2
March, 2026

A News 365Times Venture

2
Monday
March, 2026

A News 365Times Venture

ஸ்டாலின்: முதல் தேர்தலிலே தோல்வி… தோற்ற தொகுதியிலே வென்றது எப்படி? | முதல் களம் 08

Date:

(`முதல் களம்’ – தமிழக தேர்தல் வரலாற்றில் பல்வேறு தலைவர்கள், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அப்படியான தலைவர்களின் முதல் தேர்தலும் அதனை சுற்றி நடந்த முக்கிய சம்பவங்களும் சுவாரஸ்ய தகவல்களின் தொகுப்பும் தான் `முதல் களம்’ எனும் தொடர்.)

மு.க. ஸ்டாலின் 1989-ல் முதல்முறையாக தமிழ்நாடு சட்டமன்றத்திற்குள் நுழைந்தபோது, அது திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு (திமுக) ஒரு சாதாரண தேர்தல் வெற்றியாக மட்டும் அமையவில்லை. இரண்டாம் தலைமுறைத் தலைவராக, ஏற்கெனவே இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் பயணம் மேற்கொண்டவரின் வருகையாகவே அது பார்க்கப்பட்டது. 

மாணவச் செயல்பாட்டாளராகத் தொடங்கி, இளைஞர் அணி அமைப்பாளராக உருவெடுத்து, அவசர நிலைச் சிறைவாசி ஆகி, கட்சியின் எதிர்கால முகமாக உருவானவரின் அதிகாரபூர்வ நுழைவு அது. சென்னையின் முக்கிய நகர்ப்புறப் பகுதியான ஆயிரம் விளக்குத் தொகுதியிலிருந்து ஸ்டாலின் பெற்ற வெற்றி, தமிழ்நாட்டின் சமகால அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான திருப்புமுனைகளில் ஒன்றாக இன்றும் நிற்கிறது. அந்த ஒரு வெற்றிதான் அவரை சட்டமன்ற உறுப்பினரிலிருந்து மேயர், அமைச்சர், துணை முதலமைச்சர் என்பதாக உயர்த்தி, இறுதியில் முதலமைச்சர் அலுவலகம் வரை கொண்டுசென்ற பயணத்தின் தொடக்கப் புள்ளியாக அமைந்தது. 

ஸ்டாலின்

1989 தேர்தல், ஸ்டாலினுக்கு முதன்முதலாக சட்டமன்ற உறுப்பினர் பதவியைக் கொடுத்தாலும், அதற்கு நீண்ட காலம் முன்பே, அவர் தேர்தல் அரசியலுக்குத் தயாராகத் தொடங்கிவிட்டார்.

பதின்வயது சிறுவனாக 1967-ஆம் ஆண்டு தேர்தலின்போது, திமுகவுக்கு ஆதரவாக துண்டு பிரசுரங்களை விநியோகித்தும், பிரசாரத்தில் ஈடுபட்டும், அரசியலுக்குள் அடியெடுத்து வைத்த ஸ்டாலின், 1970-களின் நடுப்பகுதியில் இளைஞர் அணி அமைப்புப் பணியில் முழுமையாக இறங்கினார். 1976-ஆம் ஆண்டு, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் கொண்டுவரப்பட்ட மிசா சட்டத்தின் கீழ் சிறை சென்றார் ஸ்டாலின். அந்த அனுபவமே, அவரது பொதுவாழ்வுக்கான மனஉறுதியை மேலும் வலுப்படுத்தியதாக பல மூத்த திமுக தலைவர்கள் இன்றும் சொல்கிறார்கள்.

1980-களில், திமுக இளைஞர் அணியை கட்சியின் மிக வலிமையான அமைப்புப் பிரிவாக உருவாக்கினார் ஸ்டாலின். மாவட்டப் பொறுப்புகளை ஏற்று, பூத் கமிட்டிகளை வலுப்படுத்தினார். தேர்தல் வருவதற்கு நீண்ட காலம் முன்பிருந்தே நகர்ப்புற குடிசைப் பகுதிகளிலும், தெருக்களிலும் தொடர்ந்து பணியாற்றும் தொண்டர் பட்டாளத்தை உருவாக்கினார்.

இந்த நிலையில்தான், 1984-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் முதன்முதலாக சென்னை,  ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டார் ஸ்டாலின். ஆனால், வெற்றி பெறவில்லை. அந்தத் தேர்தலில், திமுக மொத்தமே 24 இடங்களில்தான் வெற்றி பெற்று இருந்தது. அப்போது உடல் நலம் குன்றியிருந்த எம்.ஜி.ஆருக்கு ஆதரவாக வீசிய அனுதாப அலை, இந்தத் தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்ததாக திமுக தலைவர்கள் கருதினர்.

எனவே, 1989-ல் மீண்டும் ஸ்டாலினை அதே தொகுதியில் நிறுத்த  முடிவு செய்தது திமுக தலைமை. இந்த முடிவு வெறும் அடையாளத்துக்கானதாகவோ அல்லது தற்செயலான ஒன்றாகவோ இருக்கவில்லை. மாறாக, கட்சியின் எதிர்காலத்தை வடிவமைக்க இருக்கும் தலைவருக்கு ஏற்ற சோதனை களமாகவே ஆயிரம் விளக்கு தொகுதியை, கட்சித் தலைவர் கருணாநிதி உள்ளிட்ட மூத்த தலைவர்கள்  கருதினர். 

நடுத்தர வர்க்கக் குடும்பங்கள், தொழிலாளர் வகுப்பினரின் குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் எனக் கலந்திருந்த இந்தத் தொகுதி, இளைஞர்களை ஒன்றுதிரட்ட வசதியாகவும், நகர்ப்புறப் பொது பிரச்னைகளை எழுப்பக்கூடியதாகவும் இருந்தது. இவை இரண்டும், ஸ்டாலினின் முக்கிய பலமாக இருந்தவை. கருணாநிதியும் திமுக உயர்மட்டத் தலைமையும் ஸ்டாலினின் அமைப்புப் பணி, குறிப்பாக இளைஞர் அணிச் செயலாளராக நீண்ட காலம் செயல்பட்டது, இரண்டாவது கட்டத்துக்கு அவரைத் தயாராக்கி விட்டதாக நம்பினர். இந்த நிலையில், அப்போதைய காலகட்டத்தில் இயல்பாகவே சென்னை மாநகரத்துக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகள், திமுகவுக்குப் பலம் வாய்ந்த தொகுதிகளாகவே இருந்தன. 

இந்த நிலையில், எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னர் அதிமுக இரண்டாக பிளவுபட்டிருந்த ஒரு சூழலில், அடுத்து ஆட்சி அமைக்கப்போவது திமுகதான் என்கிற பேச்சு, தேர்தலுக்கு முன்னதாகவே எழுந்தது. ஊடகங்களிலும் அதே கருத்து பிரதிபலிக்கப்பட்ட நிலையில், ஸ்டாலினை மீண்டும் ஆயிரம் விளக்கு தொகுதியில் நிறுத்துவதில் எந்தப் பிரச்னையும் இருக்காது என திமுக மேலிடம் கருதியது. 

அது உண்மைதான் என்பது தேர்தல் முடிவில் நிரூபணமானது. அந்தத் தேர்தலில் திமுக கூட்டணி 169 இடங்களைக் கைப்பற்றிய நிலையில், திமுக மட்டும் 150 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. ஸ்டாலின் 50,818 வாக்குகள் பெற்று, அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக ஜெ.பிரிவு வேட்பாளரான தம்பிதுரையை 20,634 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். திமுகவுக்கு சென்னையில் கிடைத்த மிகத் தெளிவான, மிகப் பெரிய நகர்ப்புற வெற்றியாக இது பதிவானது. இந்தப் பின்னணியால்தான், 1989-ல் ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி என்பது, ‘புதிதாக வந்தவரின் எழுச்சி’ போலத் தெரியாமல், நீண்ட காலம் பயிற்சி பெற்ற அரசியல் மாணவனின் இயல்பான பட்டமளிப்பு நிகழ்வு போலவே தெரிந்தது.

ஆயிரம் விளக்கு தொகுதி, ஒரு நகர்ப்புறத் திராவிட அடையாளத்தைக் கொண்டிருந்தது. கல்வி, பொது பங்களிப்பு, சமூக நீதி ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தியதால், திமுக இங்கே ஆழமான, உறுதியான ஆதரவுத் தளத்தை உருவாக்கியிருந்தது. அந்த வகையில், தனது கட்சிக்கான இரண்டாம் தலைமுறைத் தலைவரை இந்தத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுத்தன் மூலம், ஒரு தெளிவான செய்தியை வெளியுலகுக்கு திமுக சொல்லியது. 

அதே நேரம் மாநில அரசியல் ,பெரிய ஆளுமைகளின் ஆதிக்கத்தில் இருந்த காலகட்டத்தில் இளம் தலைவர்களை முன்னிறுத்த கட்சி தயாராக இருக்கிறது என்பதையும் அது அறிவித்தது. ஸ்டாலினைப் பொறுத்தவரை இந்தத் தொகுதி, சென்னையின் அரசியல் உணர்வு மிக்க மக்கள் மத்தியில் அவருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது. 

1989 வெற்றிக்குப் பிறகு ஸ்டாலினின் உயர்வு திடீர் பாய்ச்சலாக இல்லை. படிப்படியாகவே நடந்தது. 1991 தேர்தலில், திமுக மாநிலம் தழுவிய தோல்வியைச் சந்தித்தபோதிலும், அவர் பொதுவாழ்விலிருந்து ஒதுங்கவில்லை. மாறாக, கட்சி அமைப்புப் பணியில் இன்னும் தீவிரமாக இறங்கினார். 1996-ல் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது, அதே ஆயிரம் விளக்கு தொகுதியில்தான் மீண்டும் வெற்றி பெற்றார் ஸ்டாலின். அதே ஆண்டில்,  நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சென்னையின் முதல் மேயராகவும் பொறுப்பேற்றார்.

மாநகராட்சி மேயராக அவர் பதவி வகித்த காலமே அவரது நிர்வாக திறனுக்கான பயிற்சியாகவும், அதற்கான உண்மையான களமாகவும் அமைந்தது. சாலைகள், குப்பை மேலாண்மை, வீதி விளக்குகள், பூங்காக்கள், பள்ளிகள் என நகரை அழகுபடுத்தும்’சிங்கார சென்னை’ திட்டம் அறிமுகமானது. இது, ஆட்சி நிர்வாகத்தில் நம்பிக்கை கொண்ட தலைவராக அவரை வெளிப்படுத்தியது.  

கருணாநிதி- ஸ்டாலின்

2006-ல் திமுக மீண்டும் ஆட்சி அமைத்தபோது, ஸ்டாலின் ஏற்கனவே ஆயிரம் விளக்கில் பலமுறை வெற்றி பெற்று நிறைவான அனுபவம் பெற்றிருந்தார். இந்தமுறை அவர் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். நகராட்சி நிர்வாகத்தில் பெற்ற அனுபவத்திற்கு மிகவும் பொருந்திய துறை அது. 2009-ல் துணை முதலமைச்சராக உயர்த்தப்பட்டபோது, திமுகவில் நீண்ட காலமாகத் தயாராகிக்கொண்டிருந்த தலைமுறை மாற்றம் பகிரங்கமாகவும் அதிகாரபூர்வமாகவும் அறிவிக்கப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர் , மேயர் , அமைச்சர் என அமைதியாகவும் அளவாகவும் நடந்த உயர்வு, ஸ்டாலினை ‘வாரிசு’ என்று மட்டும் சொல்ல முடியாத அளவுக்கு, அனுபவத்தால் வார்க்கப்பட்ட தலைவர் எனக் காட்டுவதை திமுகவுக்கு எளிதாக்கியது.

2018-ல் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மறைந்தபோது, திமுக ஸ்டாலினை கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுத்தது. அப்போது அவர் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், மேயர், அமைச்சர், துணை முதலமைச்சர் என அனைத்துப் பொறுப்புகளிலும் பணியாற்றியவராக இருந்தார். 1989 ஜனவரி 22 அன்று முதல்முறையாக சட்டமன்றத்திற்குள் நுழைந்த  மு.க. ஸ்டாலின், 2021 மே 7 அன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றார்.

கருணாநிதி மறையும் வரை அவரது நிழலிலேயே வளர்ந்த மு.க. ஸ்டாலின், திமுக தலைவராக பதவியேற்ற பின்னர், இவரால் கட்சியை வழிநடத்தி, திமுகவை ஆட்சிக்கட்டிலில் அமர்த்த வைக்க முடியுமா என்கிற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழத்தான் செய்தது. ஆனால், 2019 நாடாளுமன்ற தேர்தலிலும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல், 2021 ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களிலும் திமுகவுக்கு கிடைத்த வெற்றி, அவர் மீதான அத்தனை சந்தேகங்களுக்கும் விடையளிப்பதாகவும், அவரது ஆளுமையை நிரூபிப்பதாகவும் இருந்தது. 

ஸ்டாலின்
ஸ்டாலின்

2021 தேர்தலில், ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதிக்கு மாறிவிட்டாலும், அவரை உயர்த்திய தேர்தல் வெற்றிக்கான பயணம் தொடங்கிய இடம் ஆயிரம் விளக்கு தொகுதிதான். கட்சிக்குள் அவரை வேறுபடுத்திக் காட்டும் நிர்வாக அனுபவத்தை வளர்த்தெடுக்கவும், திமுகவில் இயற்கையான வாரிசாக அவரை நிலைநிறுத்துவதற்கும் அடிப்படைப் பங்காற்றியதும் அந்தத் தொகுதிதான்.  அந்த வகையில், ஆயிரம் விளக்கு தொகுதியில் ஸ்டாலினுக்கு கிடைத்த முதல் வெற்றி, ஒரு தலைமைக்கான மக்கள் அங்கீகாரமாகவும், நீண்ட கால உழைப்புக்கான அடித்தளமாகவும் அமைந்தது!  

(தொடரும்)

Loading…

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போர்: தற்காப்பு எனும் பெயரில் ஐரோப்பிய நாடுகளும் இணைகிறதா?

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தொடுத்துள்ள போர் மூன்றாவது நாளாக இன்று...

தொகுதிப் பங்கீடு: "எங்கள் வலிமைக்கு ஏற்ப அதிகாரப் பகிர்வு அமைய வேண்டும்" – திருமாவளவன் சொல்வது என்ன?

அண்ணா அறிவாலயத்தில் இன்று (மார்ச் 2) திமுக தொகுதிப் பங்கீடு குழுவுடன்...

மதுரை தேசிய ஜனநாயகக் கூட்டணி மாநாடு: கைகோத்த கூட்டணிக் கட்சித் தலைவர்கள் | Photo Album

``காங்கிரஸ், திமுகவை 'கோ-பேக்' சொல்லி திருப்பி அனுப்புங்கள்!" – புதுச்சேரியில் சீறிய...

ஈரானுக்கும், அமெரிக்கா, இஸ்ரேலுக்கும் தானே போர் – பிறகு துபாய், கத்தார், குவைத் மீது தாக்குதல் ஏன்?

கடந்த சனிக்கிழமையில் (பிப்ரவரி 28) இருந்து ஈரானைத் தாக்கி வருகின்றன அமெரிக்காவும்,...