“நீண்ட இழுபறி , விமர்சனங்கள், பேச்சுவார்த்தைகள் என பல்வேறு நெருக்கடிகளை சந்தித்த காங்கிரஸ் – தி.மு. க கூட்டணி பேச்சவார்த்தையில் முடிவு எட்டப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இன்று மாலை நான்கு மணிக்கு அறிவாலயத்தில் இரண்டு கட்சிகளுக்கும் சீட் ஒதிக்கீட்டு ஒப்பந்ததில் கையெழுத்திடுகிறார்கள் என்கிறார்கள் இரு கட்சிக்கும் நெருக்கமான சிலர்.
காங்கிரஸ் கட்சியின் டெல்லி தலைமை முப்பது இடங்களுக்கு மேல் எப்படியும் பெற்றுவிடவேண்டும் என்று போராடியது. நேற்று இரவு செல்வபெருந்தகை மகள் நிச்சயதார்த்த விழாவில் பங்கேற்ற முதல்வர் மற்றும் ப.சிதம்பரம் தனியாக ஆலோசனை நடத்தினார்கள்.
இதன்பிறகு டெல்லியில் உள்ள சோனியா மற்றும் ராகுலை தனிதனியாக தொடர்பு கொண்டு முதலில் பேசியிருக்கிறார் சிதம்பரம். அதன்பிறகு கார்க்கேவிடம் பேசிய சிதம்பரம், தமிழகத்தில் தி.மு.க கூட்டணியில் உள்ள சிக்கலை பற்றி விளக்கியுள்ளார். இந்த முறை உள்ளாட்சியில் நமக்கு கூடுதல் இடங்களை ஒதுக்க தி.மு.க தலைமை ஒப்புக்கொண்டுள்ளது. 2028-ம் ஆண்டு மேலும் ஒரு ராஜ்ய சபாவை பெற்றுக்கொள்ளலாம் என்று கார்கேவின் மனதை கரைத்துள்ளார் சிதம்பரம்.
இறுதியாக கனிமொழியும் சோனியா தரப்பை தொடர்பு கொண்டு, “அண்ணன் 28 தொகுதிகளை கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளார். நீங்களும் இறங்கி வாந்தால் கூட்டணி ஒப்பந்தம் இறுதியாகிவிடும். வியாழன் அன்று ராஜ்ய சபாவிற்கான வேட்புமனுவையும் தாக்கல் செய்துவிடலாம். ராஜ்ய சபா வேட்பாளராக நீங்கள் யாரை வேண்டுமானாலும் நிறுத்திக்கொள்ளுங்கள்” என்று காங்கிரஸ் தரப்புக்கு தகவலை சொல்லியுள்ளார் கனிமொழி.
இன்று அதிகாலை சிதம்பரம் தி.மு.க தரப்பை தொடர்பு கொண்டு 28 சீட் ஒரு ராஜ்யசபாவுக்கு டெல்லி தலைமை ஓ.கே சொல்லிவிட்ட தகவலை சொல்லியுள்ளார்.

அதன்பிறகே இன்றுமாலை அறிவாலயத்தில் ஒப்பந்தம் செய்துக்கொள்ளும் முடிவு எடுக்கப்பட்டது. இதுவரை தி.மு.க கூட்டணி பேச்சுவார்த்தையில் வருத்ததில் இருந்த கிரஷ் சோடாங்கரும் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள இருப்பதும் ஹைலைட்டாக பார்க்கப்படுகிறது.
தி.மு.க தர உள்ள ஒரு ராஜ்ய சபா இடத்திற்கு காங்கிரஸ் கட்சி மீனாட்சி நடராஜன் என்பவரை நிறுத்த உள்ளது என்கிறார்கள். கும்பகோணத்தை சேர்ந்த தமிழரான இந்த பெண், மத்திய பிரதேசத்தில் வசித்து வருகிறார். டெல்லியில் ராகுல் டீமுக்கு நெருக்கமான நபராக வலம்வரும் இவரை ராஜ்யசபா உறுப்பினராக்க ராகுல் விரும்புகிறார். காங்கிரஸ் சார்பில் இவரை ராஜ்ய சபாவிற்கு தேர்வு செய்ய உள்ளார்கள்.
தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் சிலரும் இந்த ரேஸில் குதித்துள்ளார்கள். குறிப்பாக பீட்டர் அல்போன்ஸ், தங்கபாலு, திருநாவுக்கரசர் உள்ளிட்டோரும் இந்த ரேஸில் உள்ளார்கள்.
முடிவு விரைவில் தெரியும்.!




