக்கு நெஞ்சுவலி வராததுதான் குறை. சமூக ஊடங்கள் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் பொரிந்து தள்ளினார்கள்.

1962-ல் இந்திய-சீனப் போர், 60-களின் மத்தியில் நிலவிய கடும் உணவுப் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, இந்திரா காந்திக்கு நேருவைப் போன்ற தனிப்பட்ட செல்வாக்கு இல்லாமை போன்ற காரணங்களால், தமிழ்நாடு, பஞ்சாப், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் காங்கிரஸுக்கு வலுவான எதிர்க்கட்சிகள் உருவாகியிருந்தது. அதனால் காங்கிரஸ் பலவீனமான நிலையில்தான் 1966-ம் ஆண்டு தேர்தலைகளைச் சந்தித்து, குறைவான தொகுதிகளுடன் ஆட்சியமைத்தது.

இந்திரா காந்தி
இந்திரா காந்தி

அப்போதே காங்கிரஸின் சரிவு தொடங்கிவிட்டது. தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் அது கண்கூடாக தென்பட்டது. தமிழ்நாட்டில் 1967-ம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த பிறகு காங்கிரஸால், மீண்டும் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்கவே முடியவில்லை. அப்போதுமுதல் மெல்ல தோல்வியின் சுவையை மட்டுமே அனுபவிக்கத் தொடங்கியது காங்கிரஸ்.

அரசியல் விமர்சகர் ப்ரியன், “2009-க்குப் பிறகு 2G ஊழல் குற்றச்சாட்டு விவகாரத்திலிருந்து காங்கிரஸின் வீழ்ச்சி வேகமாக இருந்தது. இதை பா.ஜ.க பயன்படுத்திக்கொண்டது. ‘India Against Corruption’ மூவ்மென்ட் தொடங்கி, ‘UPA அரசே ஊழல் அரசு’ என காங்கிரஸை முதல் குற்றவாளியாக மாற்றியவர்கள் அன்னா ஹசாரேவும், அரவிந்த் கெஜ்ரிவாலும். ஆனால், இதை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டது என்னமோ பா.ஜ.க-தான். அதே சமயத்தில் ‘குஜராத் மாடல்’ என்ற மோடி பிம்பத்தைக் கட்டமைக்கவும், அது காங்கிரஸுக்கு பலத்த அடியாக மாறியது. அதுதான் 2014-ம் ஆண்டுக்கான தேர்தல் முடிவு” என்கிறார்.

பாஜக, காங்கிரஸ்
பாஜக, காங்கிரஸ்

காங்கிரஸின் வீழ்ச்சியைப் புரிந்துகொள்ள கடந்த தேர்தல்களின் வரலாற்றை சுருக்கமாக பார்க்கலாம்…

2014-ம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க 31% வாக்குகளுடன் 282 இடங்களில் வென்றது. கர்நாடகா, அஸ்ஸாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், உத்தரகாண்ட், இமாச்சல் என 6 மாநிலங்களில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், அதன் வரலாற்றிலேயே மிகக் குறைவாக, அதாவது 19.3% வாக்குகளுடன் 44 தொகுதிகளை மட்டுமே வென்றது.(இப்போது மூன்று மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் இருக்கிறது).

2019-ம் ஆண்டு ‘எப்படியாவது வெற்றிப்பெற வேண்டும்’ என உழைத்தது காங்கிரஸ். ஆனால், அதை துவம்சம் செய்யும் வகையில் ‘தேசப் பாதுகாப்பு’ என்ற ஆயுதத்தை கையில் எடுத்தது பா.ஜ.க.

இது தொடர்பாக பேசிய காங்கிரஸின் ஓய்வு பெற்ற முன்னாள் எம்.பி குமார் கேட்கர், “புல்வாமா தாக்குதல் குறித்தோ, பாலகோட் தாக்குதல் குறித்தோ இதுவரை எந்த உண்மைகளையும் அரசு தெளிவாக வெளியிடவே இல்லை. ஆனால் அதை பயன்படுத்தி, ‘தேச பக்தி’ என்ற போர்வையில் வாக்காளர்களை தந்திரமாக ஏமாற்றி, 303 இடங்களைக் கைப்பற்றினார்கள். இதில் காங்கிரஸின் செல்வாக்கு பெருமளவு சரிந்தது.” என்கிறார்.

புல்வாமா தாக்குதல்
புல்வாமா தாக்குதல்

2019 தேர்தல் முடிவு குறித்து அரசியல் விமர்சகர் ப்ரியன், “தேர்தலுக்கு முன்பான புல்வாமா தாக்குதல், EWS 10% இடஒதுக்கீடு வாக்குறுதி, விவசாயிகளுக்கு வருடத்துக்கு ரூ.6000 திட்டம் என்ற கவர்ச்சிகரமான அறிவிப்புகள் மூலம் காங்கிரஸுக்கான வாய்ப்புகளை இல்லாமல் செய்தது பா.ஜ.க” என்றார்.

அதனால்தான் அந்தத் தேர்தல் முடிவில் பா.ஜ.க 37.36%​ சதவிகித வாக்குகளுடன் 303 இடங்களையும், காங்கிரஸ் 19.49% சதவிகித வாக்குகளுடன் 52​ இடங்களையும் கைப்பற்றியது.

ஆனால், 2024-ம் ஆண்டுக்கான தேர்தல் களம் சாதாரணமாக இல்லை. ஒருபக்கம் இந்தியா கூட்டணி கட்டமைப்பு, ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை எனத் தேர்தல் களத்தில் தீயாக இருந்தது காங்கிரஸ். அதன் விளைவாக காங்கிரஸ் 21.19% வாக்குகளுடன் 99 இடங்களைக் கைப்பற்றி வலுவான எதிர்க்கட்சியாக அமர்ந்தது. பா.ஜ.க தன் அறுதிப் பெரும்பான்மையை இழந்து, 36.56% வாக்குகளுடன் 240 இடங்களைக் கைப்பற்றி, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது.

காங்கிரஸ்
காங்கிரஸ்

`போதும் என்ற மனமே பொன்செயும் மருந்து’ என்பதை தவறாகப் புரிந்துகொண்ட காங்கிரஸ், `ஆட்சிய புடிக்கலனாலும் பா.ஜ.க-வுக்கு பெரிய டஃப் கொடுத்திருக்கோம்ல…’ என்ற தொணியில் 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுடன் திருப்தி மனநிலைக்கு நகர்ந்தது. அதேநேரம் பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டங்களை பெரிதாக பார்க்கமுடியவில்லை. அதற்கு அடுத்து நடக்கவிருந்த ஜம்மு – கஷ்மீர், டெல்லி சட்டமன்றத் தேர்தல்களில் கவனம் செலுத்தியது பா.ஜ.க.

90 தொகுதிகள் கொண்ட ஜம்மு – கஷ்மீரில், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிதான் ஆட்சியமைத்தது என்றாலும், காங்கிரஸ் மட்டும் வென்றத் தொகுதி என்னவோ வெறும் 6-தான். ஆனால் பா.ஜ.க 29 தொகுதிகளில் வென்றது. டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு, 48 தொகுதிகளை வென்று பா.ஜ.க ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனால், மீண்டும் பலம்பெற்றுவரும் கட்சியாக கருதப்பட்ட, காங்கிரஸின் கோட்டை என அழைக்கப்பட்ட டெல்லியில் ஒரு தொகுதியில் கூட காங்கிரஸ் வெற்றிப்பெறவில்லை.

டெல்லி தேர்தல்
டெல்லி தேர்தல்

காங்கிரஸின் தொடர் தோல்விக்கு காரணமாக ஊடகவியலாளர் நீர்ஜா சௌத்ரி இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரையில் குறிப்பிடும்போது, “காங்கிரஸில் மோடி என்ற பிம்பத்துக்கு நிகராக நிறுத்த தலைமை இல்லை என்பது அடிப்படை உண்மை. நாட்டில் பொருளாதார நெருக்கடியால் அதிகரித்துவரும் பதட்டத்தை வாக்குகளாக மாற்றும் வலிமையான கட்டமைப்பு காங்கிரஸிடம் இல்லை.

அப்படி இருந்திருந்தால், மகாராஷ்டிரா, ஹரியானா, டெல்லி போன்ற பல மாநிலங்களில் காங்கிரஸ் ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட இன்று பலவீனமாகியிருக்காது.

குஜராத்திலும், உத்தரப்பிரதேசத்திலும் 30 ஆண்டுகளாக, மேற்கு வங்கத்தில் 48 ஆண்டுகளாக, ஒடிசாவில் 25 ஆண்டுகளாக, பீகாரில் 35 ஆண்டுகளாக, தமிழ்நாட்டில் 58 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சிக்கு முதல்வரே இல்லை. இந்த 2025-ம் ஆண்டிலும் ‘மக்களின் மனம் கவரும்’ எந்த திட்டமும் காங்கிரஸிடம் இல்லை.

பிரதான எதிர்க்கட்சியாக வரிகள், வேலை வாய்ப்பின்மை, பொருளாதார நெருக்கடி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் சட்டம் – ஒழுங்கு பிரச்னை என மக்களின் பிரச்னைகளைப் பேசுவதற்கு இத்தனை வாய்ப்புகள் இருந்தும், எந்த தொலைநோக்குப் பார்வையும் காங்கிரஸிடம் இருப்பது போன்று தெரியவில்லை.

ராகுல், சோனியா, கார்கே, பிரியங்கா
ராகுல், சோனியா, கார்கே, பிரியங்கா

காங்கிரஸ் தன் பலத்தை நாடாளுமன்றத்தில் அதிகரித்த அதே வேளையில், பா.ஜ.க ஹரியானா, மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களைக் கைப்பற்றி தன் அதிகாரப் பிடியை இறுக்கியிருக்கிறது. நிறைவேற்ற வேண்டிய மசோதாக்களுக்கு ஆதரவை வரிசைப்படுத்தி வைத்திருக்கிறது. மோகன் பகவத்தை சந்தித்த பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸுடன் இருந்த முரண்பாடுபோக்கை சரி செய்திருக்கிறார்.

தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் பாஜக அரசின் மீது, மக்களுக்கு ஏற்படும் இயல்பான வெறுப்பு வரும்வரை காத்திருக்கலாம் என நினைக்கிறது காங்கிரஸ்.

தன் மாநிலத் தலைவர்கள் மூலம் அந்தந்தப் பகுதியில் இருக்கும் பிரச்னைகளை மையப்படுத்தி மக்களை எப்படி அணிதிரட்டுவது என்பதை காங்கிரஸ் மறந்துவிட்டதாகவே உணர்கிறேன். ராகுல் காந்தி மேற்கொண்ட பாரத் ஜோடா யாத்திரை அவர் மீது இருந்த ‘பப்பு’ என்ற பிம்பத்தை உடைக்க மட்டுமே பயன்பட்டிருக்கிறது.

பாரத் ஜோடோ யாத்திரை
பாரத் ஜோடோ யாத்திரை

யாத்திரை மேற்கொண்ட பகுதியில் இருக்கும் காங்கிரஸ் தலைவர்கள், ராகுல் காந்திக்கு கிடைத்த வரவேற்பைக் கருத்தில் கொண்டு, அவர் சென்ற இடங்களில் அரசியல் சக்தியை உருவாக்கவும், புதிய உறுப்பினர்களை சேர்க்கவும் ஏற்பாடு செய்திருக்கலாம். ஆனால் அவர்கள் அப்படி எதையும் முன்னெடுக்கவில்லை. இரண்டு யாத்திரைகளும் உண்மையில் கட்சியை வலுப்படுத்தக்கூடப் பயன்படுத்தப்படவில்லை.

காங்கிரஸ் கட்சியின் அறிவிக்கப்படாத தலைவராக இருக்கும் ராகுல் காந்திக்கு பதிலாக, வேறு ஒருவரை முன்னிறுத்தும் திட்டமோ, அல்லது பிரியாங்கா காந்திக்கென ஒரு வரையறுக்கப்பட்ட பணிகளோ அவர்களிடம் இல்லை. இன்னும் சொல்வதானால், சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது ஒரு சித்தாந்த கட்டமைப்பின் சுருக்கம். இதுதான் கிட்டத்தட்ட 90 சதவிகித வாக்காளர்களை காங்கிரஸ் குடையின் கீழ் ஒன்றிணைப்பதற்கான யுக்தி.

ராகுல் காந்தி
காங்கிரஸ்

ஏனென்றால், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வின் எண்ணிக்கையை 240 ஆகக் குறைத்ததின் முக்கியப் பங்கு, பிற்படுத்தப்பட்டவர்களை ஒருங்கிணைத்த கட்சிகளுக்கு உண்டு.

இப்படியான வாய்ப்புகள் பல காங்கிரஸுக்கு இருந்தாலும், பா.ஜ.க-விடம் இருக்கும் தீவிர அரசியல் பார்வையோ, திட்டங்களோ, வெற்றிப்பெற வேண்டும் என்ற ஆவலோ, விருப்பமோ காங்கிரஸிடம் இல்லை என்பதுதான் காங்கிரஸின் வீழ்ச்சிக்கு மிக முக்கியக் காரணம்.

காங்கிரஸ் தனது தோல்விகளை தத்துவார்த்தமாக எடுத்துக்கொள்ளப் பழகிவிட்டது. மோடியும், அமித் ஷாவும் ‘அதிகாரத்திற்கான தீவிர பசியுடன் இருக்கும் முதல் தலைமுறை அரசியல்வாதி’-களை பிரதிநிதித்துவப்படுத்தி களத்தில் இறக்குகிறார்கள்.

ஆனால், காங்கிரஸ் தலைமை ஐந்தாவது தலைமுறை ஆட்சியாளர்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அதற்கான நியாயமான காரணம் காங்கிரஸிடம் இருந்தாலும், வெற்றிப்பெற வேண்டும் என்ற முதல் தலைமுறை அரசியல்வாதிக்கும், வெற்றிப்பெற்றால் பார்த்துக்கொள்ளலாம் என இருக்கும் ஐந்தாம் தலைமுறை அரசியல் வாதிக்கும் இருக்கும் ஆர்வமும், தேடலும் வித்தியாசமானது” என்கிறார்.

அமித் ஷா, மோடி
அமித் ஷா, மோடி

ஒருபக்கம் அரசியல் ஆய்வாளர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகள் என்றால், மறுபக்கம் காங்கிரஸ் கட்சியின் பெயர் சொல்ல விரும்பாத ஆதரவாளர்களில் சிலர், “இவர் விலை போவார் என்று தெரிந்தே தேர்தலில் அவருக்கு சீட் கொடுக்கிறார்கள். வெற்றி பெற்ற பிறகு, அவர்கள் கட்சி தாவியதும், சட்ட நுணுக்கங்களை சரியாக கையாண்டு எதிர்வரும் காலங்களில் அதுபோல நடக்காமல் தடுக்கவும் முயல்வதில்லை.

ஆளும் கட்சியின் தவறுகளை மக்கள் புரிந்துகொள்ளும்படி கொண்டு சேர்ப்பதில்லை. கட்சியில் சிறந்த பேச்சாளர்களும், சிறந்த மொழி பெயர்ப்பாளர்களும் இல்லை. பதவி கொடுக்காததால் தனிக்கட்சி தொடங்கும் நபர்களுக்கு எந்த பாடமும் புகட்டப்படுவதில்லை. தேர்தல் வாக்குறுதிகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் அளவுக்கு தீவிரத் தொண்டர்கள் பற்றாக்குறை. இளைஞர்களை கவரும் எந்த திட்டமும் முறையாக இல்லை” எனக் கொந்தளிக்கிறார்கள்.

காங்கிரஸ் தலைவர்கள்
காங்கிரஸ் தலைவர்கள்

இதுமட்டுமல்லாமல் சிறந்த ஜனநாயகத்திற்கு வலுவான எதிர்க்கட்சி அவசியம். எதிர்க்கட்சிதான் மக்களின் பிரதிநிதியாக, அரசை விழிப்புடன் செயல்படவைக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக அமர்வதற்கு 543 தொகுதிகளில் குறைந்தது 55 தொகுதிகளை வென்றிருக்க வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளில் எதிர்க்கட்சி இல்லாமல்தான் பா.ஜ.க ஆட்சிசெய்தது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில்தான் 99 தொகுதிகளை வென்ற காங்கிரஸ், ராகுல் காந்தியை எதிர்க்கட்சித் தலைவராக அமர்த்தியது.

எதிர்க்கட்சியின் ஆக்கப்பூர்வமான பணிகளில் முக்கியமானது அரசின் கொள்கைகள், நடவடிக்கைகளை, அவற்றின் பலவீனங்களை சட்டப்பூர்வமாக விமர்சிப்பது. அரசின் விமர்சனத்துக்குரிய திட்டங்களுக்கு மாற்றாக, புதிய கொள்கைகள், திட்டங்களை முன்வைப்பது. மக்களின் கோரிக்கைகள், பிரச்சினைகளுக்கு நாடாளுமன்றத்தில் தீர்வு காண முயல்வது. அரசின் செயல்பாடுகளை கண்காணித்து, அவை ஜனநாயக மதிப்புகளுக்கு ஏற்ப உள்ளதா என்பதை உறுதி செய்வது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

பல்வேறு நாடாளுமன்ற குழுக்களில் உறுப்பினராக இருந்து, அரசின் நடவடிக்கைகளை கண்காணிப்பது. வெளிநாட்டில் இந்தியாவின் நலனை முன்னிறுத்தி, அரசுடன் ஒருங்கிணைந்து செயல்படுவது. பத்திரிகைகளுடனும், நீதி அமைப்புகளுடனும் ஒத்துழைத்து, ஊழலற்ற ஆட்சியை உறுதிபடுத்துவது. அரசின் தவறான கொள்கைகளை விளக்கி, மக்களை விழிப்புடன் வைத்திருப்பது. கேள்வி நேரங்களில், முக்கிய கேள்விகள் கேட்டு, அரசை பதிலளிக்கச் செய்வது என அதன் பொறுப்புகள் நீண்டது.

