வி.சி.க – தி.மு.க இடையேயான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெறவில்லை என்றும் வி.சி.க-வுக்காக குரல் கொடுக்க தி.மு.க கூட்டணியில் யாருமே இல்லை என விரக்தியடைந்து வருகிறார்கள் வி.சி.க மாநில நிர்வாகிகள் சிலர்.
வி.சி.க மாணவரணி துணைச் செயலாளர் நெப்போலியனின் சமூக வலைதள பதிவில், “தி.மு.க-வில் இருக்கிற நாயுடு சமூகத்தை சேர்ந்த அமைச்சர்கள், நிர்வாகிகள் தே.மு.தி.க-வை கூட்டணிக்கு கொண்டுவந்து அதிக தொகுதிகளை வாங்கிதந்து கொண்டிருக்கிறார்கள். அதேபோல வன்னியர் சமூகத்தை சேர்ந்த அமைச்சர்கள், நிர்வாகிகள் பாட்டாளி மக்கள் கட்சி போன்ற கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டுவர பகிரங்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால், தி.மு.க-வில் இருக்கும் தலித் அமைச்சர்கள், நிர்வாகிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? எப்பேர்பட்டாவது விடுதலை சிறுத்தைகளை காலி செய்து விட வேண்டும் அவர்களை ஒழித்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் இருக்கக்கூடிய அமைச்சர்களைத்தான் நாம் பார்க்க முடிகிறது. திமுகவில் லாபி செய்வதற்கு நமக்கு யாரும் இல்லை நம்ம தலைவர்தான் பேசி பேசி சீட்டை அதிகம் பெற்று ஆக வேண்டும்” என்றிருக்கிறார்.
இதையடுத்து, தி.மு.க – வி.சி.க இடையே என்ன தான் நடக்கிறது என விசாரித்தோம், நம்மிடம் பேசிய விபரமறிந்தவர்கள், “சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் முதற்கட்ட தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தை முடித்திருக்கிறார் வி.சி.க தலைவர் திருமாவளவன். இரட்டை இலக்க தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதில் அவர் உட்பட ஒட்டுமொத்த வி.சி.க முகாமும் உறுதியாக இருக்கிறது.

ஆனால், ஏகப்பட்ட கட்சிகள் கூட்டணியில் இருப்பதாகக் கூறி 5 அல்லது 6 தொகுதிகளை பெற்றுக் கொள்ளுங்கள் என தி.மு.க மெசெஜ் அனுப்பியதாகச் சொல்லப்படுகிறது. இந்த தகவலால் வி.சி.க முன்னணி நிர்வாகிகள் பலரும் விரக்தியடைந்து வருகிறார்கள். இதன் வெளிப்பாடாகவே முன்னணி நிர்வாகிகள் பலரும் சமூக வலைதளங்களில் வெடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். தி.மு.க என்னதான் பேச்சுவார்த்தை நடத்தினாலும் 8 – 10 தொகுதிகளுக்கு குறைவான தொகுதிகளை ஏற்க வி.சி.க முன்னணி நிர்வாகிகள் தயாராக இல்லை” என்கிறார்கள்.




