‘மாநில சுயாட்சி வேண்டும்’ என்ற உரிமைக் குரல் தமிழ்நாட்டில் இருந்தே முதலில் ஒலிக்கத் தொடங்கியது. அதற்கு அடித்தளமிட்டது பேரறிஞர் அண்ணா.
“அதிகாரங்களின் மேலதிகாரம் அனைத்தும் டெல்லியில் இருப்பதை மாற்றிடத்தான் மாநில சுயாட்சித் தத்துவம் பிறந்தது. மாநில சுயாட்சி என்பது, தேவையின் அடிப்படையில் எழுந்த அரசியல் கோரிக்கையை தவிர; அரசியல் கட்சிக் கோரிக்கை அல்ல”. 1960-களில் அப்போதைய முதல்வர் அண்ணா பேசியது இது. அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு எதிராக இப்படி முழங்கினார் பேரறிஞர் அண்ணா.
மாநிலங்களில் அதிகாரங்களை ஒவ்வொன்றாகப் பறித்து, மாநிலங்களுக்கு அதிகாரம் குவியாமல் பார்த்துக்கொண்டிக்கும் மத்திய அரசிற்கு எதிராக ‘மாநிலத்தில் சுயாட்சி – மத்தியில் கூட்டாட்சி’ என்ற தத்துவத்தை ஓங்கி ஒலித்தார் அண்ணா. அந்தக் குரல்தான் அரை நூற்றாண்டைத் தாண்டி இன்னும் நாடுமுழுவதும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
மத்திய அரசிடம் அதிக அதிகாரம் குவிவதில் இருக்கும் சிக்கல்கள்
இந்திய மாநிலங்கள் அனைத்தும் கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் ஒரே நாடாக ஒருங்கிணைந்திருக்கிறது. மக்களின் தேவைகள், பிரச்னைகள், உரிமைகள், கல்வி, பொருளாதாரம், வரலாறு, கலாசாரம், மொழி உள்ளிட்டவைகளை மக்களுக்கு நெருக்கமாக இருந்து அறிந்து வைத்திருப்பது மாநில அரசுதான். ஆனால் திட்டங்கள் வகுப்பது, சட்டங்கள் இயற்றுவது மற்றும் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட முக்கியமான துறைகளில் மத்திய அரசு அதிக அதிகாரம் செலுத்தியதே ‘மாநில சுயாட்சி’யின் உரிமைக் குரல்கள் வெடிக்கக் காரணமானது. குறிப்பாக கல்வி, சுகாதாரம் உள்ளிட்டவை பொதுப்பட்டியலில் இருந்தாலும் மத்திய அரசின் அதிகாரமே என்றும் மேலோங்கியிருக்கிறது.
“மாநில அரசிற்குரியது கல்விப் பொறுப்பு என்று வரையறுத்த பிறகும், மத்திய அமைச்சர் என்று ஒருவர் இருந்து கொண்டு மேலதிகாரம் செய்கிறார். கல்வித் திட்டங்கள் வகுப்பதற்கு தடையாக இருக்கிறார்”
“நான், அண்மையில் டெல்லி உணவு அமைச்சகத்துடன் தொலைபேசியில் தொடர்புகொண்டேன். உணவு அமைச்சர் ஜெகஜீவன் ராம் ஊரில் இல்லாததால், துணை அமைச்சர் ஷிண்டே என்பவர் பேசினார். கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலையிலிருந்து சர்க்கரையை வெளிக்கொணரும் உத்தரவு டெல்லியிலிருந்து வராததால், பெருத்த நஷ்டம் ஏற்படும் என்ற விஷயத்தை அவருக்குக் கூற முயன்றேன். ‘கள்ளக்குறிச்சி’ என்ற பெயரைப் புரிந்துகொள்ளவே 15 நிமிடமாயிற்று. பெயரைப் புரிந்துகொள்ள முடியாததற்காக அவர்மீது நான் குற்றம்சாட்டவில்லை. சர்க்கரை ஆலை இருப்பதோ தமிழ்நாட்டில். அதைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் டெல்லியில் என்று அதிகாரத்தைப் பிரித்துக் கொடுத்தார்களே… அவர்கள்தான் குற்றவாளிகள்.
சீனாவின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக மத்திய அரசுக்கு வலிவு தேவை என்றால் நிச்சயம் அந்த வலிவைத் தேடித்தரத் தயார். இப்படி கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலையில் இருந்து காட்பாடி சிறுதொழிற்சாலை வரை எல்லா விதமான சிறு விஷயங்களிலும் மத்திய அரசு அதிகாரத்தை அதிக வைத்துக் கொண்டிருப்பதன் விளைவு, நாட்டின் பெரிய விஷயங்களில் கவனம் செலுத்த முடியாமல் போய்விடும். மாநில அரசு செயல்பட முடியாமல் போய்விடும். இதனால் நாட்டிற்கும், மக்களுக்கும்தான் பாதிப்பு. இப்படி மேல் அதிகாரம் அனைத்து டெல்லியில் குவிந்திருப்பதை மாற்றத்தான் மாநில சுயாட்சி தத்துவம் பிறந்துள்ளது”
கல்வி, சுகாதர உணவு துறைகளில் மத்திய அரசு அதிக அதிகாரம் செலுத்துவது மாநில அரசின் செயல்பாட்டை எப்படி பாதிக்கிறது என்று அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பேரறிஞர் அண்ணா முழங்கியது இது. அண்ணாவின் இந்த இரண்டு உரைகளே மாநில சுயாட்சியின் தேவையை எடுத்துரைக்கும்.
பல்வேறு முக்கியத் துறைகளில் மத்திய அரசு அதிக அதிகாரம் செலுத்துவதால் மாநில அரசு சுதந்திரமாக மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தமுடியவில்லை என்று மாநில உரிமைகளுக்கான தேவையை தொடர்ந்து வலியுறுத்தினார் அண்ணா.

மாநில சுயாட்சியில் உறுதி காட்டிய கலைஞர்
பேரறிஞர் அண்ணா அவர்களின் மறைவிற்கு பிறகு, 1969 அன்று முதல் முறையாக தமிழக முதலமைச்சராக பதவியேற்ற மு.கருணாநிதி, மத்திய மற்றும் மாநில அரசுகளின் உறவுகளை பற்றி ஆய்வு செய்ய ஒரு நிபுணர் குழு அமைப்பது பற்றி அதே ஆண்டு சட்டமன்றத்தில் அரசாணை மூலம் அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக, முன்னாள் சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி பி.வி. ராஜமன்னார் தலைமையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவின் முக்கிய நோக்கம் இந்திய அரசியலமைப்பு சட்டங்களை ஆராய்ந்து மாநில சுயாட்சியின் உயிர் நாடியான சட்டமன்றம், நிர்வாகம், நிதி பங்கீடு மற்றும் அதன் கீழ் இயங்கும் நீதித்துறைகளில் மாநில அரசின் உரிமைகளை பெறுவதற்கான நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைப்பது. இந்த நிபுணர் குழு அமைக்கப்பட்டு இரண்டாண்டுக்குள், மே 27,1971 அன்று ராஜமன்னார் கமிட்டி தனது 21 அத்தியாயங்களை கொண்ட அறிக்கையை சமர்ப்பித்தது.
ராஜமன்னார் குழுவின் சில பரிந்துரைகள்
1. அரசியலமைப்புச் சட்டத்தின் 7-ஆவது இணைப்பிலுள்ள அதிகாரப் பட்டியல்களின் பொருளடக்கத்தை மாற்றியமைத்து மாநிலங்களுக்கும் சட்டமியற்றும் அதிகாரத்தை வழங்கவேண்டும். இப்போது நீட் பிரச்னையில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.
2. கார்ப்பரேஷன் வரி, ஏற்றுமதி தீர்வைகள், சுங்க வரிகள் போன்ற வரிகளின் பங்கும் பகிர்வும் மாநிலங்களுக்கு அதிகரித்து வழங்க வேண்டும். மாநிலங்களுக்கு வருவாயை அதிகப்படுத்த வேண்டும். வரி சீர்திருத்தம் வேண்டும் மாநிலங்களுக்கான நியாயமான நிவாரணங்கள், மானியங்கள் குறித்தான உரிமைகளை எந்தச் சிக்கலும் இல்லாமல் தாராளமாக வழங்க வேண்டும்.
3. ஆளுநர், மாநில அரசுகளின் ஆலோசனையைப் பெற்றே நியமிக்கப்பட வேண்டும்.