ஆளும் அரசின் குறைகளை மிகத் தெளிவாக விமர்சிக்கக் கிடைத்த இந்த வாய்ப்புகளைக்கூட, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சரியாகப் பயன்படுத்திக்கொள்வதில்லை என்றக் குற்றச்சாட்டு தீவிரமாகவே முன்வைக்கப்படுகிறது. அதாவது ஆளும் அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் வருகிறது, அவர்களின் நடவடிக்கைகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தீர்க்கமான பேச்சுகளும் தீர்வுகளும் அவையில் முன்வைப்பதில்லை என்கிறார்கள்.

2019 தேர்தலிலேயே ராகுல் காந்தி இன்னும் உறுதியுடன் செயல்பட்டிருந்தால் காங்கிரஸுக்கு இவ்வளவு பாதிப்பு இருந்திருக்காது என்கிறார் அரசியல் விமர்சகர் ப்ரியன். மேலும் பேசிய அவர், “2024 தேர்தலில் காங்கிரஸ் உறுதியுடன் செயல்பட்டது உண்மைதான். இன்னும் கொஞ்சம் தீவிரமாக வேலை செய்திருந்தால் இன்னும் கூடுதல் தொகுதிகளைக் கூட வென்றிருக்க முடியும். பா.ஜ.க-வின் செயல்பாடுகளையும் கட்டுக்குள் கொண்டுவந்திருக்கலாம்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

பா.ஜ.க தற்போது தன் அரசியல் யுக்திகளை மாற்றி, ‘பிரதமர் மோடியின் முகத்தை மட்டுமே நம்பமுடியாது’ என்ற இடத்துக்கு வந்திருக்கிறது. சாதி ரீதியாக, தேர்தல் வாக்குறுதிகளின் மூலமாக, இந்துத்துவா பிரசாரத்தை முன்வைத்து RSS மூலமாக எனப் பல்வேறு வகையில் மக்களை ஒன்றுதிரட்டுகிறது. அதேநேரம், தொடர்ந்து ஆட்சியில் இருப்பவர்கள் மீது வரும் இயல்பான மக்களின் வெறுப்பு மோடியின் பக்கம் திரும்பியிருக்கிறது. அதனால் மோடி என்ற பிம்பம் சரியத் தொடங்கிவிட்டது.

ஆனால், இந்த சரிவை தனதாக்கிக்கொள்ளும் இடத்தில் இப்போதும் காங்கிரஸ் இல்லை. எதிர்க்கட்சிகளிடம் வக்ஃப் சட்டத்தை எதிர்த்ததில் இருந்த ஒற்றுமை, தேர்தலிலும் நீடிக்குமா என்பதை சொல்ல முடியாது. காங்கிரஸ் தனிபட்ட முறையில் தன்னை இன்னும் தயார் செய்துகொள்ள வேண்டும். பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸின் செல்வாக்கு பாதாளத்துக்குச் சென்றுவிட்டது. அதையெல்லாம் மீட்டு, உறுதியாக்க வேண்டும். இதெல்லாம் நடந்தால் 2029 தேர்தலில் கடும் போட்டி நிலவும்.

இந்திரா காந்தி தலைமையின்போது, மாநிலத் தலைமையில் ஒழுங்கீனம் இருந்தால், அதை இரும்புக்கரம் கொண்டு அடக்குவார்.

பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி, சோனியா காந்தி
பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி, சோனியா காந்தி

ஆனால், இப்போது சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியாங்கா காந்தி என அதிகாரம் மூன்றாக இருக்கிறது. அவர்களும் முழுமையான அதிகாரத்தை பயன்படுத்துகிறார்களா என்பது தெரியவில்லை. இன்னும் சொல்வதானால், ராகுல் காந்தியிடம் முழுமையான அதிகாரத்தை கொடுக்க வேண்டிய சூழல்தான் நிலவுகிறது. யாராவது ஒருவரிடம் முழுமையான அதிகாரம் இருக்க வேண்டும். பழைய ஆட்களுக்கு மாற்று கொண்டுவர வேண்டும். மதில்மேல் பூனையாக இருப்பவர்களை களையெடுக்க வேண்டும். இந்தியா கூட்டணியை வலிமையாக்க சில இடங்களில் விட்டுக்கொடுக்க வேண்டும்.

இந்தி பேசும் மாநிலங்களில் காங்கிரஸை வலிமையாக்க வேண்டும். பிரசார யுக்திகளை மாற்ற வேண்டும். வலிமையான மாநில தலைமை, வலிமையான மத்திய தலைமை, புதுமையான யுக்தி, கூட்டணிக் கட்சிகளை அரவணைப்பது போன்ற நடவடிக்கைகளை உறுதியாக எடுக்க வேண்டும். கூட்டணியாக பலம் பெற நினைக்கும் இந்தியா கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் வளர்ச்சியில் விருப்பம் கொள்ளாது. காரணம், பல மாநிலங்களில் மாநில அரசியலில் அவர்கள், காங்கிரஸுடன் போட்டி போட வேண்டிய சூழல் உள்ளது.

ராகுல் காந்தி - மம்தா பானர்ஜி
ராகுல் காந்தி – மம்தா பானர்ஜி

உதாரணமாக மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் போன்ற தலைவர்களின் வாக்குகள் அனைத்தும் காங்கிரஸின் வாக்குவங்கிதான். அதனால், காங்கிரஸ் வளர்ந்தால் அந்த வாக்குகள் மீண்டும் காங்கிரஸுக்கு சென்றுவிடும். எனவே, ராகுல் காந்தியை ஆதரித்து, அதன்மூலம் கிடைக்கும் வாக்குகளை மட்டும் குறிவைக்கிறார்கள். இது ஒருவகையில் பா.ஜ.க-வுக்கும் சாதகமாகிவிடுகிறது.” என்கிறார்.

“மாநிலங்களில் மாநில கட்சிகளுடன் கூட்டணியில் இருந்தாலும் காங்கிரஸ் தனித்த அரசியல் செய்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது. தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், மாநில அரசை எதிர்க்க வேண்டிய விஷயங்களில் கூட தங்களின் எதிர்ப்பை பதிவு செய்வதில்லை. காமராஜர் ஆட்சி கொண்டு வருவோம் என ஒருவர் பேசினால், கட்சிக்குள்ளே எதிர்ப்பு கிளம்ப்பும் அளவுக்கு திமுக சார்பு நிலை தான் உள்ளது. இதே நிலை நீடித்தால் நாளடைவில் காங்கிரஸ் இன்னும் மறைந்து விடும். வரும் தேர்தல்களில் திமுக ஒதுக்கீடு செய்யும் தொகுதிகளும் குறைந்து விடும். இதே நிலை மற்ற மாநிலங்களிலும் நீடித்தால், நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான இடத்தில் கூட இந்தியா கூட்டணியில் காங்கிரஸால் போட்டியிட முடியாத நிலை ஏற்படலாம். எனவே, இதுபோன்ற சிக்கல்களை விரைவாக, சரியாக கையாண்டால் மட்டுமே காங்கிரஸால் மீண்டும் தீவிர அரசியல் களத்தில் களமாடமுடியும்” என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

வலுவான ஜனநாயகத்துக்கு வலுவான எதிர்க்கட்சி என்பது மிக முக்கியம்.!

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

Disclosure of Assets: `769 நீதிபதிகளில் 95 பேரே…'- சொத்து விவர வெளியீடு விவகாரத்தில் நடப்பதென்ன?

சில வாரங்களுக்கு முன்பு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஸ்வந்த்...

LPG: சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 50 உயர்வு; மோடி அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை, மத்திய அரசு ரூ. 50 உயர்த்தியிருக்கிறது.மத்திய...

யார் அந்த தியாகி: "அவருக்கு பட்டம் கொடுத்த நீங்கதான் சொல்லணும்" – TASMAC வழக்கில் CM-க்கு EPS பதிலடி

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று (ஏப்ரல் 7) நடைபெற்ற கூட்டத்தில், டாஸ்மாக் வழக்கு...

'அதிமுகவினர் அண்ணன், தம்பி போல உள்ளோம்; இதனால்தான் செங்கோட்டையன் உள்ளே இருந்தார்' – ஓ.எஸ்.மணியன்

அதிமுகவினர் இன்று அவையில் இருந்து வெளிநடப்பு செய்தபோது, செங்கோட்டையன் மட்டும் அவையில்...