எடப்பாடி பழனிசாமி டெல்லியில் அமித் ஷாவை நேரில் சந்தித்த நாள்முதல் அதிமுக – பாஜக கூட்டணி கிட்டத்தட்ட உறுதி என்று பேச்சுக்கள் அடிபட்டது. இருப்பினும், இரு தரப்பிலிருந்தும் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகவில்லை. எடப்பாடி பழனிசாமியும், “தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. கொள்கை வேறு, கூட்டணி வேறு” என்று கூறிவந்தார்.
இத்தகைய சூழலில்தான், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்றிரவு சென்னை வந்தடைந்தார். அதையடுத்து, அதிமுக – பாஜக கூட்டணி அறிவிப்பு இன்று வெளியாகும் என்று கூறப்பட்டது. அதன்படி, இன்று மாலை 5 மணியளவில் கிண்டி தனியார் ஹோட்டலில் அமித் ஷா தலைமையில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

இந்தச் செய்தியாளர் சந்திப்பில் அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி மேடையைப் பகிர்ந்துகொண்டார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அமித் ஷா, “தமிழ்நாட்டில் 2026 தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி போட்டியிடும்” என்று அதிமுக – பாஜக கூட்டணியை உறுதி செய்தார்.