20
March, 2026

A News 365Times Venture

20
Friday
March, 2026

A News 365Times Venture

காந்தியுடன் மோதும் 3 திமுக புள்ளிகள்; எஸ்.எம்.சுகுமார் எஸ்கேப் | ராணிப்பேட்டை மாவட்டம் யாருக்கு?

Date:

முந்துவது யார்?

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போதைய நிலவரப்படி, யார் களத்தில் முந்துகிறார்கள் என்பது குறித்து விவரிக்கும் பக்கம் தான் `முந்துவது யார்?’

ராணிப்பேட்டை மாவட்டத்தில், அரக்கோணம் (தனி), சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. நான்கிலும் தி.மு.க – அ.தி.மு.க கூட்டணி மும்முரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கின்றன.

அதே சமயம், சீட் எதிர்பார்த்து முட்டிக்கொள்ளும் நிர்வாகிகளால் இரண்டு கூட்டணிகளிலுமே சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. தற்போதைய களச் சூழலில், நான்கு தொகுதிகளிலும் யார் முந்துகிறார்கள்? வெற்றி வாய்ப்பு எந்தக் கட்சிக்கு சாதகமாக இருக்கிறது? என்பதை பார்ப்போம்.

அரக்கோணம் (தனி) சட்டமன்றத் தொகுதி

அரக்கோணம் தனித் தொகுதியில் 1,99,165 வாக்காளர்கள் இருக்கின்றனர். இந்தத் தொகுதியை அ.தி.மு.க தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. அ.தி.மு.க-வின் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டச் செயலாளரான சு.ரவி, அரக்கோணம் தொகுதி எம்.எல்.ஏ-வாக மூன்றாவது முறையாகத் தொடர்கிறார்.

வரும் தேர்தலிலும், அ.தி.மு.க சார்பாக சு.ரவியே மீண்டும் அரக்கோணத்தில் களமிறங்குகிறார். வேட்பாளர் அறிவிப்புக்கு முன்னதாகவே, வாக்குசேகரிப்பிலும் தீவிர கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார் சிட்டிங் எம்.எல்.ஏ-வான சு.ரவி.

சு.ரவி – பவானி வடிவேலு

தி.மு.க சார்பாக நெமிலி ஒன்றியச் சேர்மனும், தி.மு.க ஒன்றியச் செயலாளருமான பெ.வடிவேலுவின் மனைவி பவானிக்கு சீட் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

அரக்கோணம் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, தி.மு.க-வைச் சேர்ந்த பவானி வடிவேலு உட்பட 48 பேர் தி.மு.க தலைமையில் விண்ணப்பம் அளித்திருந்தனர். அவர்களுக்கான நேர்காணல் இன்று நடைபெற்றது. அப்போது, `வி.சி.க-வுக்கு அரக்கோணம் தொகுதியைக் கொடுக்கக்கூடாது. கூட்டணிக்கு கொடுப்பதால் அ.தி.மு.க-வுக்கு வெற்றி சாதமாகி விடுகிறது. உதயச்சூரியன் சின்னத்தில் நமது வேட்பாளரைக் களமிறக்கினால் மட்டுமே தொகுதியில் வெற்றிபெற முடியும்’ என தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலினிடம் 48 பேரும் கூட்டாக தெரிவித்திருக்கின்றனர்.

முடிவாக, பவானி வடிவேலுவின் பெயருக்கு நேராக `ஓகே’ என `டிக்’ அடித்திருக்கிறாராம் ஸ்டாலின் என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில்.

சோளிங்கர் சட்டமன்றத் தொகுதி

`திருக்கடிகை’ எனும் சோளிங்கர் தொகுதியில், மொத்தம் 2,56,118 வாக்காளர்கள் இருக்கின்றனர். இந்தத் தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ-வாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஏ.எம்.முனிரத்தினம் இருக்கிறார். கடந்த 1989, 1991, 1996 மற்றும் 2021 ஆகிய நான்கு சட்டமன்றத் தேர்தல்களிலும் வெற்றிபெற்று, சோளிங்கர் தொகுதியில் நான்காவது முறையாக எம்.எல்.ஏ-வாக வலம் வந்துகொண்டிருக்கிறார் முனிரத்தினம்.

அதேபோல, 2011 மற்றும் 2016 சட்டமன்றத் தேர்தல்களிலும் போட்டியிட்டு இருமுறை தோல்வியடைந்திருக்கிறார் முனிரத்தினம். இதில் சுவாரஸ்யம் என்னவெனில், 2011 தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி சீட் கொடுக்காததால் `காஸ்’ சின்னத்தில் சுயேட்சையாகக் களமிறங்கி தோல்வியடைந்தார்.

கடந்த 2021 தேர்தலின்போதும், முதலில் அவருக்கு சீட் மறுக்கப்பட்டது. இதனால், காங்கிரஸில் இருந்து விலகி தி.மு.க-வில் இணையப் போவதாக பேட்டி கொடுத்து பரபரப்பைக் கூட்டினார். இதையடுத்து, முனிரத்தினத்துக்கே சீட் வழங்கப்பட்டு சமரசம் செய்யப்பட்டது.

வரும் தேர்தலிலும், `ஏடாகூடமாக முனிரத்தினம் ஏதாவது செய்துவிடப் போகிறார்’ என்பதை கவனத்தில் கொண்டு, தொகுதி பங்கீட்டு உத்தேச பட்டியலில் சோளிங்கர் தொகுதியை மீண்டும் தி.மு.க தலைமையிடம் கேட்டிருக்கிறது காங்கிரஸ் கட்சி.

சோளிங்கர் தொகுதி மீண்டும் காங்கிரஸுக்கு கொடுக்கப்பட்டால் முனிரத்தினமே வேட்பாளராக களமிறக்கப்படுவார். அதே சமயம், சோளிங்கர் தொகுதியிலும் போட்டியிட விரும்பி தி.மு.க நிர்வாகிகள் 34 பேர் விருப்ப மனு அளித்திருக்கின்றனர்.

அமைச்சர் ஆர்.காந்தியின் மகன் வினோத் காந்தி சோளிங்கர் தொகுதியில் விருப்ப மனு கட்டியதாக தகவல் வெளியாகியிருந்த சூழலில், இன்று நடைபெற்ற நேர்காணலில் வினோத் காந்தி கலந்துகொள்ளவில்லை. எனவே, அவர் விருப்ப மனு அளிக்கவில்லை என்பதும் உறுதியாகியிருக்கிறது.

ஏ.எம்.முனிரத்தினம்

சோளிங்கர் தொகுதியில், அ.தி.மு.க கூட்டணி வலுவாக இருந்தாலும், கூட்டணிக்குள் அடித்துகொள்ளாத குறையாக சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. அ.தி.மு.க கூட்டணியில் கடந்த முறைபோல சோளிங்கரில் பா.ம.க மீண்டும் போட்டியிட விரும்புகிறது. கூட்டணியில் இணைந்திருக்கும் அ.ம.மு.க-விலும் முன்னாள் எம்.எல்.ஏ-வும், அ.ம.மு.க மாவட்டச் செயலாளருமான என்.ஜி.பார்த்திபனும் தொகுதியை விட்டுதர மறுக்கிறார்.

2024 எம்.பி தேர்தலில், அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க சார்பாக களமிறங்கி தோல்வியடைந்த ஏ.எல்.விஜயனும் சட்டமன்றத் தேர்தலில் சீட் எதிர்பார்க்கிறார். இதனால், கூட்டணியே சலசலத்து கிடக்கிறது.

பா.ம.க இரண்டாக பிரிந்திருப்பதால், அன்புமணி தரப்பு சோளிங்கர் தொகுதியில் வீக்காக இருக்கிறது. காரணம், கடந்த தேர்தலின்போது பா.ம.க சார்பாக களமிறங்கி சுமார் 83,000 வாக்குகள் பெற்று இரண்டாமிடம் பிடித்த அ.ம.கிருஷ்ணன், இப்போது ராமதாஸ் அணியில் பயணிக்கிறார்.

இந்த முறை ராமதாஸ் தரப்பில் இருந்து அ.ம.கிருஷ்ணன் சுயேட்சையாகவும் களமிறங்கத் திட்டமிட்டிருக்கிறார். எனவே, அன்புமணி தரப்பு அ.தி.மு.க கூட்டணியில் வேட்பாளரைக் களமிறக்கினால், பெருவாரியான வன்னியர் வாக்குகளை அ.ம.கிருஷ்ணன் பிளவுப்படுத்தக் கூடும் என்கிறார்கள் பாட்டாளிகள்.

இதனால், தற்போதைய சூழல்படி அ.தி.மு.க-வில் ஏ.எல்.விஜயன் அல்லது அ.ம.மு.க-வில் முன்னாள் எம்.எல்.ஏ என்.ஜி.பார்த்திபன் ஆகியோரில் ஒருவர் களமிறங்கும் பட்சத்தில், சோளிங்கர் தொகுதியில் அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெறும் என்பதே கள நிலவரமாக இருக்கிறது.

ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதி

`ஸ்டார்’ தொகுதி ராணிப்பேட்டை. இந்தத் தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ-வாக இருப்பவர் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சரான ஆர்.காந்தி. மீண்டும் ராணிப்பேட்டை தொகுதியில் களமிறங்க ஆயத்தமாகிவிட்டார் காந்தி.

அதே சமயம், காந்தியை எதிர்த்து தி.மு.க-வில் மேலும் 3 பேர் விருப்ப மனு அளித்திருக்கின்றனர். ராணிப்பேட்டை நகரச் செயலாளராக இருந்து காந்தியால் கட்சிப் பதவி பறிக்கப்பட்டு ஓரங்கப்பட்ட குட்டி என்கிற கிருஷ்ணமூர்த்தி, பா.ம.க-வில் இருந்து தி.மு.க-வுக்கு வந்த கரிகாலன், விவசாய அணியில் பயணிக்கும் பூண்டி ஊராட்சி மன்றத் தலைவர் வேணு ஆகிய 3 பேரும் இன்று நடைபெற்ற நேர்காணலில் கலந்துகொண்டனர்.

இவர்கள் 3 பேரும் காந்தியுடன் மோதல் போக்கில் இருப்பதால், இவர்களுடனான நேர்காணலை சில நிமிடங்களிலேயே முடித்துக்கொண்டாராம் ஸ்டாலின். ஆகவே, காந்திக்கே மறுபடியும் சீட் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

ஆர்.காந்தி – எஸ்.எம்.சுகுமார்

அதே சமயம், `கடந்த 5 ஆண்டுகளாக சட்டப்பேரவையில் காந்தி தூங்கிகொண்டுதான் இருந்தார்’ என பேரவையில் அவர் கண் அசந்து தூங்கிவழியும் போட்டோக்களை பொதுவெளியில் காட்டி கடுமையாக கலாய்த்து வருகிறார்கள் ராணிப்பேட்டை தொகுதி அ.தி.மு.க-வினர். இந்த நிலையில், கடந்த முறை காந்தியை எதிர்த்து அ.தி.மு.க சார்பாக போட்டியிட்ட அக்கட்சியின் ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளரான எஸ்.எம்.சுகுமார் சத்தமில்லாமல் இந்த முறை பக்கத்திலுள்ள ஆற்காடு தொகுதிக்கு தாவியிருக்கிறார். இதனால், ராணிப்பேட்டை தொகுதியை கூட்டணியிலுள்ள பா.ம.க பக்கம் தள்ளிவிடலாமா அல்லது மறைந்த அ.தி.மு.க மாநிலங்களை முன்னாள் எம்.பி முகமது ஜானின் மகனுக்கு வாய்ப்பு தரலாமா? எனவும் அ.தி.மு.க தலைமையிடம் உசுப்பேற்றிக்கொண்டிருக்கிறாராம் எஸ்.எம்.சுகுமார்.

தி.மு.க அமைச்சர் காந்தியுடன் மோத துணிவில்லாமல், அ.தி.மு.க மாவட்டச் செயலாளரே வேறு தொகுதிக்கு ஓட்டம் பிடித்திருப்பதும் களத்தில் எதிரொலிக்கிறது. இதனால், ராணிப்பேட்டை தொகுதியில் அ.தி.மு.க பெரும் பின்னடைவைச் சந்திக்க வாய்ப்புண்டு.

இஸ்லாமியர்களின் ஆதரவுடன் தி.மு.க-வே மீண்டும் வெற்றிபெறும் என்பதே ராணிப்பேட்டை தொகுதியின் களநிலவரமாகவும் இருக்கிறது. ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 2,45,853 வாக்காளர்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆற்காடு சட்டமன்றத் தொகுதி

ஆற்காடு சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 2,43,565 வாக்காளர்கள் இருக்கின்றனர். தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ-வாக தி.மு.க மாவட்ட இளைஞரணி அமைப்பாளரான ஜெ.எல்.ஈஸ்வரப்பன் இருக்கிறார்.

`2016, 2021 ஆகிய இருமுறையும் தொடர்ந்து எம்.எல்.ஏ-வாக இருந்துவிட்டதால் ஈஸ்வரப்பனுக்கு வரும் தேர்தலில் வாய்ப்பு வழங்கக் கூடாது. அவரின் செயல்பாடுகள் சுமாராக இருக்கிறது’ என்று மாவட்டச் செயலாளரான அமைச்சர் காந்தியே தலைமைக்கு அழுத்தம் கொடுக்கிறார்.

தி.மு.க மாவட்ட பொருளாளரும், ஆற்காடு தொழிலதிபருமான ஏ.வி.சாரதியும் சீட் எதிர்பார்க்கிறார். கடந்த எம்.பி தேர்தலில், ஜெகத்ரட்சகன் போட்டியிடாமல் இருந்திருந்தால் ஏ.வி.சாரதிக்குத்தான் எம்.பி சீட் கிடைத்திருக்கும். அந்த அளவுக்கு பொருளாதார செல்வாக்குடன் வலம் வரும் சாரதிக்கும், அமைச்சர் காந்திக்கும் ஏழாம் பொருத்தம் என்பதால், சாரதியையும் ஓரங்கட்டி வைத்திருக்கிறார் காந்தி.

ஏ.வி.சாரதி

ஆற்காடு தொகுதியில் வன்னியர் சமூக மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். ஏ.வி.சாரதியும் வன்னியர் என்பதால், அந்தச் சமூக மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. பொருளாதார வலிமையும் இருப்பதால், சாரதிக்கு சீட் கிடைக்கும் பட்சத்தில் அ.தி.மு.க-வை எளிதாக வீழ்த்த முடியும். அப்படி நடந்தால், `எதிர்காலத்தில் தனக்கும், தனது மகன் வினோத் காந்திக்கும் சாரதி போட்டியாக அமைந்துவிடுவார்’ என்று டம்மியான நிர்வாகி ஒருவரின் பெயரை பரிந்துரைத்திருக்கிறாராம் காந்தி.

அதற்கேற்ப, ஆற்காடு தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 14 பேர் விண்ணப்பம் அளித்திருக்கின்றனர். அவர்கள் அனைவரும் இன்று நடைபெற்ற நேர்காணலிலும் கலந்துகொண்டனர். ஏ.வி.சாரதி மற்றும் சிட்டிங் எம்.எல்.ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன் ஆகிய இருவரும்கூட அந்தக் கூட்டத்தில் அமைதியாக அமர்ந்திருந்து முதலமைச்சரை சந்தித்துவிட்டு தொகுதி பக்கம் திரும்பியிருக்கிறார்கள்.

அ.தி.மு.க-வில், மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.சுகுமார் தொகுதி மாறி வந்திருப்பதால், `எப்படியாவது ஜெயித்துவிட வேண்டும்’ என அள்ளி இறைத்துக்கொண்டிருக்கிறார். தற்போது, ராணிப்பேட்டை தொகுதியில் வாக்குகளை பெறுவதற்காக காந்தி என்னவெல்லாம் செய்துகொண்டிருக்கிறாரோ, அதை அப்படியே ஆற்காடு தொகுதியிலும் காப்பி – பேஸ்ட் செய்துகொண்டிருக்கிறார் எஸ்.எம்.சுகுமார். தற்போதைய சூழலில், தி.மு.க-வில் நிலவும் உட்கட்சி உறுமலால் அ.தி.மு.க-வுக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

என்டிஏ கூட்டணி உறுதி… `லாட்டரி’ சார்லஸ் லஜகவுக்கு இரண்டு சீட்! – பாஜக-வுடன் தொடர்கிறார் ரங்கசாமி

புதுச்சேரி 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து வெற்றிபெற்ற...

அஸ்ஸாம்: ஹிமந்தா போட்ட மாஸ்டர் பிளான்; 'ஆபரேஷன் தாமரை'யில் சிக்கிய காங்கிரஸ் – என்ன நடக்கிறது?

இந்திய அரசியலில் வடகிழக்கு மாநிலங்களின் நுழைவுவாயிலாகக் கருதப்படும் மாநிலம் அஸ்ஸாம். இந்தியாவில்...

`9 நாள்களுக்குப் பிறகு தகனம் செய்யப்பட்ட மாணவியின் உடல்' – கண்ணீரில் வேடநத்தம் கிராமம்!

தூத்துக்குடியில் கொலை செய்யப்பட்ட பள்ளி மாணவியின் உடல் இன்று பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது....