மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் இன்று காலை தொடங்கியது. மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரண்டு அவைகளின் உறுப்பினர்களும் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய திரௌபதி முர்மு, “அனைத்து குடிமக்களுக்கும் சுகாதார சேவைகளை உறுதி செய்வதற்காக, நாட்டில் 1.75 லட்சம் ‘ஆரோக்கிய மந்திர்’ நிறுவப்பட்டுள்ளது. புற்றுநோய் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, பல புற்றுநோய் மருந்துகளுக்கான வரி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஆறு கோடி குடிமக்களுக்கு சுகாதார காப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பழங்குடி சமூகத்தின் ஐந்து கோடி மக்களுக்காக ‘தர்தி ஆபா ஜன்ஜாதியா கிராம் உட்கர்ஷ் அபியான்’ திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. பெண்களின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு 3 கோடி ‘லக்பதி தீதி’-க்களைக் உருவாக்க அரசு இலக்கு வைத்துள்ளது.” உட்பட பல திட்டங்களைக் குறிப்பிட்டு பேசினார்.
அவரின் உரை முடிந்த பின்னர் நாடாளுமன்றத்துக்கு வெளியே, மாநிலங்களவை உறுப்பினர் சோனியா காந்தியிடம் குடியரசுத் தலைவர் உரை குறித்து பத்திரிகையாளர்கள் கேட்டபோது, “உரையின் கடைசியில் அவர் மிகவும் சோர்வாக இருந்தார். அவரால் பேச முடியவில்லை. பாவம்.” என்று கூறினார். சோனியா காந்தி இவ்வாறு கூறுகையில், ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் அருகில்தான் இருந்தனர்.
#WATCH | Delhi | After the President's address to the Parliament, Congress MP Sonia Gandhi says,"…The President was getting very tired by the end…She could hardly speak, poor thing…" pic.twitter.com/o6cwoeYFdE
— ANI (@ANI) January 31, 2025
அடுத்த சில நிமிடங்களிலேயே, குடியரசுத் தலைவரை சோனியா காந்தி அவமதித்துவிட்டதாக பா.ஜ.க தரப்பிலிருந்து பலரும் கருத்து தெரிவிக்கத் தொடங்கினர். அதற்கு, அவரின் மகள் எம்.பி பிரியங்கா காந்தி, “என் அம்மாவுக்கு 78 வயதாகிறது. இவ்வளவு நீண்ட உரையை வாசித்ததால் சோர்வடைந்தார் என்று சாதாரணமாகத்தான் அவர் கூறினார். குடியரசுத் தலைவர் மீது அவருக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஊடகங்கள் இதைத் திரித்துக் கூறியது மிகவும் துரதிஷ்டவசமானது. அவர்கள் இருவரும் மரியாதைக்குரியவர்கள் மற்றும் நம்மை விட வயதானவர்கள்.” என்று ஊடகத்திடம் கூறினார்.
இந்த நிலையில், சோனியா காந்தியின் கூற்றுக்கு குடியரசுத் தலைவர் மாளிகை எதிர்வினையாற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில், “காங்கிரஸ் கட்சியின் சில முக்கிய தலைவர்கள், குடியரசுத் தலைவர் உரை குறித்து ஊடகங்களிடம் பதிலளிக்கையில், அந்தப் பதவியின் கண்ணியத்தைப் புண்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

குடியரசுத் தலைவர் கடைசியில் சோர்வடைந்துவிட்டதாகவும், அவரால் பேச முடியவில்லை என்றும் கூறியிருக்கின்றனர். ஆனால், உண்மையில் குடியரசுத் தலைவர் எந்த நேரத்திலும் சோர்வடையவில்லை. எனவே, இதுபோன்ற கருத்துகள் மோசமானவை மற்றும் முற்றிலும் தவிர்க்க வேண்டியவை.” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.