24
April, 2025

A News 365Times Venture

24
Thursday
April, 2025

A News 365Times Venture

Pahalgam Attack: பின்னணியில் `TRF’ தீவிரவாதக் குழு… யார் இவர்கள்? | முழுத் தகவல்

Date:

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இந்தியாவிற்கு வந்திருக்கிறார். இந்தியப் பிரதமர் மோடி சவுதி அரேபியாவிற்கு அரசு முறைப் பயணமாக சென்றிருக்கிறார். உலக நாடுகளின் கவனம் இந்தியாவின் மீது குவிந்திருக்கிறது. இந்த நேரத்தில், கொடூரத் தாக்குதல் ஒன்று ஜம்மு – காஷ்மீரில் அரங்கேற்றப்பட்டிருக்கிறது.

பிரதமர் மோடி – வான்ஸ்

தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பிரபலமான சுற்றுலாத் தலம் பஹல்காம். இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்த சுற்றுலாப் பயணிகள், ஆசுவாசமாக இருந்த அந்த நிமிடங்களில், திடீரென வந்தக் கூட்டம் அவர்களை சாரமாரியாகச் சுட்டுத் தள்ளியது. இந்தச் சம்பவத்தில் 25-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கின்றனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உடனே நாடு பரபரப்பாகிறது. உலக நாடுகளின் தலைவர்கள், இந்தத் தாக்குதலை எதிர்த்துக் கண்டனம் தெரிவிக்கின்றனர்.

சவூதி சென்றிருந்த பிரதமர் மோடி உடனடியாக தன் பயணத்தை ரத்து செய்துவிட்டு இந்தியா வருகிறார். உடனே அமைச்சரவைக் கூட்டத்துக்கான அழைப்புகள் பறக்கிறது. அதே நேரம் ‘இந்தத் தாக்குதலுக்கு நாங்கள்தான் காரணம்’ என ஒரு தீவிரவாதக் குழு பொறுப்பேற்றதாக உளவுத்துறை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

இப்படி ஒரே நாளில் ஒட்டுமொத்த நாட்டையும் பதற்றத்தில் ஆழ்த்தியதாகக் கூறப்படும் அந்தத் தீவிரவாதக் குழு, எப்படி இதனை செய்தது? உளவுத்துறை அதிகாரியும், இந்தியக் கடற்படை அதிகாரியும் கொல்லப்படுகிறார்கள் என்றால் இந்தியாவின் உளவுத்துறை என்ன செய்துக்கொண்டிருக்கிறது? யார் இவர்கள்?

சவூதியில் பிரதமர் மோடி
சவூதியில் பிரதமர் மோடி

ஜம்மு & காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தைக் கொடுக்கக் கூடிய இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 370, ஆகஸ்ட் 5-ம் தேதி 2019-ம் ஆண்டு நீக்கப்பட்டது. பெரும்பாலான எதிர்க்கட்சிகள் இந்த நீக்கத்தை எதிர்த்தன. ஒரு சில கட்சிகள் இதனை வெளிப்படையாக ஏற்கவும் முடியாமல், எதிர்க்கவும் முடியாமல் தத்தளித்தன. இந்த நீக்கம் செல்லாது என்று அறிவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. (உச்ச நீதிமன்றம் சட்டப்பிரிவு நீக்கம் செல்லும் என தீர்ப்பளித்தது) அதே நேரம், இந்த சட்டப்பிரிவு ரத்துக்கு எதிராக காஷ்மீரில் போராட்டம் முதல் பல்வேறு எதிர்வினைகளை மத்திய அரசு சந்தித்தது. அதில் ஒன்று 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட `The Resistance Front (TRF)’.

ஜம்மு காஷ்மீர் இந்தியாவுக்கா? பாகிஸ்தானுக்கா? என்ற அரசியல், அதிகார மோதலுக்கான வினைகள்தான் ஜம்மு காஷ்மீரைச் சுற்றிச் சுழலும் வன்முறைகளும், தாக்குதல்களும். சூரியனைப் பார்க்க விளக்கு தேவை இல்லை என்பதுபோலதான் இதன் பின்னணியில் பாகிஸ்தானிலிருந்து செயல்படும் பல்வேறு தீவிரவாதக் குழுக்கள் இருப்பதை விளக்கத் தேவையில்லை. அதில் முக்கியமான தீவிரவாத அமைப்பு லஷ்கர்-இ-தொய்பா (LeT).

இந்த அமைப்பின் நிழலாக ‘ஷேக் சஜ்ஜாத் குல்’ தலைமையில் உருவானதுதான் ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) என்றத் தீவிரவாதக் குழு எனவும், ஆரம்பத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன், லஷ்கர்-இ-தொய்பாவைச் சேர்ந்த கேடர்களைக் கொண்டு இந்தத் தீவிரவாதக் குழு உருவாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஜம்மு - கஷ்மீர்
ஜம்மு – கஷ்மீர்

ஷேக் சஜ்ஜாத் குல்

அக்டோபர் 10, 1974 அன்று ஸ்ரீநகரில் பிறந்த ஷேக் சஜ்ஜாத் குல் லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடையவர். உள்துறை அமைச்சக அறிவிப்பின்படி, TRF தளபதியான ஷேக் சஜ்ஜாத் குல், UAPA-வின் நான்காவது அட்டவணையின் கீழ் பயங்கரவாதியாக 2022 -ம் ஆண்டு அறிவிக்கப்பட்டார்.

ஜம்மு காஷ்மீரில் தொடரும் தாக்குதல்களுக்கு, குறிப்பாக தற்போது நடந்த பஹல்காம் தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பாவின் உயர்மட்டத் தளபதியான சைஃபுல்லா கசூரி, காலித் உள்ளிட்டவர்களுடன் சேர்ந்து இவரும் சதித்திட்டம் தீட்டியதாக உளவுத்துறை சந்தேகிக்கிறது.

பெயர்க் காரணம்

லஷ்கர் மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது என்றப் பெயர்கள் மத அர்த்தங்களைக் கொண்டிருக்கின்றன. அதனால், அந்தப் பெயர்களை மாற்ற வேண்டும் எனப் பாகிஸ்தான் கேட்டுக்கொண்டது. எனவே, ‘எதிர்ப்பு’ என்பதைக் குறிக்கும் வகையில் The Resistance Front எனப் புதியப் பெயரைப் பரிந்துரைத்ததாகக் கூறப்படுகிறது. அந்தப் பெயரை லஷ்கர்-இ-தொய்பா ஏற்றுக்கொள்ளவில்லை. அதே நேரம் ஜம்மு-கஷ்மீரில் பொதுப் பெயரில் ஒரு அமைப்பை வளர்க்க The Resistance Front என்றப் பெயர் பொருத்தமாக இருக்கும் என அந்தப் பெயரிலேயே குழு உருவாக்கப்பட்டது என உளவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

ஜம்மு - கஷ்மீர்
ஜம்மு – கஷ்மீர்

புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு இந்தியா ஸ்தம்பித்த பெரும் தாக்குதல் என்றால் அது இந்த பஹல்காம் தாக்குதல்தான். 370 சட்டப் பிரிவு ரத்து செய்யப்பட்டதற்குப் பிறகு காஷ்மீருக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதைச் சுட்டிக்காட்டி மே 30, 2019 அன்று TRF வெளியிட்ட அறிக்கையில், “காஷ்மீரில் குடியேறும் நோக்கத்துடன் வரும் எந்தவொரு இந்தியரும் ஒரு குடிமகனாக அல்ல, RSS-ன் முகவராகவே கருதப்படுவார். அவர் மீது உரிய முறையில் நடவடிக்கை எடுக்கப்படும் என நாங்கள் வெளிப்படையாக அறிவிக்கிறோம்” என முதல் எச்சரிக்கையை வெளியிட்டது.

இந்தத் தாக்குதலுக்கு முன்பு வெளியிட்டதாகக் கூறப்படும் அறிக்கையில், “ஜம்மு – காஷ்மீரில் 85,000-க்கும் மேற்பட்ட குடியிருப்புப் பத்திரங்கள் வெளியூர்காரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இது இந்திய ஆக்கிரமிப்பு ஜம்மு & காஷ்மீரில் (IIOJK) மக்கள்தொகை மாற்றத்திற்கான பாதையை உருவாக்குகிறது.

ஜம்மு - கஷ்மீர்
ஜம்மு – கஷ்மீர்

வெளியூர் வாசிகள் சுற்றுலாப் பயணிகளாகக் காட்டிக் கொண்டு வருகிறார்கள், குடியிருப்புகளைப் பெறுகிறார்கள், பின்னர் அவர்கள் நிலத்தைச் சொந்தமாக வைத்திருப்பது போல் செயல்படுகிறார்கள். இதன் விளைவாக, சட்டவிரோதமாக குடியேற முயற்சிப்பவர்களை நோக்கி வன்முறை நிகழ்த்தப்படும்” எனக் குறிப்பிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

TRF-ன் ஒவ்வொரு பிரசாரமும் காஷ்மீரை இந்தியாவுடன் ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகளைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என குற்றம்சாட்டுகிறது மத்திய அரசு.

வன்முறைகளின் வரலாறு!

ஜம்மு – காஷ்மீரின் குப்வாரா அருகே உள்ள கட்டுப்பாட்டுக் கோடு (LoC) அருகே 2020 ஏப்ரல் 1 அன்று தொடங்கிய ஆயுத மோதல், நான்கு நாள் நீடித்தது. இந்த ஆயுதத் தாக்குதல்தான் TRF-ன் முதல் தாக்குதல் எனக் குறிப்பிடப்படுகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) ஐந்து நாட்களுக்கும் மேலாக இரு தரப்புக்கும் மத்தியில் நடந்த சண்டையில் இராணுவத்தின் சிறப்புப் படைகள் அதிகாரி (JCO) உட்பட ஐந்து வீரர்கள் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து அவ்வப்போது தாக்குதல்கள் சிறியளவில் நடந்து வந்தது.

ஜம்மு - கஷ்மீர்
ஜம்மு – கஷ்மீர்

TRF தனக்கு ஆதரவானவர்களை ஒன்று சேர்க்கவும், தன் தீவிரவாதக் குழுவில் இளைஞர்களை இணைத்துக்கொள்ளவும் சமூக ஊடகங்களை பயன்படுத்தத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, ‘ஜம்மு – காஷ்மீருக்குள் ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களைக் கடத்துதல், தீவிரவாதக் குழுவுக்கு ஆள் சேர்த்தல்’ போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் TRF ஐ “பயங்கரவாத அமைப்பு” என ஜனவரி 2023-ல், உள்துறை அமைச்சகம் அறிவித்து தடை செய்தது.

தொடர்கதையாகும் பொறுப்பேற்புகள்

ஜம்மு காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் எனப் பல்வேறு அமைப்புகள் செயல்படுவதாக உளவுத்துறை தெரிவிக்கிறது. ஆனால், ஜம்மு காஷ்மீர் முழுவதும் பல்வேறு தாக்குதல்கள் நடந்தாலும், 2020-ம் ஆண்டிலிருந்து TRF மட்டுமே பொறுப்பேற்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2024 அக்டோபரில் ஜம்மு-காஷ்மீரின் காண்டர்பால் மாவட்டத்தில் ஒரு கட்டுமான இடத்தை தாக்கினர், இதன் விளைவாக ஒரு உள்ளூர் மருத்துவர் மற்றும் ஆறு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.

மோடி
மோடி

இந்தத் தாக்குதலுக்கும் தடைசெய்யப்பட்ட அமைப்பான TRF பொறுப்பேற்றது. ஜம்மு – காஷ்மீரில் பொதுமக்கள், பாதுகாப்புப் படைகள், அரசியல் பிரமுகர்களை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட ஏராளமான தாக்குதல்களுக்கும் இந்த தீவிரவாத அமைப்புதான் பொறுப்பேற்றது. அதேப்போலதான் தற்போது நடந்திருக்கும் பஹல்காம் தாக்குதலுக்கும் இந்த தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றிருப்பதாக தெரிவிக்கிறார்கள் இந்திய உளவு அதிகாரிகள்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`50 தொகுதிகள்' EPS கையில் பட்டியல், வொர்க்அவுட் ஆகுமா புது Work Plan?! | Elangovan Explains

இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில்,அடுத்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக புதுப் புது திட்டங்களை...

Pahalgam Attack: “J&K செல்வது அவர் திட்டமே இல்லை, ஆனால்…" – கலங்கும் கடற்படை அதிகாரியின் தாத்தா!

ஹரியானாவின் கர்னாலைச் சேர்ந்த 26 வயது இந்திய கடற்படை அதிகாரி லெப்டினன்ட்...

Tasmac Case : `முகாந்திரம் உள்ளது' – ED சோதனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி

சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் அலுவலகத்தில் கடந்த மார்ச் 6-ந்தேதி முதல்...

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்; பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நேரில் ஆறுதல் சொன்ன அமித்ஷா

ஜம்மு காஷ்மீரின் பகல்ஹாமல் நேற்று பயங்கர தாக்குதல் நடந்துள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு...