அதிமுக – பாஜக கூட்டணியை மத்திய உள்துறை அமித் ஷா இன்று உறுதி செய்திருக்கிறார். முன்னதாக, நேற்றிரவு சென்னை வந்திறங்கிய அமித் ஷா, மதியம் சுமார் ஒன்றரை மணிநேரம் குருமூர்த்தியுடன் அவரது இல்லத்தில் பேச்சவார்த்தை நடத்திவிட்டு, மாலை கிண்டி தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களைச் சந்திக்கத் தயாராக இருந்தார்.
அதன்படி, மாலை ஐந்து மணியளவில் கிண்டி தனியார் ஹோட்டலில் அமித் ஷா முன்னிலையில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. மேடையில் அமித் ஷாவின் வலதுபுறம் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், இடதுபக்கத்தில் அண்ணாமலையும் அமர்ந்திருந்தனர். அப்போது பேசிய அமித் ஷா, “தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி போட்டியிடும்” என்று அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணியை உறுதி செய்தார்.

அதைத்தொடர்ந்து பத்திரிகையாளர் ஒருவர், “பா.ஜ.க-வின் மாநில தலைவர் மாற்றப்பட்ட பிறகுதான், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அ.தி.மு.க இணைந்திருக்கிறதா? மாநில தலைவரின் குற்றச்சாட்டை முன்வைத்துதான் 2023-ல் அ.தி.மு.க வெளியேறியது. இதை பா.ஜ.க தலைமை எப்படிப் பார்க்கிறது?” என்று கேள்வியெழுப்பினார். அதற்குப் பதிலளித்த அமித் ஷா, “இதில் கொஞ்சம் கூட உண்மையில்லை. இன்றும் அண்ணாமலைதான் மாநிலத் தலைவராக இருக்கிறார். அதனால்தான் அவர் என் பக்கத்தில் அமர்ந்திருக்கிறார்” என்று கூறினார்.