நேற்று திண்டுக்கல்லில் நடைபெற்ற திருமணத்தில் கலந்துகொண்ட நடிகர் எஸ்.வி.சேகர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, “பாலியல் குற்றங்கள் குறித்துப் பேசும்போது, ஒரு பெண் புதருக்குப் பின்னால் மறைந்து நின்றபோது குற்றவாளிகள் வந்துவிட்டார்கள் என்கிறார்கள். அதற்காகப் போலீஸ் எல்லா புதருக்குள்ளுமா லைட் போட்டு வைப்பார்கள்? நம்மை நாமேதான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்” எனப் பேசியிருந்தார்.
அவரின் இந்தப் பேச்சு சமூக ஊடகங்களில் விவாதமான நிலையில், நடிகர் எஸ்.வி. சேகர் மன்னிப்புக் கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதில், “நேற்று திண்டுக்கல்லில் நடைபெற்ற திருமண நிகழ்வின் போது, சுமார் 19 நிமிடங்கள் செய்தியாளர்களிடம் பேசினேன். அதில் பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்விக்கு நான் அளித்த பதில், சில ஊடகங்களால் தங்களுக்குச் சாதகமாகச் சிறு பகுதியாக வெட்டப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. என் பேட்டியின் சிறு பகுதியை மட்டும் பார்க்கும்போது எனது கருத்து தவறாகத் தெரிய வாய்ப்புண்டு.
எனக்கும் தாய், மனைவி, சகோதரி, மகள் மற்றும் பேத்தி எனப் பெண் உறவுகள் உள்ளனர். ‘பெண்களை நாம் மிகவும் ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்’ என்ற அக்கறையில்தான் நான் பேசினேன்.
கிராமப்புறங்களில் இயற்கை உபாதைகளுக்காக ஒரு பெண் இருட்டில் தனியாகச் செல்லும் சூழல் இருந்தால் கூட, பாதுகாப்பு கருதி யாராவது துணையாகச் செல்ல வேண்டும் என்பதே எனது எண்ணம். இதைத்தான் நான் வலியுறுத்தினேன்.
எங்கள் வீட்டில் வேலை செய்யும் பெண் வெளியூரிலிருந்து வந்தவர் என்றாலும், அவரைத் தனியாக வெளியே அனுப்ப மாட்டோம். அவருக்குத் தேவையானதை நாங்களே வாங்கிக் கொடுப்போம். அந்தப் பெண் பாதுகாப்பாகத் தனது ஊருக்குத் திரும்பும் வரை அவர் எங்கள் பொறுப்பு என்று நினைப்பவன் நான்.

அரசியல் லாபத்திற்காக யாரை வேண்டுமானாலும் குற்றம் சாட்டலாம். ஆனால், இந்தியாவில் 1500 பேருக்கு ஒரு காவலர் என்ற நிலையே உள்ளது. பாலியல் குற்றங்கள் அதிகம் நடப்பது பா.ஜ.க ஆளும் மாநிலங்களில்தான் என்று எனது நண்பர் பாண்டே ஒருமுறை குறிப்பிட்டுள்ளார். எனக்கு எந்த உள்நோக்கமும் கிடையாது. உயிருக்கு மதிப்பளிப்பவன் நான்.
பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை இன்னும் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். சமூக வலைத்தளங்கள் பெருகிவிட்ட இந்தக் காலத்தில், சுதந்திரம் என்பது வேறு, பாதுகாப்பு என்பது வேறு. பாதுகாப்போடு கூடிய சுதந்திரமே சிறந்தது.
பெண்களுக்கு எதிரான இத்தகைய கொடுமையான குற்றங்களில் ஈடுபடுவோரைக் கண்டதும் சுட வேண்டும் என்று அந்தப் பேட்டியிலேயே நான் சொல்லியிருக்கிறேன். அதேபோல், லாக்-அப் மரணங்களுக்குக் காரணமான காவலர்களை வெறும் சஸ்பெண்ட் செய்யாமல், டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும், அவர்கள் நிரபராதி என்று நிரூபணமானால் மட்டுமே மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளேன்.
நான் தர்மத்தின்படி வாழ்பவன். என்னைச் சிறு சிறு அரசியல் சர்ச்சைகளில் இழுக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். எனது பேச்சு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு, அதனால் எனது யாதவ சமூகத்தைச் சேர்ந்த பெற்றோர்கள், தாய்மார்கள் மற்றும் சகோதர சகோதரிகளுக்கு ஏதேனும் மனவருத்தமோ, மன உளைச்சலோ ஏற்பட்டிருந்தால், அதற்கு எனது மனப்பூர்வமான மன்னிப்பைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு எப்போதும் இருந்ததில்லை. அனைவருடனும் சகோதரத்துவத்துடன் பழக வேண்டும் என்பதே எனது ஒரே எண்ணம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.




