3
April, 2026

A News 365Times Venture

3
Friday
April, 2026

A News 365Times Venture

'குடைச்சல் கொடுக்கும் அதிகாரிகள்(?) மக்களிடம் நீதி கேட்கும் விஜய்; எடுபடுமா எம்.ஜி.ஆர் பாணி?'

Date:

‘மக்களே நான் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உங்களுக்காக வலிகளையெல்லாம் தாங்கிக் கொண்டு அரசியலுக்கு வந்திருக்கிறேன். எனக்கு நீதி வேண்டும்’ என பிரசாரத்தில் மக்களிடம் நீதி கேட்கிறார் தவெக தலைவர் விஜய்.

விஜய்

‘எங்கள் தலைவரின் பிரசாரத்துக்கு காவல்துறை முறையாக பாதுகாப்பு கொடுப்பதில்லை. எதாவது அசம்பாவிதத்தை நிகழ்த்தி தலைவரை முடக்கப் பார்க்கின்றனர் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரை கடிதம் அனுப்பியிருக்கின்றனர் தவெகவின் முக்கிய நிர்வாகிகள். தவெக இறுதி ஆயுதமாக கையில் எடுத்திருக்கும் நீதி கேட்கும் அரசியல் எடுபடுமா?

கடந்த மார்ச் 30 ஆம் தேதி பெரம்பூர் அம்பேத்கர் கல்லூரியில் வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம் என மூன்று தொகுதிகளில் விஜய் பிரசாரம் செய்ய திட்டமிட்டிருந்தார். பெரம்பூரில் மட்டுமே திட்டமிட்டப்படி பிரசாரம் செய்தார். கொளத்தூரில் கூட்டம் அதிகமாக இருந்ததால் பாதியிலேயே பேச்சை முடித்தவர் வில்லிவாக்கம் பிரசாரத்தையும் ரத்து செய்துவிட்டார்.

ஆனந்த், ஆதவ்
ஆனந்த், ஆதவ்

இதை முன்வைத்துதான் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிடம் ‘கொளத்தூரில் கரூர் போன்ற அலையை பார்த்தோம். அங்கே முறையாக காவல்துறை அனுமதி வழங்கவில்லை’ என ஆதவ் அர்ஜூனாவும் புஸ்ஸி ஆனந்தும் நேரில் புகார் மனுவை கொடுத்திருந்தனர். இந்த புகார் மனு பற்றி கொளத்தூர் தவெக நிர்வாகிகளிடம் பேசினோம். ‘கொளத்தூரின் பெரவள்ளூர் ஜங்ஷனில் தலைவரின் பிரசாரத்தை நடத்த திட்டமிட்டோம். முறையாக RO விடம் அனுமதி கேட்டோம். RO வும் சில அடிப்படையான வசதிகள் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்தார்.

300 நிர்வாகிகள் கலந்துகொள்வார்கள் என்றுதான் அனுமதி வாங்கினோம். தன்னெழுச்சியாக எத்தனை மக்கள் கூடுவார்கள் என்பது எங்களுக்கே தெரியாது. அதனால் முன்னெச்சரிக்கையாக 15000 தண்ணீர் பாட்டில்கள், 5000 குளிர்பானங்கள், 5 ஆம்புலன்ஸ்கள், மருத்துவர் குழு, தன்னார்வலர்கள் குழு என அத்தனை பேரையும் தயாராக வைத்திருந்தோம். ஆனால், நாங்கள் தயாராக இருந்த அளவு கூட காவலர்கள் தயாராக இல்லை. தலைவர் பிரசாரம் செய்த அந்த இடம் K1 திரு.வி.க.நகர், K5 பெரியார் நகர், K9 செம்பியம் என மூன்று ஸ்டேஷன்களின் லிமிட்டில் வருகிறது. மூன்று தரப்பும் இணைந்து பாதுகாப்பு கொடுத்திருந்தால் அங்கே கூட்டம் அப்படி திமிறியிருக்காது. அந்த ஜங்ஷனில் போக்குவரத்தை கூட மாற்றிவிடவில்லை.

கொளத்தூர் விஜய் பிரசாரத்துக்கு பிறகு
கொளத்தூர் விஜய் பிரசாரத்துக்கு பிறகு

தலைவரின் வாகனம் வரும்போது கூட்டத்தை பிளந்து கொண்டு பேருந்துகள் சென்றன. கூட்டத்தை கொஞ்சம் கட்டுப்படுத்துங்கள் எதாவது செய்யுங்கள் என காவலர்களிடம் மன்றாடினோம். ‘உங்களின் கட்சி ஆட்களை நீங்கள்தான் கட்டுப்படுத்த வேண்டும்’ என கையை விரித்துவிட்டனர். 5 பேர் மயக்கம் போட்டு விழுந்தனர். அவர்களையெல்லாம் எங்களின் மருத்துவக்குழுதான் அவசர சிகிச்சை அளித்து காப்பாற்றியது. சூழலை உணர்ந்து தலைவர் சீக்கிரம் கிளம்பியதால் மட்டுமே கரூர் போன்ற துயரம் நடக்காமல் போனது’ என்கின்றனர்.

மார்ச் 31 ஆம் தேதி வில்லிவாக்கத்தில் ஆதவ் அர்ஜூனா ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தியிருந்தார். அதில் கண்ணாடி பாட்டில்கள் வீசப்பட்டு இரண்டு பெண்கள் காயமடைந்தனர். அந்த நிகழ்வையும் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் புகாராக கொடுத்திருக்கின்றனர். இதுசம்பந்தமாக பேசும் முக்கிய நிர்வாகிகள் சிலர் ‘காவல்துறை அந்த சம்பவத்தை எதோ விபத்து போல காட்ட முனைகின்றனர். பெண்கள் மீது பாட்டில் வீசப்பட்ட சிசிடிவி புட்டேஜ் எங்களிடம் இருக்கிறது. வீசியவர்கள் இன்னும் அதிக பாட்டில்களை வைத்திருந்தனர். திட்டமிட்டே எங்கள் மீது தாக்கியிருக்கின்றனர். இதற்கு பின்னால் திமுகவின் சதி இருக்குமோ என சந்தேகிக்கிறோம். அதனால்தான் காவல்துறை உண்மையை மூடி மறைக்க பார்க்கின்றனர்’ என்றனர்.

வில்லிவாக்கம் பாட்டில் வீச்சு
வில்லிவாக்கம் பாட்டில் வீச்சு

மேலும் பேசியவர்கள், ‘தவெகவின் பிரசாரத்துக்கு அனுமதி கொடுப்பதிலும் பாதுகாப்பு கொடுப்பதிலும் காவல்துறை ஏன் தயங்குகின்றனர் என புரியவில்லை. பெரம்பூரில் தலைவரின் பிரசாரம் மார்ச் 28-ம் தேதி திட்டமிடப்பட்டது. அன்றைக்கு காவல்துறை ஏதேதோ காரணம் சொல்லி அனுமதி கொடுக்கவில்லை. உடனேதான் மார்ச் 30 ஆம் தேதிக்கு அனுமதி கேட்டோம். அதற்கும் தலைவர் தலைமைச் செயலகம் போய் தலைமைத் தேர்தல் அதிகாரியை சந்திக்கப் போகிறார் என்கிற தகவல் வந்தவுடன் தான் அடித்து பிடித்து அனுமதி கொடுத்தார்கள். தலைவர் வேன் மீது ஏறி நின்று கையசைக்க காவல்துறை அனுமதி கொடுத்தாலே கூட்டம் ஒரே இடத்தில் கூடுவதும் விரட்டி வருவதும் குறைந்துவிடும் என சி.பி.ஐ விசாரணை வரை கூறியிருக்கிறோம்.

ஆனால், சென்னை பிரசாரத்தில் அதற்கு அனுமதியில்லை. இதுசம்பந்தமாகவும் தலைமைச் செயலகத்தில் புகார் கொடுத்த பிறகுதான் திருச்சியில் தலைவர் வேன் மீது ஏறி கையசைக்க காவல்துறை ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. மற்ற கட்சிகளுக்கு எளிதில் கிடைக்கும் அனுமதிக்கு கூட நாங்கள் போராட வேண்டியிருக்கிறது. திமுக தலைமைக்கு நெருக்கமான ஒரு சில அதிகாரிகள் இப்போதும் தங்களின் வரைமுறையை மறந்துவிட்டு எங்களுக்கு எதிராக செயல்படுகிறார்கள். அதனால்தான் காவல்துறை உயர் அதிகாரிகளை மாற்றக் கோரியிருக்கிறோம்’ என்கின்றனர்.

விஜய்
விஜய்

அதிகாரிகள் தரப்பில் விசாரிக்கையில், ‘பிரசாரத்துக்கு காவல்துறைக்கு நேரடியாக அனுமதி கொடுக்கவோ பாதுகாப்பு அளிக்கவோ அதிகாரம் இல்லை. RO என்ன சொல்கிறாரோ அதைத்தான் செய்யப்போகிறோம். அப்படியிருக்க எங்கள் தலையை உருட்டுவதில் எந்த நியாயமுமில்லை.வில்லிவாக்கத்தில் நடந்த பாட்டில் வீச்சு குடிகாரர்கள் குடிபோதையில் நிகழ்த்தியது என விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. என்ன ஏதென தெரிவதற்குள்ளேயே ஒரு தரப்பை குற்றஞ்சாட்டி விடுகின்றனர்.

முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவரும் கலந்துகொள்ளும் கூட்டத்திலும் விஜய்க்க்கு கூடும் அளவுக்கு கூட்டம் கூடத்தான் செய்கிறது. அங்கே இருக்கும் ஒரு கட்டுப்பாடு, விஜய்யின் கூட்டத்திடம் இருப்பதில்லை’ என்கின்றனர்.

‘விஜய் தரப்பு ஆரம்பத்திலிருந்தே தேர்தல் ஆணையத்தை புனிதப்படுத்தியது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் எம்.பிக்கள் இணைந்து தேர்தல் ஆணையருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய போது, இங்கே தவெகவினர், ‘எலெக்சன் கமிஷன் மட்டும் வரட்டும். எங்களின் ஆட்டத்தை பாருங்கள்’ எனப் பேசிக்கொண்டிருந்தனர். இப்போதும் விஜய் திமுகவைத்தான் குறை சொல்கிறார். அவர் என்.டி.ஏவையும்தான் எதிர்க்கிறார். எனில், பா.ஜ.க அவருக்கு தேர்தல் ஆணையம் மூலம் குடைச்சல் கொடுக்காதா? அதைப் பற்றி ஏன் விஜய் பேசுவதில்லை. விஜய்யும் பழிசொல்லும் அரசியலுக்கு பழகிவிட்டார். 1980 இல் எம்.ஜி.ஆர் ‘எனக்கு நீதி வேண்டும்’ என பிரசாரம் செய்து வென்றார். அந்த பார்முலாவை விஜய் கையில் எடுக்கிறார். அது மக்கள் மத்தியில் எடுபடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்’ என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

செல்வப்பெருந்தகை ஸ்ரீபெரும்புதூர்; ஜி.கே.எம் தமிழ்குமரன்.? – வெளியான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் தேர்தலில் போட்டியிடும்...

Form 16-ன் பெயர் மட்டுமல்ல; அதன் 'நடைமுறையும்' மாறுகிறது – என்ன அது?

ஒவ்வொரு ஜூன் மாதமும் நிறுவனங்களில் வேலை பார்க்கும் சம்பளதாரர்கள் ஒவ்வொருவருக்கும் இமெயில்களில்...

தஞ்சை: `நடவடிக்கை எடுத்தது வேதனையாக உள்ளது; சுயேச்சையாகப் போட்டியிடுவது உறுதி' – பாஜக-வில் சலசலப்பு

அதிமுக கூட்டணியில் தஞ்சாவூர் தொகுதி பா.ஜ.க-வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க தலைமை, அக்கட்சியின்...