நயினார் நாகேந்திரன் ஒரு மனதாகப் போட்டிகளின்றி பாஜக மாநிலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
புதிய தலைவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் நிகழ்ச்சியும், தேசிய பொதுக்குழு உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் நிகழ்ச்சியும் இன்று மாலை 5 மணியளவில் வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் தமிழக பாஜகவின் மாநிலத் தலைவராகப் பதவியேற்றார் நயினார் நாகேந்திரன்.
பாஜகவின் மாநிலத் தலைவராகப் பதவியேற்ற பின் பேசியிருக்கும் நயினார் நாகேந்திரன், “இருந்திடலாம் நாட்டில் பல வண்ணக்கொடி. பறக்க வேண்டும் எங்கும் ஒரே சின்னக் கொடி. அது பஞ்சம் இல்லை என்னும் அன்னக்கொடி.
அது பாரதிய ஜனதா கட்சிக் கொடியாக இருக்க வேண்டும். அது தமிழகமெங்கும் பறக்க வேண்டும்” என்ற வரிகளோடு தனது பேச்சை ஆரம்பித்தவர்,
“உலகத்திலேயே மிகப்பெரிய கட்சி. ஆயிரத்திற்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள். 250க்கு மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சி ‘பாரதிய ஜனதா கட்சி. அந்த மாபெரும் கட்சியின் மாநில தலைவர் பதவி அல்ல, தலைமை தொண்டன் பதவியில் பணியாற்ற வந்திருக்கிறேன்.
“இதற்குமுன் தமிழக பாஜக மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்றவர்கள் கட்சியை ஒவ்வொரு அடுக்காக வளர்த்து கோபுரங்களைக் கட்டினர்.
‘என் மண், என் மக்கள்’ எனப் பட்டிதொட்டியெல்லாம் கட்சியை மக்களிடம் கொண்டு சேர்த்த அண்ணாமலை அவர்கள், அந்தக் கோபுரத்தை முழுமையாகக் கட்டி முடித்து அதன் மேல் கலசங்கள் வைத்து அலங்கரித்திருக்கிறார். இப்போது அதில் கும்பாபிஷேகம் பண்ணுவதுதான் நாம் வேலை.
அந்தக் கும்பாபிஷேகம் 2026 சட்டமன்றத் தேர்தலின்போது நடத்தப் போகிறோம். அந்தக் கும்பாபிஷேகம் நடக்கப் போகிறதா அல்லது திருச்செந்தூர் சூரசம்ஹாரம் நடக்கப் போகிறதா? நாடாளுகின்றவர்களில் யார் யாரெல்லாம் காடாளாப்போகிறார்கள்? என்பதெல்லாம் அந்த இறைவன்தான் முடிவு செய்ய வேண்டும்.
இந்த பாஜக மாநில தலைவர் பதவியில் பொறுப்பேற்றதில் எனக்கு ஒரு பயமும், அச்சமும் இருக்கிறது. அண்ணாமலை மிகச் சிறப்பாகப் பணியாற்றியிருக்கிறார். அண்ணாமலை புயல், நான் தென்றல்.
‘பாஜக’வில் பெரிய பொறுப்புத் தரவில்லை என்ற வருத்தமும் கோபமும்
நான் அதிமுகவில் இருந்தபோது பொன்னார் அவர்கள் (பொன். இராதாகிருஷ்ணன்) அடிக்கடி என் வீட்டிற்கு வருவார். அவரது தாய்மாமா, என்னுடைய அப்பா இருவரும் நெருங்கிய நண்பர்கள்.
அந்த வகையில் நீண்ட காலமாகவே அவர், என்னிடம் ‘நீங்க எப்படியாவது பாஜகவிற்கு வரணும்’ என்று கூப்பிட்டுக் கொண்டே இருப்பார்.
அந்த அடிப்படையில் அண்ணன் சக்ரவர்த்தியைக் கூட்டிக்கொண்டுபோய் உள்துறை அமைச்சர் அமிஷ் ஷா முன்னிலையில் 8 ஆண்டுகளுக்கு முன் சேர்ந்தேன்.

‘அதிமுக’வில் நான் மிகப்பெரிய பொறுப்பில் இருந்ததால் ‘பாஜக’வுக்கு வந்தவுடன் ‘எனக்குப் பொறுப்புத் தரவில்லையே… பொறுப்புத் தரவில்லையே…’ என்று அடிக்கடி கேட்டுக்கொண்டே இருப்பேன்.
அந்த விஷயத்தில் ஐயா கேசவ விநாயகம் மேல் கூட எனக்குக் கோபங்களும் வருத்தமும் உண்டு. நான் எப்பவும் கொஞ்சம் வேகமாகத்தான் இருப்பேன்.
அதன்பிறகு சங்கத்தில் (ஆர்.எஸ்.எஸ்) ஏழு நாள் பயிற்சி, 15 நாள் பயிற்சிக்குப் போயிருந்தேன். அது எனக்குள் நிறைய மாற்றங்களைக் கொண்டு வந்தது.
1925ம் ஆண்டு கேசவ பலிராம் ஹெட்கேவரால் உருவாக்கப்பட்ட சங்கம் (ஆர்.எஸ்.எஸ்). அது நூற்றாண்டுகளைத் தாண்டிய சங்கம். டாக்டர் ஹெட்கேவரை நான் இந்த நேரத்தில் நினைவுகூர்ந்து நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறி, “கேசவனை நாம் வணங்குவோம். அவர் பாதையிலேயே நாம் செல்லுவோம். லட்சியத்தை எய்து காட்டுவோம். வெற்றி நாட்டுவோம்” என்ற ஆர்.எஸ்.எஸ் பாடலையும் பாடினார்.

ஊழல், பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல், மது போதைக்கு மக்களைப் பாதிப்பிற்குள்ளாக்கும் இந்த மக்கள் விரோத ஆட்சியை 2026 சட்டமன்றத் தேர்தலில் அகற்றுவோம். அதற்காக அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபடுவோம்.
அண்ணாமலை காலில் செருப்புப் போடாமல் இருக்கிறார். இந்த ஆட்சி மாற்றம் நடந்தால்தான் செருப்பு அணிவேன் என்று உறுதியில் இருக்கிறார்.
அமித் ஷா அவர்கள் ஆட்சி மாற்றத்திற்கு அடிக்கல் நாட்டிவிட்டார். தேசிய ஜனநாயக் கூட்டணி அமைந்துவிட்டது. நாள் குறிக்கப்பட்டு விட்டது.
2026 மே மாதம் நிச்சயமாக ஆட்சி மாற்றம் உறுதி. அதனால், மதிப்பிற்குரிய அண்ணாமலை இன்றே நிங்கள் செருப்பு அணிந்துகொள்ளலாம்” என்று பேசியிருக்கிறார்.

இறுதியாக… மேடையில் இருந்தவர்கள் அண்ணாமலையைச் செருப்பு அணியச் சொல்லி வலியுறுத்திக் கேட்டுக்கொண்டர். நயினார் நாகேந்திரன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஒருவழியாக அண்ணாமலை மீண்டும் செருப்பு அணிந்து கொண்டார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY