ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் குதிரை சவாரி செய்து பைசரன் மலை உச்சி வரை சென்று அங்கிருக்கும் ரிசார்ட்டில் தங்கி வருவது பிரபலமான சுற்றுலாப் பயணமாக இருந்து வருகிறது. சுற்றுலாப் பயணிகள் அங்கு இருக்கும் இந்தக் குதிரை சவாரிப் பயணத்தை மேற்கொள்வது நாள்தோறும் இயல்பாக நடக்கும் ஒன்றுதான். ஆனால், நேற்று அந்த பைசரன் மலை உச்சியில் அமைந்துள்ள ரிசார்ட் அருகே திடீரென தீவரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கின்றனர்.
தீவிரவாதிகளின் இந்தத் தீடீர் துப்பாக்கிச் சூட்டில் இதுவரை வெளிநாட்டினர் 2 பேர் உள்ளிட்ட 28 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்திருப்பதாகவும், காயமடைந்தவர்கள் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பரமேஸ்வரம், சந்துரு, பாலச்சந்திரா ஆகிய 3 பேர் காயமடைந்தனர்.
சம்பவ இடத்திலிருந்து தப்பிப் பிழைத்தவர்களிடம் நடத்திய விசாரணையில் தீவிரவாதிகளின் அடையாளங்கள், தோற்றங்கள் வரையப்பட்டிருக்கின்றன. தீவிரவாதிகளை கண்டுபிடிக்க உதவுபவர்களுக்கு தக்கப் பரிசுத் தொகையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த சில நாள்களாக இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்த அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், இந்தத் தீவிரவாத தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து, தீவிரவாத்தை ஒழிக்க எந்த உதவியையும் செய்யத் தயாராக இருப்பதாகக் கூறியிருக்கிறார்.
இந்நிலையில் இந்தக் கொடூரத் தாக்குதல் குறித்துப் பேசியிருக்கும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “தீவிரவாதத்தை ஒழிப்பதில் எந்தவித சமரசமுமில்லை. கோழைத்தனமான இந்தத் தாக்குதலுக்கு எதிராக ஒவ்வொரு இந்தியரும் நிற்கின்றனர்.
தக்க பதிலடி கொடுக்கப்படும்
இந்தத் தாக்குதலை நடத்திய கோழைத்தனமான தீவிரவாதிகளையும், அவர்கள் பின்னால் மறைந்திருக்கும் தீவிரவாத கும்பலையும் விரைவில் பிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கானப் பணிகளை தீவிரமாகச் செய்து கொண்டிருக்கிறோம்
இந்தத் தாக்குதலில் பரிதாபமாக உயிரிழந்தவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அப்பாவி மக்கள் மீது நடத்திய இந்தக் கோழைத்தனமான கொடூரத் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்” என்று பேசியிருக்கிறார்