4. அவசர நிலை பற்றி முடிவெடுக்கும்போது, அந்த நெருக்கடி கால அறிவிப்பைப் பிரகடனப்படுத்தும்போது மாநிலங்களின் இடையேயுள்ள உறவு கவுன்சிலிடம் (Inter State Council) கலந்தாலோசித்து அறிவிக்கப்பட வேண்டும்.

5. நீதித்துறையில் உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும்போது மாநில அரசு, ஆளுநர், உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோரின் கருத்துகள் முக்கியமாகக் கருதப்பட வேண்டும்.
6. மாநிலங்களவையில் அனைத்து மாநிலங்களுக்கும் சமமான எண்ணிக்கையில் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்.
7. மாநிலங்களிடையே உள்ள நீர் தகராறுகளை உச்ச நீதிமன்றம் முடிவுசெய்து அதன் ஆணைகளை உடனடியாக மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்.
8. அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டுமென்றால், மாநிலங்களில் மூன்றில் இருபங்கு மாநில சட்டமன்றங்கள் அதை ஏற்க வேண்டும்.
இப்படி மைய அரசு நிர்வாகம் மற்றும் மாநிலங்களுடைய நீர் பகிர்வு, பொது ஒழுங்கு, வணிகம், மொழி, பொது ஊழியங்கள் பற்றிய பல்வேறு பரிந்துரைகளை ராஜமன்னார் குழு அளித்தது. தமிழக சட்டமன்றத்திலும் இது தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
மாநில முதல்வர்களுக்கு தேசியக்கொடி ஏற்றும் உரிமை
அமெரிக்காவில், சுவிட்சர்லாந்தில், மற்ற ஐரோப்பிய நாடுகளில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனிக்கொடி இருப்பதைப் போன்று இந்தியாவிலும் கொண்டுவர வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்தினார். இது ‘மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி’ என்ற கோட்பாட்டின் அடிப்படையில் உருவானது. இதை அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி மத்திய அரசிடம் முன்மொழிந்தார்.
ஆனால், ‘மாநிலங்களுக்குத் தனிக்கொடி அவசியமில்லை’ என்று ஸ்தாபன காங்கிரஸும், அன்றைய ஜன சங்கமும் (இன்றைய பி.ஜே.பி.) எதிர்த்தது.
இப்பிரச்னையில் தீர்வு எதுவும் எட்டப்படாத நிலையில், ‘அந்தந்த மாநில முதல்வர்கள் சுதந்திர தின விழாவில் தேசியக்கொடியை ஏற்றும் உரிமையை வழங்க வேண்டும்’ என்று வலியுறுத்தினார் கலைஞர். இந்தக் கோரிக்கையைப் பிரதமர் இந்திரா ஏற்றுக்கொண்டார். இந்திய விடுதலை நாளான ஆகஸ்ட் 15-ஆம் தேதி அந்தந்த மாநில முதல்வர்கள் கொடி ஏற்றும் உரிமையை 1974-ஆம் ஆண்டிலேயே கலைஞர் போராடிப் பெற்றார்.

மாநில சுயாட்சியில் ஜெயலலிதாவின் துணிச்சல்
மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில், புது டெல்லியில் நடந்த தேசிய வளர்ச்சி மன்றத்தில் செல்வி ஜெ.ஜெயலலிதா பேசிக்கொண்டிருந்தபோது, அவரைப் பேச்சை நிறுத்துமாறு சொல்லி மணி அடித்தார்கள். அப்போது, ”இது, எனக்கு இழைக்கப்பட்ட அவமானம் அல்ல, 7 கோடி தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அவமானம்” எனச் சொல்லி வெளியேறினார் ஜெயலலிதா.
பொதுத்துறை நிறுவனமான ‘நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன்’ பங்கை 10 சதவிகிதம் விற்பது என மத்திய அரசு முடிவெடுத்த நேரத்தில், ”விற்பது என்றால் அதை வாங்குவதற்கு மாநில அரசு தயார்” எனச் சொல்லி, பொதுத்துறை நிறுவனத்தின் பங்கை மாநில அரசு வாங்கிய அரசியல் வரலாற்றை உருவாக்கினார். “ஒரே வரிவிதிப்பு முறை எனும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு என்பது மாநிலத்துக்கு இழப்பை ஏற்படுத்தும். இதை ஈடுகட்டாமல் அதை ஆதரிப்பதற்கு வாய்ப்பில்லை” எனச்சொல்லி அதைக் கடுமையாக எதிர்த்தார் ஜெயலலிதா. இவை எல்லாம் அவர் மாநில சுயாட்சித் தத்துவத்தில் உறுதியாக இருந்ததையே காட்டியது.
மாநில சுயாட்சியும் ஆளுநர் பதவியும்
மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒரு ஆளுநர் தன்னிச்சையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் எடுக்கும் எந்த முடிவுக்கும் முட்டுக்கட்டை போட முடியாது, அதை அவருக்கு இந்திய அரசியலமைப்பு சட்டமும் வழங்க வில்லை. மாநில அமைச்சரவை முடிவுக்கு எதிராக ஆளுநர் செயல்படுவது கூட்டாட்சிக்கு விரோதமானது. ஆனால், மாநில அரசால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை நீண்டநாள்கள் நிலுவையில் வைப்பது, அரசியலமைப்படி செயல்படாமல், மத்திய அரசிற்கு ஆதராவக செயல்படுவது மாநில அரசின் அதிகாரத்தை அவமதிப்பதாகும்.

ஆளுநர் செய்யும் பணிகளை குடியரசுத் தலைவரோ, அந்த மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியோ அல்லது சட்டமன்ற சபாநாயகரோ மிக சிறப்பாக செய்து முடிக்க முடியும். இதனால் ‘ஆளுநர் பதவி அநாவசியமானது, அது மாநில சுயாட்சிக்கு எதிரானது’ என்ற குரல்களும் மாநில சுயாட்சியின் குரலின் அங்கமாக தொடர்ந்து ஒலித்து வருகிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலினும், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும்
இப்போது தமிழக ஆளுநராக இருக்கும் ஆர்.என்.ரவி, அரசியலைப்பின்படி செயல்படாமல், மத்திய பா.ஜ.க அரசின்படியே செயல்படுகிறார் என்ற மோதல்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே நீண்டநாள்களாகவே புகைந்துகொண்டிருந்தது. இதன் விளைவாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதில்லை என்றும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் விவகாரத்தில் ஆளுநர் இடையூறு செய்வதாகவும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இருமனுக்களை தாக்கல் செய்திருந்தது.
அந்த வழக்கு விசாரணையில் “தமிழ்நாடு அரசின் மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு மாத காலத்துக்குள் ஒப்புதல் தர வேண்டும். ஆளுநருக்கு அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவின் படி சுயேட்சையாக செயல்பட அதிகாரம் உள்ளதா? அல்லது மாநில அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டவரா? என்பது குறித்து முடிவு எடுக்க வேண்டும். மாநில அரசின் ஆலோசனைப்படியே ஆளுநர் செயல்பட வேண்டும்.” என்று அழுத்தமாகத் தீர்ப்பு வழங்கியிருக்கிறது உச்ச நீதிமன்றம். மேலும், உச்ச நீதிமன்றத்திற்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கும் சட்டப்பிரிவு 142-ன் படி தமிழ்நாடு அரசு அனுப்பிய 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்ததுள்ளது உச்ச நீதிமன்றம்.
இதில் பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநரை விடுவிக்க வேண்டும் என்ற மசோதாவுக்கும் உச்ச நீதிமன்றம் ஒப்புதல் வழங்கி உள்ளது. எனவே, வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் விடுவிக்கப்படுகிறார். இனி தமிழ்நாடு அரசு யாரை முன்மொழிகிறதோ அவர்தான் வேந்தராக இருப்பார். இது மாநில சுயாட்சிக்குக் கிடைத்த வெற்றியாக வரலாற்றில் இடம்பிடித்த மாநில உரிமைகளைக் காக்கும் முக்கியக் தீர்ப்பாக அமைந்தது.
அன்று மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மாநில சுயாட்சிக்கு எதிராக செயல்பட்டது. இன்று ஆட்சியில் இருக்கும் பாஜகவும் அதைவிடவும் பல மடங்கு மேலே சென்று மாநில சுயாட்சிக் எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அன்று முதல் இன்று வரை இந்தியாவிற்கே வழிகாட்டியாக மாநில சுயாட்சி, மத்திய கூட்டாட்சி தத்துவத்தை நிலைநாட்ட அரை நூற்றாண்டுகளுக்கும் முன்களத்தில் நின்று போராடும் தமிழ்நாட்டின் வரலாறு தொடர்ந்து கொண்டிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs